November 29, 2021
  • November 29, 2021
Breaking News
November 1, 2021

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

By 0 52 Views

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே…

ஆனால் அவற்றில் நீதிக்காகக் கற்பனையைக் கலந்து சொன்ன கதைகளே அதிகம். உண்மையில் சமூக நீதி காக்கப்பட்ட சம்பவங்களைச் சொன்ன படைப்புகள் மிகச்சிலதுதான். அப்படி இப்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் ஒரு உண்மைச் சம்பவத்தை உக்கிரமும், உதிரமுமாகச் சொல்லி மாபெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஒரு படம்… ஒரே படம்… இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நிழல் சலனம்… பார்வையாளனை இப்படிக் கட்டிப்போட்டு உள்ளத்தை உலுக்கி எடுத்து விடுவதை இன்னும் நம்ப முடியவில்லை. 
 
சூர்யா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கியிருக்கும் ஜெய் பீம் அதைத் சாதித்திருக்கிறது.
 
90 களில் கடலூர் சிறைச்சாலை வாசலில் வைத்து விடுதலையாகும் கைதிகளில் பழங்குடி இனத்தவரை அப்போதே அள்ளி பிற வழக்குகளுக்குக் குற்றவாளிகளாக இழுத்துச் செல்லும் முதல் காட்சியே இந்தப்படம் சொல்லப்போகும் உக்கிர செய்திக்குக் கட்டியம் கூறி உலுக்கி விடுகிறது. கவுண்டர், முதலியார் போன்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். இருளர், குறவர் என்றால் மீண்டும் இன்னொரு வழக்கு இன்னொரு சிறை… அதிலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு ஆள் போதாது என்று ஒரு காவல் நிலைய அதிகாரி நொந்து (!) கொள்ள, கையூட்டுப் பெற்று பழங்குடிகளை அவர்கள் கைகளுக்குத் தள்ளிவிடும் அதிகாரி, “ஒருத்தர் மேல ஒரு கேஸ்தான் போடணும்னு சட்டம் இருக்கா..? ஒவ்வொருத்தன் மேலயும் ரெண்டு மூணு போட்டு விடுங்க…” என்று உடனடி வழி சொல்ல பதறுகிறோம். 
 
காலம் தோறும் காக்கிச் சட்டைகள் வழக்குகளை முடித்து வைக்க மேற்கொள்ளும் வெளியே தெரியாத நடைமுறைகள்தான் கதையின் மையக்கரு. அதில் இனரீதியாகவும், வாதாட வக்கற்றும் இருக்கும் அப்பாவிகளே குற்றவாளிகளாக்கப் படுவதும், அவர்களின் பக்கம் நின்ற ஒரு நீதிமானின் போராட்டமும்தான் கதை. இது நம் கண் முன்னே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு,  வழக்கறிஞராக இருந்த 90 களில் குற்றவாளியாக்கப்பட்ட தன் கணவனைக் காணாமல் தேடிய இருளர் இனப் பெண்ணுக்காக வழக்காடி நீதியைப் பெற்றுத் தந்த உண்மைக்கதையின் நிழல் சலன வடிவம்தான் என்பதே படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
 
சிறிது காலமாகவே கவனம் பெறும் மணிகண்டன்தான் கதையைத் துவக்கி வைக்கும் இருளர் ராஜாகண்ணுவாக வருகிறார். முதல்நாள் இரவு மழையில் தான் குடியிருக்கும் மண்வீடு இடிந்து சரிந்தும், அந்தக் கவலை ஏதும் இன்றி ஊர்த்தலைவரின் வீட்டில் பாம்பு புகுந்த செய்தி கேட்டு அதைப் பிடிக்கப்போவதில் காட்டும் அக்கறையில் அந்தப் பாத்திரத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் மணி. போலீஸின் சித்திரவதையில் கிழிந்து தொங்கினாலும், “இந்தக் காயம் ஆறிடும்… ஆனா திருடன்கிற பேர் என்னைக்கும் நிலைச்சு நின்னுடும்…” என்று குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்கும் உறுதி பாராட்ட வைத்தாலும்… இறுதியில் தரதரவென்று போலீஸ் இழுத்துக்கொண்டு போக, “என்னை விட்றாத… செங்கேனி..!” என்று கதறும் கதறல் இதயத்தில் இறங்கும் ஈட்டியாகிறது..!
 
அவர் மனைவி செங்கனியாக வரும் லிஜோ மோள் ஜோஸுக்கு ஒரு தேசிய விருதைப் பரிந்துரைத்து விட்டு அவரைப் பாராட்டத் தொடங்கலாம். பார்வை, உடல்மொழி இவற்றாலேயே எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதை அவரால் உணர்த்த முடிகிறது. கர்ப்பிணியான ஒப்பனையில் உடை, நடை என்று அப்படிப் பொருத்திக்கொண்டு அந்தப் பாத்திரத்தைத் தாண்டி இம்மி பிசகாமல் லிஜோ நடித்திருப்பதில் இயக்குனரின் வழிகாட்டல் இருந்திருப்பதை உணர முடிந்தாலும், அதை உள்வாங்கி வெளிக்கொடுத்திருப்பதில் அவர் திறன் அபாரம்.
 
