இதய நோயிலிருந்து மீண்டவர்களையும் அவர்களது மருத்துவர்களையும் சுதந்திர தினத்தன்று ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைப்பயணம்..!
சென்னை, 15 ஆகஸ்ட், 2025: உடல்நலத்தையும், சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டாடும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள், 2025 ஆகஸ்ட் 15 – நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் தங்களுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணர்களுடன் கைகோர்த்து நடைபயணத்தை மேற்கொண்டனர்.
இந்த “நம்ம ஹார்ட் வாக்” நடைப்பயணத்தை அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.K. மோகன் மற்றும் புகழ்பெற்ற இந்திய சமகால ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மருத்துவமனையின் முதுநிலை இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் (கிளினிக்கல் லீடு & முதுநிலை நிபுணர்- இதயநாள & மார்பறை அறுவை சிகிச்சை), பேராசிரியர் டாக்டர் P. மனோகர் (கிளினிக்கல் லீடு – இடையீட்டு இதயவியல் சிகிச்சைப் பிரிவு) மற்றும் டாக்டர் C. சுந்தர் (கிளினிக்கல் லீடு – கட்டமைப்பு இதயவியல் பிரிவு) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அண்ணா நகர் டவர் பார்க்-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தானியக்க திறன் கொண்ட (Automated External Defibrillator (AED)) சாதனத்தை தலைமை விருந்தினர் திரு. எம்.கே. மோகன் திறந்து வைத்தார். உயிர்காக்கும் இச்சாதனம், இதயச் செயலிழப்பு போன்ற அவசரநிலைகளின் போது பொதுமக்கள் அணுகிப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
திடீர் இதயச் செயலிழப்பு ஏற்படும் போது, அதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை பொது அமைவிடங்களில் உருவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமென்று இம்மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதாக இந்த வசதியினை இம்மருத்துவமனை அறிமுகம் செய்துவருகிறது.
ஒரு காலத்தில் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களுடன் போராடி, அதிலிருந்து சிகிச்சையின் மூலம் மீண்டு இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு, இந்நிகழ்வு வெறும் அடையாளம் மட்டுமல்ல; சரியான நேரத்தில் நோயறிதல், மேம்பட்ட சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒரு பெரிய அளவிலான இதய பாதிப்புக்குப் பிறகும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கான ஒரு உயிருள்ள சாட்சியமாக இந்நிகழ்வு அமைந்தது.
இது ஏன் மிகவும் முக்கியம் ..?
• உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர்; இருப்பினும் இது இறப்புகளில் 80% வரை வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்வதன் மூலம் நிகழாமல் தடுக்கக்கூடியவையே.
• இந்தியாவில், ஒவ்வொரு 4 இறப்புகளில் 1 இதய நோயால் ஏற்படுகிறது.
• பொன்னான நேரம்(Golden Hours) உயிர்களைக் காப்பாற்றும்: பாதிப்பு அறிகுறி தென்பட்டவுடன், முதல் 90 நிமிடங்களுக்குள் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, 95% வரை உயிர் பிழைப்பதற்கும் மற்றும் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைவதற்கும் வாய்ப்புள்ளது.
• TAVR போன்ற நுண்துளை செயல்முறைகள் நோயாளிகள் 2−3 நாட்களில் வீட்டிற்குச் செல்லவும், சில வாரங்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் வகை செய்கின்றன.
“இதய அறுவை சிகிச்சை பெரும்பாலும் ஒரு கடைசி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் பல நோயாளிகளுக்கு, அது அவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கையை அளிக்கும் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். சிக்கலான பைபாஸ் மற்றும் வால்வு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட நோயாளிகளுடன் இன்று இங்கே இணைந்து நிற்பது மனநிறைவளிக்கிறது. அவர்கள் நடப்பதும், சிரிப்பதும், முழுமையாக வாழ்வதும் தான் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களாகிய நாங்கள் விரும்புகின்ற மற்றும் எதிர்பார்க்கின்ற சிறந்த பலனாகும்,” என்று இதயநாள & மார்பக அறுவை சிகிச்சை பிரிவின் கிளினிக்கல் லீடு & முதுநிலை நிபுணர் டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் கூறினார்.
