ஒன்றுக்கும் உதவாத கதையை குப்பைக்கதை என்பார்கள். ஆனால், அதையே தலைப்பில் வைத்ததற்கு இயக்குநர் காளி ரங்கசாமிக்கு அபார தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்தக் கதையின் மேல் அவருக்கு இருக்கும் அசராத நம்பிக்கைதான் அந்த தைரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது.
அப்படி என்ன கதை..?
சென்னையின் குப்பத்தில் தாயுடன் வசிக்கும் துப்புறவுத் தொழிலாளராக இருக்கும் தினேஷுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவரது பணியைக் காரணம் காட்டியே பெண் அமையாமல் போக, வெளியூரில் மனீஷா யாதவைப் பார்த்துப் பேசி முடிக்கிறார்கள். ஆனால், தினேஷ் ஒரு துப்புறவுத் தொழிலாளி என்பதை மறைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு மனீஷாவுக்கு குப்பை என்றாலே குமட்டிக்கொண்டு வர, சென்னையில் வந்து விஷயம் தெரிந்துகொண்ட மனீஷா என்னென்ன முடிவுகள் எடுத்தார்..? அது அவரை எங்கே கொண்டுபோய் விட்டது என்கிற கதை.
ஆட வராத பல ஹீரோக்களை ஆட்டிவைத்த முன்னணி நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர், இந்தப் படத்தின் ஹீரோவாகியிருக்கிறார். அவரது உருவத்துக்கும், அப்பாவி தோற்றத்துக்கும் ஏற்ற பொருத்தமான வேடம் என்பதால் அவர் ஹீரோவானது குறித்து யாரும் தவறாக சுட்டிப் பேச முடியாது.
அந்தக் கேரக்டரின் ஆழத்தைப் புரிந்துகொண்டு அவரும் வரிந்து கட்டிக்கொண்டு நடிக்காமல் இயல்பாகவே நடித்து தன் கேரக்டரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். மனைவியின் மகிழ்ச்சிக்காக ஆனவரை வாழ்க்கையை மாற்றிக்கொண்டும் மனைவி எடுத்த கொடுமையான முடிவில் உடையும்போதாகட்டும், கடைசியில் மனைவிக்காக இவர் ஒரு முடிவு எடுக்கும்போதாக்கட்டும் ‘அன்டர்பிளே’வில் அடக்கி, மனத்தில் நிறைகிறார்,
ஆனால், அவர் ஆட்டத்திலும் அடக்கியே வாசித்திருப்பது சின்ன குறை. (போட்டிருக்க வேண்டாமா மாஸ்டர் ஒரு பெருங்குத்து..?
மனிஷா யாதவுக்கும் கள்ளமில்லாத முகம். அதனாலேயே அவர் தெரிந்தே தப்பு செய்யும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறதே தவிர, கோபம் வரவில்லை. ஆடம்பரமான வாழ்வுக்கு ஆசைப்பட்டு அந்தத் தவற்றை உணர்ந்த கணத்தில் களங்கம் தீர்ந்தவராகிறார். இதுவரை தான் வெறுத்த குப்பத்திலும், குப்பை வாழ்விலும்தான் நிம்மதி இருக்கிறது என்று அவர் புரிந்துகொள்வது கொஞ்சம் நாடகத்தனம் ஆனாலும், நாட்டுக்கு நல்ல செய்தி.
யோகிபாபு என்ற அட்டகாச காமெடியனை வைத்துக்கொண்டு படம் முழுதும் நம்மைச் சிரிக்கவே விடாமல் வைத்திருந்த குற்றத்துக்கு இயக்குநருக்கு என்ன தண்டனை தரலாம்..?
தினேஷின் அம்மாவாக வரும் ஆதிராவின் நடிப்பு அருமை. அதேபோல் மனீஷாவின் அப்பாவாக வரும் ஜார்ஜும் தன் அனுபவ நடிப்பைப் பதிவு செய்கிறார்.
மனீஷாவின் மனம் கவரும் ஆணழகன் தமிழ் சினிமாவுக்குப் புது வரவு. இனி வரும் படங்களுக்கு அவர் ஹீரோயினின் வெளிநாட்டு மாப்பிள்ளையாகி ஹீரோவிடம் கிளைமாக்ஸில் மூக்குடைபடுவதற்கு வாழ்த்துகள்..!
படத்தின் கடைசி இருபது நிமிடம் பரபரப்பு நிறைந்தது. மனீஷா எடுத்த முடிவு தவறானதாக இருந்தாலும் அதிலும் அவர் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன், தன் கணவனின் நிலையையும் சீர்தூக்கிப் பார்ப்பது கண்ணியத்துடன் இருக்கிறது. அது போலவேதான் தினேஷின் செயல்பாடுகளும்.
குப்பைமேடுகளையும் குளிர்ச்சியாகக் காட்டுகிறது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையும் இதம்..!
துப்புறவாளர்களிலும் பெண்கள் இருக்க, அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள தினேஷுக்கு ஏன் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியக் கேள்வி. இவரே அவர்களை நிராகரித்தால் அந்தப் பெண்களுக்கு எப்படி மாப்பிளைகள் கிடைப்பார்கள்..? அதேபோல் மனீஷாவின் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வருவதாக தரகர் சொல்ல, அப்படி அவரிடம் என்ன குறை என்பது விளக்கப்படவே இல்லை. இந்த நல்ல படத்தில் இது போன்ற லாஜிக்குகளையும் கவனித்துச் சரி செய்திருக்க வேண்டும்.
‘தவறு செய்வது மனிதம் – அதை மன்னிப்பது புனிதம்’ என்கிற செய்தி குப்பை மேட்டை கோபுரமாகக் கும்பிட வைக்கிறது..!