நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்க்கைக்குள் எந்த சுவாரசியமும் இருக்காது என்று நினைத்த ஒரு எழுத்தாளர், அதை ஒட்டிய கதையை எழுத முயற்சி செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் படா த்தின் கதை
அப்படி கதையை எழுதும் அந்த கதாசிரியர் ஜோதி ராமையா என்ற பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
அவர் எழுதும் புதுக்கதை நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு வாழ்க்கை வாழும் காளி வெங்கட்டையும் அவர் குடும்பத்தையும் சுற்றி அமைகிறது.
ஆட்டோ ஓட்டுனராக வரும் அவருக்கு மனைவியும் மகள் மற்றும் மகனும் இருக்க, மகள் நன்றாக படித்து பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவளது திருமணம் குறித்தும், கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாக கொண்டிருக்கும் மகனது எதிர்காலம் குறித்தும் காளி வெங்கட் கவலைக் கொண்டிருக்கிறார்.
இந்த கதை எங்கே ஆரம்பித்து எப்படி முடிகிறது என்பதைதான் ஆமை வேகத்தில் சொல்லியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி.
காளி வெங்கட் வழக்கம் போல ஒட்டுமொத்த குடும்பத்தைத் தாங்கும் குடும்பத் தலைவனாக உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் முழு படத்துக்கும் அவர் தாங்குவாரா என்பதுதான் ஒரே கேள்வி.
காளி வெங்கட்டின் மகளாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருக்க, காளி வெங்கட்டுக்கு ஈடாக குடும்பத்தைத் தாங்கி அற்புதமாக நடித்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர் பாவம், எப்போதும் தோசை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
வழக்கத்தை மீறி கீதா கைலாசம், ரசிகர்களை கலகலப்புடன் இருக்க வைப்பது வித்தியாசமாக இருக்கிறது.
குடும்ப கஷ்டம் தெரியாத காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் கிஷோர் அந்த பருவத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அக்காவின் பொறுப்பு அவருக்கு இல்லாதது பெரும் குறை.
ரோஷினி வேலை செய்யும் ஐடி நிறுவன அதிகாரியாக நடித்திருக்கும் அர்ச்சனா நிறைய சிரிப்பதும் நிறைய அழுவதுமாக இருக்கிறார்.
மின்வாரிய உதவி மின் பொறியாளராக நடித்திருக்கும் சுனில் சுகதா, அவரது காதல் வலையில் விழுந்த மதுமிதா, ஊறுகாய் விற்பனையாளர் சாம்ஸ் என அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே, அனாவசிய கோணங்களை கொடுத்து நம்மை குழப்பாமல் இயல்பான வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
கே.சி.பாலசாரங்கனின் இசை படத்தின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
புதிய உத்தியில் கதை சொன்னதற்காக கார்த்திகேயன் மணியைப் பாராட்டலாம். அதேபோல் ஒவ்வொரு பாத்திரத்துக்கான சரியான கலைஞர்களின் தேர்வும் அவர்களிடம் நடிப்பை நயமாக வாங்கி இருக்கும் பாங்கும் நேர்த்தியாக உள்ளது.
ஆனால் இந்தக் கதை எதை நோக்கிச் செல்கிறது, இதிலிருந்து நாம் எதை புரிந்து கொள்வது என்று புரியவில்லை.
ஒரு நாள் கால்ஷீட் மட்டுமே சத்யராஜ் இடம் வாங்கி இருப்பார்கள் போல் இரக்கிறது அதனால் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு நகர்த்தாமல் கதை சொல்ல வைத்திருக்கிறார்கள். அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை இப்படி அப்படி நகர்த்தியாவது கதை சொல்லி இருக்க முடியும்.
மிக மெதுவாக செல்லும் கதையோட்டமும் அயர்வை தருகிறது. இரண்டாவது பாதியில் வரும் மின்சார வாரிய காட்சிகள் அனாவசிய நீளம்.
அப்பா ஆட்டோ ஓட்டுநர் என்பதையே கேவலமாக பார்க்கும் மகன், அதற்கு முன் அவர் குப்பை வாரிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்ததும் திருந்துவது நம்பும்படி இல்லை. அப்படி தெரிந்தால் அவரை இன்னும் குறைத்து தான் மதிப்பிட வாய்ப்பு இருக்கிறது.
‘மெட்ராஸ் மேட்னி’ – இலக்கில்லாத அம்பு..!
– வேணுஜி