November 26, 2024
  • November 26, 2024
Breaking News
November 23, 2024

பராரி திரைப்பட விமர்சனம்

By 0 40 Views

சாதிய வன்கொடுமைகளைச் சொல்லிப் பல படங்கள் வந்திருந்தாலும், இன, மொழி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு நிலைகள் சொந்த மாநிலத்தில் எப்படி உள்ளது, அதே பிரச்சினைகளை வெளி மாநிலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதையும் தாண்டி இந்திய அளவில் அதன் நிலை என்ன என்பதை அலசி வெளிவந்திருக்கும் முதல் படம் இது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். சாதிதான் வேறே தவிர இருவருக்கும் மூலத்தொழில், கூலித் தொழில்தான்.

உள்ளூரில் வேலை இல்லாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். இங்கு வேறுபட்டுக் கிடந்தாலும் வேறு இடத்துக்கு செல்லும்போது இருவரின் நிலையும் ஒன்றுதான்.

பொதுவாக தமிழர்கள் என்ற அளவில் இரண்டு பிரிவினரும் வெளி மாநிலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சொல்லி, வெளியே போனால் இருவரும் ஒரே நிலையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்க, இங்கே ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை முன் நிறுத்தி இருக்கும் படம்தான் இது.

அப்பாவி கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஹரிசங்கரின் நடிப்பு அதை நடிப்பன்றே சொல்ல முடியாத அளவில் இருக்கிறது. அத்துடன் அதற்காக உடலையும் வருத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

தனக்குப் பிரச்சினை என்றால்தான் அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதைத் தாண்டி, தன் ஊரைச் சேர்ந்த பெண்ணிற்கு ஏற்படும் அநீதிக்கு எதிராகப் பொங்கும் போதும் பாராட்ட வைக்கிறார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் நடிப்புத் திறமையை அழுத்தமாகப் பதித்து விடுகிறார்.

நாயகி சங்கீதா கல்யாணும் அப்படியே. பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், வலிமையான நடிப்பில் கவனம் கவர்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரனும்  மற்ற பாத்திரங்களில் வரும் பிரேம்நாத்.வி, சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன், ராஜு, பிரேம்நாத் உள்ளிட்டு அனைத்து நடிகர்களும்  கதாபாத்திரங்களாகவே நம்ப வைக்கிறார்கள்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இயல்பான மனிதர்களின் வாழ்க்கையை நமக்குள் எளிதாகக் கடத்த உதவியிருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி தன் முதல் படத்தின் மூலம் சாதிய அரசியலால் ஆதாயம் பெறுபவர்களுக்கு எதிராக ‘பெரிய வெடி’ ஒன்றையே போட்டு இருக்கிறார்.

இருந்தாலும் தன் கருத்தை நியாயப்படுத்துவதற்காக முன் பாதியில் சாதிய கொடுமைகளை இயல்புக்கு மீறி திணித்தது போல் தோன்றுகிறது.

மற்றபடி கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் நம் அனைவரின் இதயங்களையும் கனக்கச் செய்துவிடுகிறார்.

பராரி – சாதி அரசியலுக்கு சவுக்கடி..!