October 10, 2024
  • October 10, 2024
Breaking News
September 28, 2024

ஹிட்லர் திரைப்பட விமர்சனம்

By 0 38 Views

ஹிட்லர் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வந்தாயிற்று. தமிழிலும் கூட ஒரு முறை வந்த நிலையில் மீண்டும் அதே தலைப்பில் படம் எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும், ஹீரோவையும் என்னவென்று சொல்ல..?

பணக்காரர்களிடம் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் பழசிலும் பழைய ராபின்ஹூட் கதைதான். அதை புதிதாகவாவது சொன்னார்களா என்றால் அப்படியும் இல்லை. உலகறிந்த திரைக்கதை தான். 

மதுரையில் இருந்து வேலைக்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி முதல் வேலையாக செய்வது ரியா சுமனைப் பார்த்துக் காதலிப்பதுதான். முன் பாதி கதை முழுவதும் இந்த காதல், மோதல், ஊடல், கூடலிலேயே போய்க் கொண்டிருக்க, இடையில் அமைச்சர் ஒருவர் தேர்தலுக்காக செலவிட வைத்திருந்த 400 கோடி ரூபாயை யாரோ ஆட்டையைப் போடுகிறார்கள். அது யார் என்று வேறு சொல்ல வேண்டுமா..?

கடைசியில் எதற்காக அந்த பணத்தை ஆட்டையை போட்டார் (கள்) என்றால் அதைவிடக் காமெடியான விஷயம் அது.

சிறந்த கதைகளைத் தேர்வு செய்பவர் என்று விஜய் ஆண்டனிக்குப் பெயர். ஆனால் அவர் தேர்வு செய்தவற்றில் ஒன்று இரண்டு தவிர எல்லாமே தட்டைக் கதைகள்தான். இதுவும் அந்த ரகம்தான்.

நடிப்பில் பெரிய வித்தியாசத்தை காட்ட முடியாத விஜய் ஆண்டனி, தோற்றத்தை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி காட்டிக் கொண்டிருக்கிறார். இதில் காதல், ஆக்ஷன் என்று இன்னும் ஒரு படி முன்னேறி தன்னை ஒரு கமர்சியல் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார். 

ரியா சுமனுடைய கேரக்டரைசேஷன் என்னவென்று புரியாமல் ஒரே குழப்படியாகப் போய் கடைசியில் விஜய் ஆண்டனியைக் காதலிப்பதில் நிற்கிறது. 

ரெடின் கிங்ஸ்லியை காமெடியனாக போட்டு இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியைக் கையும் களவுமாகப் பிடிக்க, ரெடின் அறையில் போலீசார் கேமராவைப் பொருத்தி விட்டுச் செல்ல, அங்கு நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ரெடின் கேமராவைப் பார்த்துப் பேசும் காட்சிகளில் கொஞ்சம் சிரிப்பு வருகிறது.

ஆனால், விஜய் ஆண்டனியைப் பிடிக்க முயலும் காவல் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்கும் முயற்சிகள் அதைவிட சிரிப்பை வரவழைக்கின்றன. 

சற்று வித்தியாசமான கெட்டப்பில் வந்திருக்கிறார் வில்லன் சரண்ராஜ். ஆனால் கெட்டப்தான் வித்தியாசமே தவிர வில்லத்தனத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. 

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எல்லா ஏரியாவிலும் படு நேர்த்தியான படமாக அமைந்திருப்பது இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்களில் ஒன்று. 

ஆனால் கதையைக் கோட்டை விட்டதில் பின்தங்கி விட்டது ஹிட்லர்.

அது சரி… இந்தப் படத்துக்கும் ஹிட்லர் என்ற தலைப்புக்கும் என்னதான் சம்பந்தம் என்று மண்டையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்காக ஒரு தகவல்…

1935 ல் ரீஜன்ஸ்பர்க் நகரில் அடால்ப் ஹிட்லர் ஒரு பாலத்தைக் கட்டி இருக்கிறார். இதிலும் விஜய் ஆண்டனி ஒரு பாலத்தை கட்டுவதோடு படம் முடிகிறது. அதற்கும், இந்தக் கதைக்கும் எப்படிப் பாலம் போடுகிறார் இயக்குனர் என்பது புரியாத புதிர்.

நல்லவேளை..  இப்போது இதையெல்லாம் பார்க்க ஹிட்லர் உயிரோடு இல்லை..! 

 

 

 

Regensburg