September 23, 2026
  • September 23, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • மேட் இன் கொரியா (Made in Korea) திரைப்பட விமர்சனம்
March 13, 2026

மேட் இன் கொரியா (Made in Korea) திரைப்பட விமர்சனம்

By 0 300 Views

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். 

இன்றைய இளசுகளின் கனவு தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவைத்தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய இந்திய இளைஞர்களை மட்டும் அல்லாமல் உலகெங்கும் இருக்கும் இளசுகளை கவரவே செய்கிறது. 

இந்த நாடியை மிகச் சரியாகப் பிடித்து கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். அந்த அனுபவத்தினோடு நம் கைபிடித்தும் அழைத்துச் செல்கிறார். 

சிறுவயதில் மாறுவேட போட்டிக்காக கொரிய ராணியின் உடை அணிந்த நாயகி பிரியங்கா மோகனுக்கு கொரியாவைப் பற்றிய சிலாகிப்பு உருவாகிவிடுகிறது. அது கொரியாவை நோக்கிச் செல்லும் கனவாகவும் மாறி விட, உடுப்பதில் தொடங்கி, குச்சிகளை கையில் பிடித்து உண்பது, வார்த்தைகளை தேடிப் பிடித்துபேசுவது என்றெல்லாம் கொரிய வாழ்க்கைக்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் பிரியங்கா. 

அந்த முயற்சியின் உச்சகட்டமாக அவருக்கு சியோலுக்கு செல்ல நெருக்கடியான ஒரு வாய்ப்பு கிடைக்க அங்கே அவர் பெறும்/ பெற்ற அனுபவங்கள்தான் கதை. 

நாம் மேற்கூறியதைப் போலவே இன்றைய இளைஞர்களின் தேவை, நோக்கங்களை சுற்றியதாக இருந்ததை மாற்றி கனவுகளை சுற்றியதாக இருக்கிறது. அது நோக்கங்கள் நிறைவேறவும் உதவுகிறது.

மேலோட்டமாக இதுதான் கதை என்று சொன்னாலும் அதற்குள் கார்த்திக் வைத்திருக்கும் பொடி பெண்ணியத்தின் வெளிப்பாடான வெடியாக இருக்கிறது.

பெண்ணியம் என்பது எப்போதும் ஆணுடன் மல்லுக்கட்டி கொண்டே இருப்பதல்ல… தன்னை உணர்ந்து கொள்ள… தனக்கு பிடித்ததை செய்ய… தன் கனவில் வாழ்ந்து பார்க்க ஒரு பெண்ணை அவள் சுதந்திரப்படி தயார் செய்யும் முயற்சிதான் அது.

அதுவும் இன்றைய இளைய தலைமுறைப் பெண்களுக்கு மிகப் பொருத்தமான செய்தியாக இருக்கிறது.

தன்னை உணர்ந்து கொள்ள தனிமை பயணம் மேற்கொள்ளும் ஷென்பாவின் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி பிரியங்கா மோகன் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். கனவுகளைத் தாங்கிய அந்தக் கண்கள் அவருக்கு இயல்பிலேயே அமைந்திருக்கின்றன. 

கொரியாவில் கிடைக்கப்பெற்ற தாய் கிழவி பார்க் ஹை ஜின் உடனான அவருடைய நேசம் அலாதியானது. தன்னைப் பற்றி பிரியங்கா கண்டு கொள்வது ஒரு புறம் இருக்க, பார்க் ஹை ஜினும் தன்னை கண்டு கொள்வது நேர்த்தி.

அதில் இருவரது கனவுகளும் நிறைவேறி விடுகின்றன. இரு தலைமுறை பெண்களும் தங்களுக்குள் இருக்கும் வசந்தத்தை கண்டு கொள்கிறார்கள்.

அத்துடன் தான் பழகிய கொரிய தோழமைகளுக்கான புதிய வசந்தத்தை இசையில் வெளிக்கொண்டு வருவதும் பிரியங்காவின் சாதனை.

பஸ் நிறுத்தத்தில் வரிசையில் நிற்க கற்றுக்கொள்வது முதல், பாரில் சரக்கடித்து அலப்பறை செய்வது வரை பிரியங்காவின் அனுபவத்தை நாமும் பெறுகிறோம்.

ஹேசம் அப்துல் வகாப்பின் இசையும், பிரசன்ன குமாரின் இசையும் படத்தின் நேர்த்தியை உயர்த்தி இருக்கின்றன.

அந்நிய தேசங்களுக்கு செல்லும்போது மொழி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும் மொழியைத் தாண்டி மனித உணர்வுகள் எப்படி பயன்படுகிறது என்பதை கண்ணீரோடு நிற்கும் பிரியங்காவை தெரு இசைக்கலைஞன் ஏ ஆர் ரகுமானின் பாடலை இசைத்து அவரைத் தொடர்பு படுத்தி தெளிவுபெறச் செய்வதில் விளக்கி வியக்க வைக்கிறார் இயக்குனர்.

கொரிய படங்களைப் பார்த்து அதன் சுவையை உணர்ந்துவிட்ட நாம் அதன் தாக்கத்திலேயே இப்போது படங்களை உருவாக்கி வருகிறோம். அதற்கு அடுத்த முயற்சியாக கொரியாவிலேயே சென்று ஒரு இந்திய படத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக். அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஶ்ரீ நிதி சாகரையும் பாராட்டலாம்.

அது ஷென்பாவின் கனவாக மட்டுமல்லாமல் அவருடைய கனவாகவும் இருக்கலாம். 

ஆக ‘மேட் இன் கொரியா’வில் கனவு மெய்ப்பட்டிருக்கிறது..!

– வேணுஜி