கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி.
மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது.
நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் பகுதிகள் இந்த தொகுதியில்தான் வருகின்றன. இந்த தொகுதியில் அனைத்து விதமான தொழில்களும் நடக்கின்றன. குறிப்பாக ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் அதிகளவில் இந்த தொகுதியில் உள்ளன.
இதுதவிர அரசுத்துறை அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவல் ஆணையர் அலுவலகம், வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய தந்தி அலுவலகம், மத்திய சிறைச்சாலை, வ.உ.சி பூங்கா, நேரு விளையாட்டு அரங்கம், கோவை ரெயில் நிலையம், உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் இந்த தொகுதிக்குள் வருவது மிக சிறப்பு.
யார் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த தொகுதியில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இத்தொகுதி உள்ளது.
இந்த தொகுதி முதலில் கோவை மேற்கு தொகுதியாக இருந்தது. 2011-ம் ஆண்டு மறுசீரமைப்புக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது.
இத்தொகுதி முழுக்க முழுக்க நகரப்பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். தெலுங்கு பேசக்கூடியவர்கள், கம்மவார் நாயுடு, வைசியார், செட்டியார், தெலுங்கு அசாரி, தேவாங்க செட்டியார், 24 மனை தெலுங்கு செட்டியார், மலையாளிகள், அருந்ததியர்கள், இஸ்லாமிர்கள், கிறிஸ்தவர்கள், கவுண்டர்கள், வடமாநிலத்தவர்கள் தொகுதி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர்.
குறிப்பாக இஸ்லாமியர்கள், இந்துக்கள், வடமாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த தொகுதியில் மொத்தமாக 2,52,389 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,25416, பெண்கள்- 1,25,950, மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் உள்ளனர்.
இதுவரை இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்று உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.கவை சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் உள்ளார்.
கோவை தெற்கு தொகுதி மருத்துவம், வியாபாரம், போக்குவரத்து, அரசு அலுவல் சார்ந்த மைய பகுதியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க காந்திபுரம் நஞ்சப்பா ரோடு, 100 ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி ஆகியவையும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. குறிப்பாக அவினாசி சாலையில் காலை, மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டி களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
எனவே அதனை குறைக்க இங்கு ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல் திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் நடைபெற்று வரும் பால பணிகள் இன்னும் முடிவடையாததால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே விரைந்து அந்த பால பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிக குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவரையிலான எம் எல் ஏ-கள் லிஸ்ட்…
1951- சுப்பிரமணியன்(காங்கிரஸ்)
1957- மருதாசலம் (இந்திய பொதுவுடமை கட்சி)
1962- பழனிசாமி (காங்கிரஸ்)
1967- கோவிந்தராஜூலு (தி.மு.க)
1971- கோபால்(தி.மு.க)
1977- அரங்கநாயகம் (அ.தி.மு.க)
1980- அரங்கநாயகம் (அ.தி.மு.க)
1984- ராமநாதன் (தி.மு.க)
1989- ராமநாதன் (தி.மு.க)
1991- செல்வராசு (காங்கிரஸ்)
1996- தண்டபாணி (தி.மு.க)
2001- மகேஸ்வரி (காங்கிரஸ்)
2006- மலரவன் (அ.தி.மு.க)
2011- சேலஞ்சர்துரை (அ.தி.மு.க.)
2016- அம்மன் அர்ச்சுணன் (அ.தி.மு.க.)