வெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..!
அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா..? தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது சிறுநீரகத்தைத் தர முடியாமல் அங்கே வைக்கிறார்கள் ஒரு ட்விஸ்ட்.
அதன் தொடர்ச்சியாகவும், அவருக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு தொடர்பாகவும் தன் பூர்விகம் பற்றி அறிந்துகொள்ள இந்தியா வரும் இடத்தில் வரிசையாக சுவாரஸ்யங்கள் கைகோர்த்துக் கொள்ள ஒரு இரண்டரை மணிநேரம் போவது தெரியாமல் போகிறது.
விஜய் ஆண்டனியின் நடிப்புக்கும், முக பாவத்துக்கும் அவர் கொலையே செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்கிற அளவில்தான் நாம் ரியாக்ஷன் இருக்கும். அதிலும் அம்மாவின் மேலான பாசக்காரராக இருந்தால் கேட்கவே வேண்டாம். இதிலும் அப்படியே..!
ஆனால் அவரது நடிக்கும் ஆர்வத்துக்கு எல்லையே இல்லை போலும். இதில் நான்கு கேரக்டர்கள். அதில் பாதிரியார் வேடம் அவருக்குப் புதுசு. மருத்துவர், திருடன் வேடங்களை விரும்பி ஏற்கும் அவருக்கு நிஜத்தில் ஏதும் சிறுவயதுக் கனவு வருகிறதா என்பதை சோதிக்கதான் வேண்டும்.
நடனம், ஆக்ஷனிலும் நெருடாமல் செய்திருக்கும் அவர் இனி அதற்குரிய கதைகளைத் தேடிப்பிடித்து நடிக்கலாம்.
நான்கு விஜய் ஆண்டனிகளுக்கு சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி என்று நான்கு ஹீரோயின்கள். அவர்களில் ஷில்பா மஞ்சுநாத் விரைவில் தமிழ்சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஆர்.கே.சுரேஷ் நடிப்பு மெருகேறிக்கொண்டு வருவதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். யோகிபாபுவின் டைமிங் காமெடி வழக்கம்[போல் கலக்கல். வேலராமமூர்த்தி, மதுசூதனன் ராவ் அனுபவப் பாத்திரங்களாக அணிசேர்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நானின் ஒளிப்பதிவு அபாரம். பாடல்களில் குளிர்ச்சியும், ஆக்ஷனில் அமளிதுமளியுமாக கலக்கியிருக்கிறார். இயக்குநர் ஹரியின் வலதுகரமாக இருந்த மறைந்த பிரியன் இடத்தை இவர் நிரப்புகிறார் என்றால் மிகையாகாது. இவர் திறமைக்கு இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது.
ஒரு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியின் ‘புரிந்து கொள்ளல்’ ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் நினைத்தால் விஜய் படங்களைப் போல் தன் படங்களின் பாடல்களை அமைத்துக் கொள்ளமுடியும். ஆனால், நாயகன் விஜய் ஆண்டனியின் படம் என்ன கேட்கிறதோ அதைச் சரியாகப் புரிந்து வைத்து இசைக்கிறார். அந்த அம்மா சென்டிமென்ட் பாடலான ‘அடிவயிற்றில்…’ பாடல் தியேட்டரை விட்டு வெளியே வந்தும் கூட காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இது விஜய் ஆண்டனியின் பிராண்ட் படம் என்றாலும் அதைச் சரிவிகிதமாகக் கலந்துதந்த அளவில் இயக்குநராக வென்றிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. வசனப் ‘பொடி’யும் உரைக்கிறது. அந்த ‘இரண்டாயிரம் ரூபாய்த் தாள்’ வசனம் ஷார்ப். ஒரு கமர்ஷியலான பாசக்கதையில் சாதிப்பிரச்சினையையும் கொண்டு வந்திருப்பது நல்ல சமூக நோக்கு. இந்த அனுபவத்தில் அவர் இனி பெரிய ஹீரோக்களுக்கு நிச்சயமாகப் படம் பண்ண முடியும்.
காளி – கமர்ஷியல் உக்கிரம்..!