தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.
சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே என்கிற கவனத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.
இது சோஷியல் மீடியா யுகம் என்பதால், ட்ராவல், ஃபுட்டி வீடியோக்களைப் போன்று ஆபத்தான பகுதிகளுக்கு சென்று உண்மை நிலையை கண்டறியும் அடவெஞ்ச்சர் வீடியோக்களும் பரபரப்பாக இருக்கின்றன.
அந்த வகையில் இரண்டு இளைஞர்கள் இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட நால்வர் குழு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்துள்ள காத்தூர் என்கிற காட்டுப்பகுதிக்குச் செல்கிறது.
அந்த மலை கிராமத்துக் காட்டுக்குள் சப்த கன்னிகள் பௌர்ணமி அன்று வந்து குளித்துவிட்டு செல்வதாக நம்பப்படுகிறது. அவர்களுக்கு முறைப்படி கிராமத்தினர் செய்யும் பூஜைகள், அங்கே வந்த மங்கை என்கிற சூனியக்காரியால் தடைப்பட்டுப் போகிறது.
கிராமத்துக் குழந்தைகளைக் கூறு போட்டுக் கொன்ற அந்த சூனியக்காரியை கிராமமே சேர்ந்து மூட்டையாகக் கட்டிக் கொல்கிறது. அந்த மங்கையின் ஆவி காட்டுக்குள் சுற்றித் திரிந்து யாரும் சப்த கன்னிகளுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்யவிடாமல் தடுக்கிறது.
இது உண்மையா, வெறும் கட்டுக்கதையா என்று தெரிந்து கொள்ள இரண்டு கேமராக்கள் சகிதம் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் இந்த நால்வரும் காட்டுக்குள் செல்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்ட கிராமத்து இளம் பெண்ணாக வரும் யுவிகா ராஜேந்திரனும் இணைகிறார்.
இதுபோன்று பல படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அந்தப் படங்களில் இருந்து இதனை வித்தியாசப்படுத்திக் காட்டும் அம்சமே, அவர்கள் கொண்டு செல்லும் இரண்டு கேமராக்களில் பதிவான காட்சிகளை மட்டும் தான் நாம் காண முடியும் என்பது.
எனவே, ஒரு முழு நீளப் படத்தை இரண்டு கேமராக்களில் பதிவான கோணங்களில் மட்டுமே சலிப்பு இன்றி தருவது என்பது மிகப்பெரிய சவால்தான். எங்காவது அதில் இடறி விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் மிகத் திறமையாக அதனைக் கையாண்டு எடுத்துக்கொண்ட சவாலில் வெற்றி தேடித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ். நியாயப்படி இந்தப் படத்தின் கதாநாயகன் அவர்தான்.
அவருக்கு உறுதுணையாக நின்று படத்தொகுப்பை மேற்கொண்டு இருக்கும் ரோஹித்தின் உழைப்புக்கும் பாராட்டுகள்.
அதேபோல் இது போன்ற ஹாரர் – திரில்லர் வகைப் படங்களில் நம்மை பயமுறுத்த இசை பெரிய அளவில் உதவும். ஆனால் இதில் இசையமைப்பாளரே இல்லை என்பது அதைவிடப் பெரிய ஆச்சரியம்.
படமாக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும் லைவ் சவுண்டுகளையே கொஞ்சம், கூடக் குறைய மாற்றி நம்மை பயமுறுத்தி இருக்கிறார்கள். இதுவும் தமிழ் பட உலகைப் பொறுத்தவரையில் ஒரு அரிய முயற்சிதான்.
அப்படிப்பட்ட விசேஷ சப்தங்களை நமக்குக் கொடுத்து திகிலடைய வைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர் கேவ்யின் பிரெடெரிக்.
இது நடிகர் நடிகைகளை நம்பி இருக்கும் வழக்கமான படமாக இல்லாமல் வித்தியாசமான தொழில்நுட்ப முயற்சி என்பதால் வழக்கமான விமர்சனங்களில் இருந்து வித்தியாசப்பட்டு தொழில்நுட்பக் கலைஞர்களை முதலில் பாராட்டி விட்டுதான், நடிகர் நடிகையர் பக்கம் வர முடியும்.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் என்கிற நால்வரில் ரிச்சி கபூர் பேசும் ப்ரோக்கன் தமிழ் படத்தில் காமெடியன் இல்லாத குறையைப் போக்குகிறது.