“இதய நோய் என்பது இனிமேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு ஆயுள் தண்டனை அல்ல. TAVR மற்றும் நுண்துளை கட்டமைப்பு ரீதியிலான இதய இடையீட்டு சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட செயல்முறைகள் மூலம், நோயாளிகள் சில நாட்களிலிருந்து, ஒருசில வாரங்களுக்குள் தங்களது வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப முடியும். இந்தியாவில், ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் இதய செயலிழப்பு அபாயத்தை 60% -க்கும் மேல் குறைக்க முடியும்,” என்று கிளினிக்கல் லீடு மற்றும் ஸ்ட்ரக்சுரல் இதயவியல் முதுநிலை நிபுணர் டாக்டர் C. சுந்தர் கூறினார்.
“மாரடைப்பு நிகழ்ந்த பிறகு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. பொன்னான நேரத்திற்குள் (Golden Hours) பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொள்ளும் நோயாளிகள் 95% உயிர் பிழைக்கும் விகிதத்தைக் கொண்டிருப்பதோடு, அதிக கட்டுப்பாடுகளோ, பாதிப்புகளோ இன்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்பதை காட்டுகின்றன. இன்றைய நடைப்பயணம், விரைவான, நிபுணத்துவ சிகிச்சையின் வழியாக இதய ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது,” என்று இடையீட்டு இதயவியல் பிரிவின் கிளினிக்கல் லீடு & இன்டெர்வென்ஷனல் இதயவியல் பேராசிரியர் டாக்டர் P. மனோகர் கூறினார்.
“இதய நோய்க்கு எதிரான முதல் தற்காப்பு, அது வராமல் தடுப்பது தான். குறித்த காலஅளவுகளில் மருத்துவப் பரிசோதனைகள், சமச்சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது ஆகியவை 80% – க்கும் அதிகமான அகால மாரடைப்புகளைத் தடுக்க முடியும். இந்த நடைபயண நிகழ்வு, உடல்நலத்திற்கு முன்னுரிமையளித்து மதிக்கவும், இதய செயல்பாட்டைப் பாதுகாக்க முன்முயற்சியான நடவடிக்கைகளை எடுக்கவும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது,” என்றார் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.K. மோகன்.
கொடியசைத்து இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தபோது, தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது, “மருத்துவத்தைப் போலவே கலையும், உயிர் பிழைத்தல் மற்றும் புதுப்பித்தலின் கதைகளைக் கூறுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் நடை பயில்வதை பார்ப்பது ஒரு உயிருள்ள கேன்வாஸ்; தைரியத்தையும், பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனையும் இந்த நகர்வுகள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டார்.
“காவேரி மருத்துவமனையில், ஒவ்வொரு இதய அவசரநிலைக்கும் உடனடி, உயர் தரமான சிகிச்சை பராமரிப்பு தேவை என்று நாங்கள் நம்புகிறோம். எமது 24×7 இதய சிகிச்சை குழு, விரைந்து செயல்படும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி, மேம்பட்ட கட்டமைப்பு ரீதியான இதய மருத்துவ செயல்முறைகள் மற்றும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை அனைவருக்கும் பயனுள்ள வகையில் வழங்குவதற்குத் தயாராக உள்ளது. இன்று எங்கள் நோயாளிகளைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது; நோயிலிருந்து மீண்டவர்களாக அல்லாமல், மாறாக வாழ்க்கையை முழுமையாக வாழும் துடிப்பான நபர்களாகப் பார்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார் காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்.
நம் நாட்டின் விடுதலையை கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தன்று, காவேரி மருத்துவமனை, வடபழனி மற்றும் இதயநோயை சிகிச்சையின் மூலம் வெற்றி கண்ட சாதனையாளர்கள் ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்: விழிப்புணர்வு, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் சரியான வாழ்க்கை முறை தேர்வுகள், குறிப்பாக நடைப்பயிற்சி மற்றும் உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதய நோயிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்வது சாத்தியம் என்பதே அந்த முக்கியமான செய்தி. இந்நிகழ்வு ஒரு நடைப்பயணம் மட்டுமல்ல; மருத்துவ சிகிச்சை நேர்த்தி, நோயாளியின் மீள்தன்மை மற்றும் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதில் மருத்துவமனையின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான ஒரு சான்றாகவும் திகழ்கிறது.