November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 23, 2018

மாரி 2 படத்தின் திரை விமர்சனம்

By 0 1246 Views

ஒரு படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியோ, அதன் சுவடுகளோ ஏற்படுத்தியிருந்தால்தான் அதன் இரண்டாவது பாகம் தயாரிப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகத்தில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏன் இரண்டாவது பாகம் தயாரித்தார்கள் என்பது முதல் கேள்வி.

தன் முதல் இரண்டு படங்களில் நம்பிக்கை வைக்கும் இயக்குநராக அடையாளம் தெரிந்த பாலாஜி மோகன் மூன்றாவது படத்தில் திடீரென்று கீழிறங்கி சுமாரான கமர்ஷியல் படத்தைக் கொடுத்துவிட்டு வேறு சிந்தனையே இல்லாமல் மீண்டும் அந்தப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இரண்டாவது கேள்வி.

வடசென்னை மாதிரியான படங்களை எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்க, மாரி மாதிரி படங்களை எந்த ஆடியன்ஸுக்காகக் கொடுக்க நினைத்தார் தனுஷ் என்பது மூன்றாவது கேள்வி.

தனுஷின் கமர்ஷியல் படங்களுக்கென்று யாரும் ‘டை ஹார்ட்’ ஆடியன்ஸ் இருக்கிறார்களா..? இது நான்காவது கேள்வி.

MAARI 2

MAARI 2

‘பிரேமம்’ போன்ற படங்களின் மூலம் எல்லோர் மனதையும் ஈர்த்த சாய் பல்லவி தரை ரேட்டுக்கு இறங்கி கூத்தடித்து… தமிழில் இருக்கிற ரசிகர்களையும் ஏன் இழக்க நினைக்கிறார் என்பது ஐந்தாவது கேள்வி.

இப்படியே ஒரு பத்துப் பதினைந்து கேள்விகள் எழுகின்றன இந்தப்படத்தைப் பார்க்கும்போது. அப்படியானால் படத்தில் ஒன்றுமே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறதா..? இருக்கிறது. கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் அண்ணாமலை, கொஞ்சம் மன்னன் என்று ரஜினியின் முக்கியமான படங்களைக் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துப்போட்டு ‘நச்ச் நச்’சென்று கொத்திய கொத்து பரோட்டாதான் இந்தப்படக் கதை.

முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் அதுவும் இல்லை. முதல் பாக கெட்டப், முதல் பாக செட்டப் அவ்வளவுதான். முன்னதில் ‘லந்து நிறைய கிரைம் குறைய’ வந்த தனுஷ் இதில் ‘நிறைய கிரைம் குறைவாக லந்து…’ என்று வருவதால் மாரி இதில் நிறைய மாறிப்போனதுதான் மிச்சம்.

அதனாலேயே முதல் பாகத்தில் யாரையும் செய்யாமலேயே “செஞ்சிருவேன்…” என்று அவர் முஷ்டியைச் சுற்றி விரல்களைச் சுழற்றியதை ரசிக்க முடிந்தது. இதில் அநியாயத்துக்கு பலரை செய்யவே செய்கிறார். அதனால் “செஞ்சிருவேன்..” என்பதைப் பார்த்தால் பதற்றம்தான் ஏற்படுகிறது. ரசிக்க முடியவில்லை.

கமர்ஷியல் படமென்பதால் லாஜிக் எதையும் பார்க்காமல் விட்டால் முதல் பாதிப்படம் கலகலவென்று ஓடிவிடுகிறது. மாரிக்கு அழகே அந்த கெட்டப்தான். ஆனால், இரண்டாவது பாதியில் காதல் மனைவியின் நல்வாழ்வுக்காக தனுஷ் கெட்டப் மாறி, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு எங்கெங்கோ அலைகிற கதை கிளைமாக்ஸில் அவர்களுக்கே போரடிக்க “லெங்க்தி டயலாகெல்லாம் வேணாம். நேரா சண்டைக்குப் போயிடுவோம்…” என்று வில்லன் டோவினோ தாமஸிடம் தனுஷ் சொல்வதாக அமைத்து படத்தை ஒருவழியாக முடிக்கிறார்கள்.

MAARI 2

MAARI 2

சாய் பல்லவியை இதுபோன்ற கேரக்டர்களில் ரசிக்க முடியவில்லைதான். ஆனாலும் என்ன கேரக்டர் என்றாலும் என்னால் முடியும் என்று அவர் மெனக்கெட்டிருப்பதை ரசிக்கலாம். அந்த ‘ரௌடி பேபி’ பாடலில் ஒரு குத்து போட்டிருக்கிறார் பாருங்கள்… அந்த மெனக்கெடல் ‘ஆஸம்..!’

மலையாளத்தில் புரட்யூசர்கள் டேட்ஸ் கேட்டு அலைந்து கொண்டிருக்கும் ‘டோவினோ தாமஸ்’, இங்கே வந்து வில்லனாக நடிப்பது வேண்டாத வேலை. அதற்கென்று இங்கே ஒரு பட்டாளமே இருக்க, சேர நன்னாட்டிலிருந்து வில்லனை இம்போர்ட் பண்ண வேண்டுமா டைரக்டர் சார்..?

தனியாக நடித்து போரடித்து விட்ட கிருஷ்ணா இதில் தனுஷுக்கு நண்பனாக வருகிறார். நண்பர்களின் வழக்கப்படியே தனுஷைத் தப்பாகப் புரிந்துகொண்டு கடைசியில் திருந்துகிறார்.

வரலஷ்மி சரத்குமாருக்கு வழக்கமான வேடம். விரல்களை ஆட்டும் மேனரிசத்தையும், காட்டன் புடவை, கழுத்துவரை ஜாகெட்டையும் வரிசையாகப் படங்களில் பார்த்து போரடிக்கிறது. மாற்றுங்கள் வரு..!

ஏதாவது தேர்வில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் பெயரைக் கேட்டால் ‘ஆடுகளம் நரேன்’ பெயரை மாணவர்கள் எழுதும் அபாயம் இருக்கிறது. உங்களுக்கே போரடிக்கலையா நரேன்..?

யுவனின் இசையும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ‘கிளாஸ்’. ஆனால், அந்த இளையராஜா பாட்டு…? அவர் பாடியிருக்கத்தான் வேண்டுமா..? பாவமாக இருக்கிறது. 

மாரி மூன்றாம் பாகம் எடுக்கிற எண்ணம் இருந்தால் இப்பவே அதை மாத்திக்கங்க… டீம்..!

மாரி 2 – நல்லாவே ‘செஞ்சிருக்காங்க..!

– வேணுஜி