அதேபோல் பல கோணங்கள் கிடைக்காத இந்த ஃபுட்டேஜில் நம்மை போர் அடிக்க விடாமலும், கண்களை அப்படி இப்படி நகர்த்த விடாமலும் பார்த்துக் கொள்கிறது அரியா செல்வராஜின் அழகும், இளமையும்.
அதற்கேற்றாற்போல் முன்பாதிப் படம் முழுவதும் அவர் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு சிக்கென்று வருவது சிறப்பான செய்கை.
அடுத்த நாள் விடிந்ததும் உடை மாற்றிக் கொள்ள வேண்டுமே..? அப்போதும் அப்படியே வருவாரா என்று கண்ணை இமைக்காமல் பார்த்தால் முழு பேண்ட் அணிந்து கொள்கிறார் அரியா.
ஆனால், நம்மை ஏமாற்ற விரும்பாமல் சுகன்யா சண்முகம் அரைக்கால் சட்டை அணிந்து கொள்கிறார். காஸ்ட்யூமர் பிரகாஷ் ராமச்சந்திரனின் ரசனையே ரசனை..!
அதிலும் இசகுபிசகாக பளபளக்கும் அரியாவின் இடையைப் பார்த்து கிளர்ச்சி ஏறும் தேவராஜ் அவரை முத்தமிட முயற்சிப்பதும் அரியா அதில் கோபம் கொள்வதும், “அவள் அப்படித்தான்… நீ வா ராஜா… ஐ யம் வெயிட்டிங்..!” என்று சுகன்யா அவரை அ(ரவ)ணைப்பதும்…
இந்த அழகுப் பிசாசுகளுக்காக எத்தனை பேயையும் ஒரு இளைஞன் சந்திக்கலாம்.
மேற்படி நால்வருமே அதி தைரியசாலிகள் போல் பேசிக்கொண்டு காட்டுக்குள் செல்வதும், ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் பயம் கொள்வதும் முரணாக இருக்கிறது.
ஆனால் அடர் வனத்துக்குள் இரவில் ஓஜா போர்டை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உட்காரும்போது நம் நெஞ்சுக்குள் உண்மையிலேயே பந்து உருளுகிறது.
அதிலும், இவர்கள் தெரிந்தே ஆபத்தை எதிர்கொண்டு வந்தாலும் அந்த நம்பிக்கைகளைப் பற்றி நன்றாக அறிந்த யுவிகா ராஜேந்திரனை பிரச்சனைக்குள் சிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் போது நமக்கே யுவிகா மேல் பரிதாபம் வந்துவிடுகிறது.
ரத்த வாடை வந்தால் மட்டுமே மங்கையின் ஆவி வரும் என்கிற நிலையில் ஒவ்வொருவரும் எப்படி ரத்த வாடை கொள்கிறார்கள் என்பதற்கான லாஜிக்குகள் நன்று.
சில ஷாட்டுகள் பல நிமிடங்களுக்கு அப்படியே உறைந்து போய் நிற்பது நம்முடைய பொறுமையை சோதிப்பதாக இருந்தாலும் படத்தின் தன்மையுடன் ஒன்றி, பார்த்தால் அந்த ஷாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
கண்டிப்பாக ஹாரர் வகைப் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் நமக்குத் தருகிறது. அதைத் தந்த படக் குழுவினரின் திறமைக்கு வாழ்த்துக்கள். அந்த அனுபவத்துக்கு தியேட்டர் மட்டுமே சிறந்த வழி.
தயாரிப்பாளரின் பர்ஸைப் பதம் பார்க்காமல் பயத்தை மூலதனம் ஆக்கி, நம் பல்ஸைப் பதம் பார்த்திருக்கும் இயக்குனர் ஹேம்நாத் நாராயணனுக்கு வாழ்த்துகள்..!
அது சரி… மர்மர் என்றால்… முணு முணுப்புதான் – அதிலும், ஆவியின் முணு முணுப்பு..!
ஆனால் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பதை முணுமுணுப்பாக இல்லாமல் சத்தமாகவே சொல்லலாம்..!
மர்மர் – ‘ஆவி’ பறக்கும்… ஹாட் பர்கர்..!
– வேணுஜி