வரும் படங்கள் எல்லாம் ரத்தம் தெறிக்கும் கொடூரத்தை குடும்பங்களுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்க, குழந்தைகளுடன் உட்கார்ந்து சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏதுவான படங்கள் பெரும்பாலும் வருவதில்லை.
இந்தக் குறையை தீர்க்க வந்திருக்கிறது இந்தப் படம்.
பொதுவாக 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்று இதனைச் சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக மரகத மலையின் கீழே வசித்து வரும் ஜமீன் குடும்பம், தங்க வைர வைடூரிய புதையலை ஒரு ரகசிய இடத்தில் வைத்து காத்து வருகிறார்கள்.
அது அவர்களுக்காக அல்ல – எதிர்காலத்தில் மக்கள் வறட்சியில் பாதிக்கப்படும்போது அவை பயன்படட்டும் என்பதற்காகத்தான். அந்தப் புதையலை கொள்ளையடிப்பதற்கு கொள்ளையர்களும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
அப்படி மக்களுக்கு நல்லது செய்யும் ஜமீனான சந்தோஷ பிரதாப் காலத்தில் அதே போன்று ஒரு கொள்ளை கூட்டம் அவரிடம் இருக்கும் மரகதமலை ரகசிய வழியை அறிய தாக்குதல் நடத்துகிறார்கள்.
அதனால் அந்தப் புதையல் பற்றிய ரகசிய வழி வரைபடத்தை மனைவியிடம் கொடுத்து, மனைவியையும் மகனையும் காட்டுக்குள் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு அனுப்பி விடும் ஜமீன் சந்தோஷ பிரதாப் கொள்ளையர்களுடன் சண்டை இட்டு அவர்களை விரட்டுகிறார்.
காட்டுக்குள் தனிமைப்பட்ட தாயும் மகனும் புலியிடமிருந்து தப்பிக்க பிரிகிறார்கள். பிரிந்த தாய் ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகி சிலையாகி விட, மகன் என்ன ஆனான்… மனைவியையும், மகனையும் தேடிக்கொண்டு வரும் ஜமீன் நிலை என்ன என்பதையெல்லாம் அம்புலி மாமா கதை படிப்பதை போன்ற சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.லதா.
இந்த வாரத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு இரண்டு படங்கள் வெளியாகி இருப்பதில் அவர் சந்தோஷ பிரதாப் ஆகலாம். ஊருக்கு உபகாரம் செய்யும் நல்ல ஜமீன் என்கிற அளவில் அவரது முகமும், தோற்றமும் ஒத்துழைக்கிறது.
நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் அதை தவறவிடவில்லை.
அவரது மனைவியாக வரும் தீப்ஷிகா கொள்ளை அழகு. பிரேமில் அவரைப் பார்க்க கண்கள் இரண்டு போதாது என்று இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் சிலையாக மாறி விட, இருந்த சுவாரஸ்யம் பறிபோயிற்றே என்று பார்த்தால் அதை ஈடுகட்ட, காட்டுக்குள் வசிக்கும் பூதப் பெண், தீப்ஷிகா உருவெடுத்து வர, காட்சிகளில் வளமை குறையவில்லை.
அஷ்டமா சக்திகளை பெற நினைக்கும் மந்திரவாதி சம்பத் ராம், அவர் இட்ட வேலையை செய்யும் பூதங்களாக வரும் தம்பி ராமையா, ஜெகன், சந்தோஷ் பிரதாபின் சிறுவயது மகனாக வரும் மகித்ரா, வளர்ந்த நிலையில் வரும் சிறுவன் சஷாந்த் மற்றும் சிறுவர்கள் அரிமா வர்மன், கலைக்கோவர்மன், அனைவரும் தங்கள் பாத்திரங்களை நிறை செய்கிறார்கள்.
வானவில்லை உலர்த்தி கொடியில் காயப்போட்டது போல் வண்ணமயமாக இருக்கிறது பி.ஜே.முத்தையாவின் ஒளிப்பதிவு.
எல். வி.முத்து கணேஷ் இசை, பாரம்பரிய தன்மையுடன் ஒலிக்கிறது.
குழந்தைகளை கவர 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கும் புலி, கொரில்லா, ராட்சத பறவை, பாம்பு போன்றவற்றை முடிந்தவரை இயல்பாக உருவாக்கி இருக்கிறார்கள்.

21ம் நூற்றாண்டு கதைகளே லாஜிக் மீறல்களுடன் இருக்கும்போது இந்த பதினெட்டாம் நூற்றாண்டு கதையில்… அதுவும் குழந்தைகளுக்காக சொல்லப்பட்டிருப்பதில் நடந்திருக்கும் லாஜிக் மீறல்களை கண்டிப்பாக கண்டுகொள்ள வேண்டியது இல்லை.
எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் எஸ். லதாவின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பதற்கு ஒரு கதையை தயார் செய்து இதைப் படமாக்கித் திரையில் கொண்டு வந்திருக்கும் முயற்சிக்கு வந்தனங்கள்.
இது போன்ற முயற்சிகளை குடும்பத்தினரும் ஆதரித்து பாராட்ட வேண்டும்.
மரகத மலை – கோடைக் கொண்டாட்டம்..!
– வேணுஜி