96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம்.
இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது ஓரிரவில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்தான் படம்.
ஒரே ஒரு வித்தியாசம் முன்னதில் காதல். இதில் உறவுமுறை.
96 படத்தில் காதல் அடிநாதம் என்பதால் ஒரு நாயகனும் நாயகியும் சில வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்ளும்போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கதை ஆனது. இதில் 20 வருடங்களுக்கு முன்னர் ஊரை விட்டு குடும்பத்துடன் சென்ற அரவிந்த்சாமி மீண்டும் தன் தங்கை முறை கொண்ட பெண்ணின் திருமணத்துக்காக சொந்த ஊர் வரும்போது உறவினர் கார்த்தியை சந்திக்க நேர்கிறது.
தன் இதயத்தைப் பிழிந்து அரவிந்த்சாமியின் மனதை அன்பால் நிரப்பும் கார்த்தி யார் என்பது கடைசி வரை அரவிந்த்சாமிக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால், தன் மீது இப்படி அன்பைப் பொழியும் கார்த்தியிடம் அதைக் கேட்டால் அவர் மனது சங்கடப்படுமே என்று அவரும் கேட்காமலேயே கிளம்பி விடுகிறார். அதன் நீட்சியாக இன்னொரு நாள் கிளைமாக்ஸ் மட்டும் நடைபெறுகிறது.
அரவிந்த்சாமி, கார்த்தி இருவரில் யார் முதல் ஹீரோ, யார் இரண்டாம் ஹீரோ என் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு அற்புதமான பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது.
“அத்தான்… அத்தான்…” என்று அன்பைப் பொழிந்து பலாச்சுளையின் மீதான தேனீயின் ஈர்ப்பு போல் இரவெல்லாம் அரவிந்தசாமியைத் தொடரும் கார்த்தியின் உரையாடல்கள் இயல்பாக ஆரம்பித்து போகப்போக அது மன்னர் காலம் தொட்டு இன்றைக்கு வரை தமிழ் மண்ணின் பெருமை சொல்லி நிற்பது ஒரு புதினம் தரும் புனிதம்.
தன் லாவகமான நடிப்பில் இப்படி ஒரு உறவுக்காரன் நமக்கு வாய்க்க மாட்டானா என்று ஏங்க வைத்து விடுகிறார் கார்த்தி.
ஆரம்பத்தில் அசுவாரசியமாக கார்த்தியின் தொடர்பை எடுத்துக் கொண்டாலும் போகப்போக இரவெல்லாம் அவர் பேசுவதைக் கண் கொட்டாமல் பார்த்து அதிகாலையில் அந்த அன்பில் நனைந்து அழுது கொண்டே கிளம்பும் அரவிந்தசாமியின் நடிப்பு… அட்டகாசம் சாமி..!
இந்த இரு ஆண்களே திரை முழுவதும் ஆக்கிரமித்து இருக்க, பேருக்கு கார்த்தியின் மனைவியாக ஸ்ரீ திவ்யாவும், அரவிந்தசாமியின் மனைவியாக தேவதர்ஷினியும் வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்லாமல் ராஜ்கிரண், இளவரசு மற்றும் ஜெயப்பிரகாஷுக்கம் இரண்டொரு காட்சிகள்தான் என்றாலும் அதுவே நிறைவாக இருக்கிறது.
மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு இரவை நிலவாகவும், பகலை கதிரவனாகவும் கடந்திருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசை இன்னொரு முறை நம் உணர்வுகளை வருடுகிறது. அதிலும் கமல் பாடும் “யாரோ..!” பாடல் நம் இதயத்தை மயிலிறகால் வருடும் சுகம் தருகிறது.
இயக்குனரின் எழுத்துக்கு மதிப்பளித்து படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், காட்சிகளின் நீட்சியை அப்படி அப்படியே கத்தரிக்காமல் விட்டிருக்கிறார்.
இயக்குநர் சி.பிரேம்குமார் இழந்து போன நம் உறவுகளை நினைக்க வைத்து இன்னொரு முறை ஜெயித்திருக்கிறார்.
வழக்கொழிந்து போன ராலி சைக்கிளை வைத்து இதனை ரகளையான காட்சிகளை உருவாகி இருக்கும் அவரது ரசனை ‘பலே..!’
நீளம் படத்தின் குறைதான் என்பதுடன் அந்த ஜல்லிக்கட்டுக் காளை பற்றிய விவரணை டாகுமென்டரி படம் போல் நீள்வதையும் குறைத்து இருக்க முடியும்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் இப்படியான கதை சொல்லல் இதுவரை நிகழ்ந்ததில்லை என்ற அளவில் வித்தியாசப்பட்டு இருக்கிறது உறவுகளை தாங்கிப் பிடிக்கும் இந்தப் படம்.
ஆனால் படத்தின் தேடலே கார்த்தியின் பெயர் என்ன என்பதாக இருக்க, அதைத் தலைப்பிலேயே உடைத்து ஸ்பாய்லர் ஆக்கியிருப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பது புரியவில்லை.
மெய்யழகர்’கள்..!’
– வேணுஜி