ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள்.
இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் பார்த்து நட்பை வளர்க்கிறார். அந்த நட்பு அஞ்சு குரியனுக்கு அனந்த் நாக் மீது காதலை ஏற்படுத்துகிறது. அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றும் அனந்த் நாகுக்கு அஞ்சு குரியன் மீது ஈர்ப்பு ஏற்படாமலே இருக்க, நிச்சயமான திருமணத்தை நிறுத்திவிட்டு, தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைத் தேடி அலைகிறார்.
அப்படி அவருக்குப் பிடித்த பெண்ணாக சம்யுக்தா மேனன் அமைகிறார். இருவரும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை போகிறார்கள். ஆனாலும், சம்யுக்தா தேடிய ஆணாக அனந்த் நாக் இல்லாமல் போகவே அதுவும் அங்கேயே ‘பிரேக் அப்’ ஆகிறது. இருந்தும் சம்யுக்தாவைத் தொடரும் ஆனந்த் நாக்கின் எண்ணம் என்ன ஆனது என்பது கதை.
ஆணோ, பெண்ணோ காதலன் காதலியோ, கணவன் மனைவியோ அவரவர்கள் கருத்துப்படி வாழ்க்கையில் அவரவர் விரும்பும் இடம் தர வேண்டும் என்பதுதான் படம் சொல்ல வரும் நீதி. அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம்.
ஆனால், வழக்கமான காதல் கதையை எதிர்பார்த்துப் போகாமலிருப்பது நல்லது. ஏனென்றால் அனந்த் நாகுக்குப் பிடிக்கும் சம்யுக்தாவைவிட பார்வையாளராகிய நமக்கு அஞ்சு குரியனின் அன்பைத்தான் பிடிக்கிறது. அனந்த் நாகை உருகி உருகிக் காதலிக்கும் அஞ்சு குரியனை நாமே ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது அனந்த் நாக் சம்யுக்தாவைக் காதலிக்க ஆரம்பித்து படுக்கை வரை போய்விடுகிறார். சரி… அவரையாவது கைப்பிடிப்பார் என்று பார்த்தால் அவருக்கு ஊசி முனை அளவுக்காவது இடம் கொடுத்தால்தானே சம்யுக்தா..? அத்ற்குப்பின் இன்னொருத்தி… அதற்கும் பின்னால் இன்னொருத்தி… என்று தேடிக்கோண்டே இருக்கிறார்.
அந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் மீண்டும் அவர் அஞ்சு குரியனைத் தேடி வருகையில் அவர், அனந்த் நாகை நிராகரிப்பது சரிதான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இப்படி முடிவே இல்லாமல் போவதில் எப்படித்தான் படம் முடியப்போகிறது என்ற அலுப்பும் எழாமல் இலை.
அனந்த் நாக் பாத்திரத்துடன் ஒன்றித் தெரிகிறார். அந்தக் கேரக்டரை எப்படி மனத்தில் ஏற்றிக்கொண்டாரோ அப்படியே தெரிகிறார். ஏற்கனவே சொன்னது போல் அஞ்சு குரியன் காதலிக்கவே வைக்கிறார். செம்ம க்யூட். சம்யுக்தாவின் பாத்திரமும், நடிப்பும் கூட பக்கா. படம் முழுவதும் அவர் அரைக்கால் சட்டையுடனேயே வருகிறார் அவர்.
அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கு முகம் காட்டாத அவரது அப்பாவும் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போனில் சம்யுக்தா தன் அப்பாவிடம் “ஏற்கனவே இருந்தவனோட நேத்து பிரேக் அப் ஆயிடுச்சு. இன்னைக்கு இன்னொருத்தன் கிடைச்சிருக்கான். இவன் சரியா வருவான்னு தோணுது…” என்று சொல்ல அந்த அப்பாவோ மகளைக் கண்டிக்காமல், “குட்..!” (!) என்று பாராட்டுகிறார்.
அனந்த் நாகின் நண்பராக வரும் சதீஷ் அலட்டிக் கொள்ளாமல் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
படம் முழுக்க அழகியலில் நகர்வது ‘ஆஸம்’ அனுபவம். கலர்ஃபுல் நடிக நடிகையர்கள், கண்கவர் லொகேஷன்கள், படம் முழுக்க அள்ளித் தெளித்த இளமை என்று இயக்குநரின் ‘ஏஸ்தடிக் சென்ஸ்’ வியக்க வைக்கிறது. அதற்கு ஈடுகொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் டேமல் சேவியருக்கும் ஒரு ‘பொக்கே’. காதலுக்கென்றே பிறந்த இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரும் இந்த அழகியலுக்குள் மிளிர்கிறார்.
படம் முடிவில் அனந்த் நாக் நான்காவது பெண்ணுடன் காபி ஷாப்புக்குக் கிளம்பும்போது தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள். இதுவாவது செட்டாகட்டும் என்றா..?
ஜூலை காற்றில் – காதலைத் தேடி…
– வேணுஜி