May 12, 2021
  • May 12, 2021
Breaking News
April 4, 2019

நட்பே துணை திரைப்பட விமர்சனம்

By 0 655 Views

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது.

நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல் ஐட்டங்களை இடைச்செருகலாக வைத்து படத்தை வணிக ரீதியில் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு.

காரைக்காலில் நடக்கும் கதையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கும் ஆதி, நாயகி அனகாவைப் பார்த்துக் காதல் கொள்கிறார். அனகா ஹாக்கி வீராங்கனையாக இருக்க, அவரது காதலை அடைய இவரும் ஹாக்கி மைதானத்துக்குள் பிரவேசிக்கிறார்.

இன்னொரு பக்கம் வட இந்திய கார்ப்பரேட் கம்பெனி ஒன்று மருந்துக் கம்பெனி ஆரம்பிக்கத் திட்டமிடுகிறது. கழிவுகளைக் கடலில் கொண்டு சேர்க்க காரைக்கால் சரியான களமாக இருக்க, அந்த ஹாக்கி மைதானத்தைக் குறி வைக்கிறார்கள். அதைக் கையகப்படுத்த விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கரு.பழனியப்பனை அணுகுகிறார்கள். அந்தத் திட்டம் முடிந்ததா, அதற்குள் நாயகன் ஆதி எப்படி வருகிறார் என்பது மீதிக் கதை.

விளையாட்டாக நகரும் முதல்பாதிக்கதை (ஹாக்கி) விளையாட்டு உள்ளே வந்ததும் சீரியஸாகி விடுகிறது. பின்பாதிக் கதையை முக்கால்வாசி ஹாக்கி விளையாட்டே ஆக்கிரமிக்கிறது.

ஆதியின் உடல்மொழியும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நடிப்பும் அவரது கேரக்டருக்குத் தோதாக அமைகிறது. வழக்கமான காதல் கதையாகத் தொடங்கித் தொடரும் கதையில் ஆதியின் கேரக்டர் முக்கியத்துவம் பெறும் இடம் ரசிக்க வைக்கிறது.

ஹாக்கி விளையாட்டை முறையாகக் கற்று விளையாடியிருப்பது ஆதியின் முனைப்பைப் பாராட்ட வைக்கிறது. அத்துடன் அவரை ‘கேப்டன் பிரபாகரனா’க்கியிருப்பதும் ரசிக்க வைக்கும் உத்தி.

விளையாட்டு வீராங்கனையாக வருவதால் துடிப்பான அனகா அதற்குச் சரியாகப் பொருந்துகிறார். ஏற்கனவே நாம் பார்த்திருக்கும் சில நடிகைகளின் சாயலில் இருப்பதால் நமக்குப் பழகிய முகம் போலவே தோற்றமளிக்கிறார் அனகா. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழில் முன்னணி பெறலாம்.

ஆதியே சமூக வலை தளங்கள் மூலம் ஹிட்டானவர் என்பதால் மக்களைச் சென்றுசேர அதுதான் சிறந்த வழி என்று நினைத்து விட்டார்கள் போல. படம் நெடுக, சமூக வலைதளங்களில் அறிமுகமானவர்களாகவே கடக்கிறார்கள். அதில் முதன்மையானவர் இயக்குநர் கரு. பழனியப்பன். தன் காட்டமான அரசியல் பேச்சுகள் மூலம் சமூகத்தின் கவனம் கவர்ந்த இவர், இதில் விளையாட்டுத் துறை அமைச்சராகி வில்லனாகியிருக்கிறார்.

ஆனாலும், தன் தமிழ் கெடாமல் இந்தியில் பேசும் கார்ப்பரேட் கம்பெனிக்காரரிடம் திருக்குறள் சொல்லி தெறிக்க விடுவது அழகு. அதேபோல் இறுதியில் “காசு வாங்காம நீங்க எந்த நல்லவங்களுக்கு போட்டு போட்டீங்க..?” என்று அவர் கேட்பது ஒட்டுமொத்த வாக்காளர்களுக்கும் முன்வைக்கப்படும் சமூக அக்கறையுள்ள கேள்வி.

அவரைத் தொடர்ந்து ‘புட் சட்னி’ ராஜ்மோகன், ஆர் ஜே விக்னேஷ், ‘எரும சாணி’ விஜய் என்று சின்னதிரைகளில் பார்த்தவர்கள் இதில் பெரிய திரையை நிறைத்திருக்கிறார்கள்.

வழக்கமாக வில்லனாக வரும் ‘ஹரீஷ் உத்தமன்’ இதில் உத்தம கோச்சாக வருவது பெரிய ஆறுதல். கண்களில் வில்லத்தனத்தைக் குறைத்து நல்லவராகவே தெரிவது அவரது நடிப்பின் பலம். நல்லவராக வந்தாலும் அவர் முகம் அதற்கு ஒத்துழைப்பதில் அனைத்து குணச்சித்திர வேடங்களுக்கும் அவரை ஒப்பந்தம் செய்யலாம்.

பாண்டியராஜன், கௌசல்யா சின்ன வேடங்களில் வருகிறார்கள்.

இசையை ஆதியே எடுத்துக்கொண்டதால் படம் வருவதற்கு முன்னரே பாடல்கள் ஹிட்டடித்து விட்டன. தன் காதலி மலையாளி என்று தெரிந்ததும் என் ஸ்டேட் கேரளா, என் சிஎம் விஜயன், என் ஆட்டம் கதகளி என்று ஆதி பாடும் பாடல் செம லந்து. அப்படியே பாடல் வரிகளில் தற்போதைய டிரெண்டிங்கில் உள்ளவை பாடல் பொருளானதும் ‘பலே..!’

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்குக்கு ஏகப்பட்ட வேலை – குறிப்பாக கிளைமாக்ஸ் போட்டியில். வழக்கமான விளையாட்டுக் கதைகளின் டெம்ப்ளேட்தான் இதிலும் என்றாலும் கிளைமாக்ஸில் த்ரில் ஏற்றியிருப்பதில், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளருக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

கொஞ்சம் மெதுவாக நகரும் முன்பாதியை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் பரபரப்பான இரண்டாம் பாதி அதை சமன் செய்து விடுகிறது.

நட்பே துணை – விளையாட்டாக ஜெயித்திருக்கிறார்கள்..!