இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து ஊரடங்கை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்கில் பொருளாதார சுழற்சி பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது.
புதிய திட்டத்தின்படி நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். சில விதிவிலக்குகளுடன் சிறு, குறுந்தொழில்கள், மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. சிவப்பு மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் போக்குவரத்து, கடைகள் திறப்பு, தொழிற்சாலை இயக்குதல், சிறு,குறுந்தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு அனைத்துக்கும் தடை இருக்கும்.
ஆரஞ்சு மண்டலத்தில் குறைந்த அளவுக்கு பொதுப்போக்குவரத்து, விவசாயப்பணிகள், சிறு,குறுந்தொழில்கள் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
பச்சை மண்டலத்தில் அனைத்து விதமான போக்குவரத்து, கடைகள் திறப்பு, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு, சிறு, குறுந்தொழில்கள் செயல்பாடு ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும். ரெஸ்டாரண்ட், உணவகங்கள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதியில்லை.