தன்னை வரவழைக்க தன் மகளை இழுத்துக்கொண்டு போகும் போலீஸிடமிருந்து அவளை மீட்கப் பாயும் நேரம் பேருந்தில் அடிபடவிருந்து பின்வாங்கிச் சரியும் காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டதோ, எத்தனை முறை இடுப்பு நோக விழுந்து எழுந்தாரோ லிஜோ, இனி அவருக்குக் கிடைக்கப்போகும் பெருமைகளும், விருதுகளுமே அதற்கான ஒத்தடங்கள். 
மூன்றில் ஒரு பங்கு கடந்த படத்தில்தான் அறிமுகமாகிறார் சூர்யா. வழக்கமான ஹீரோயிச அதிரடி, நடன, அலப்பறை அறிமுகம் எல்லாம் இல்லை. காவல் துறையின் அத்துமீறலுக்கெதிரான ஒரு அறப்போராட்டமே அவரது அறிமுகக் களம். ஐஜி பிரகாஷ்ராஜ் அவரிடம் “காவல்துறையில மக்களுக்கு நல்லது செய்யற போலீஸும் இருக்காங்க..!” என்று சொல்ல, “அப்படியா… அப்ப நீங்களும் இந்தப் போராட்டத்துக்கு வந்துடுங்க…” என்று காவல்துறைக்கெதிரான முற்றுகைப் போராட்டத்துக்கே அவர் கையில் சூர்யா நோட்டீஸ் கொடுப்பது ‘கெத்து..!’
 
தான் ஒரு ‘வணிக’ ஹீரோ என்ற எண்ணம் துளியும் இன்றி அணியும் ஆடைகளில் கூட ஹீரோயிசத்துக்குப் பொருந்தாமல் அணிந்து வருவதே அவருக்குப் பொருந்தியும் இருக்கிறது. “அந்த ஜாதியில இருக்கிறவங்க நிறைய திருட்டுல சமபந்தப்பட்டிருக்காங்க…” என்று சொல்லும் ஒரு அதிகாரியிடம் “எந்த ஜாதியில திருடங்க இல்ல..?” என்று அமைதியாக சூர்யா கேட்பது ஆக்‌ஷன் காட்சியைவிட அனல் தெறிக்கும் இடம். ஒரு தயாரிப்பாளராகவும் ஆஸ்கர் வரை செல்லும் ஆற்றல் அவருக்கு இந்தப்படத்தைத் தயாரித்ததன் மூலம் கிடைத்திருக்கிறது.
 
இதுவரை படங்களில் ‘சிங்க நாதம்’ காட்டி கர்ஜித்த சூர்யா இதில் சமூக நீதிக்கான ‘சங்க நாதம்’ மீட்டியிருப்பது சிறப்பு..!
 
சமூக நீதி சொல்லும் ஒரு மீடியம் பட்ஜெட் படமான இதில் சூர்யா நடிக்காமல் இருந்திருந்தாலும் இது ஒரு நல்ல படைப்பாகப் பாராட்டப் பட்டிருக்கும். ஆனால், அவர் உள்ளே வந்ததாலேயே இது கவனம் பெற்று சிறந்த படமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதுதான் பிற உச்ச ஹீரோக்கள் புரிந்துகொள்ள வேண்டிய ‘நடிகர் சமூக’ நீதி. 
 
ஐஜியாக வரும் பிரகாஷ்ராஜ் அலட்டிக் கொள்ளாமல் வசீகரிக்கிறார். தன் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரச்சினைக்குரிய உதவி ஆய்வாளரை அவர் அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டே கடக்கும் ஒரு கட்டம் போதும் அவரது தேர்ந்த நடிப்புக்கு உதாரணம் சொல்ல. இதற்கும் அது குளோஸ் அப் ஷாட் கூட இல்லை. காவல்துறைத் தலைவரே சமரசத்துக்கு வழி வகுத்தாலும் மனசாட்சியுடன் அதை மறுதலிக்கும் இடத்தில் அவரால் படம் முழுதும் கசங்கித் தெரியும் காக்கிச் சட்டை கம்பீரம் கொள்கிறது. 
 
எல்லாவற்றுக்கும் காரணமான அந்த ஆறரை அடி உயர உதவி ஆய்வாளரை அமேஸான் காட்டில் பிடித்தார்களோ அல்லது அமேஸானில் ஆர்டர் கொடுத்துப் பெற்றார்களோ என்னவோ..? அவரைப் பார்த்தாலே ஈரல் குலை பதறுகிறது. இனி பல படங்களில் அவரை ‘அடிக்கு அடி’ பார்க்கலாம்.
 
“ஆம்பளைங்க எங்களை என்ன வேணா பண்ணுங்க. பொம்பளைய விட்ருங்க..!” என்று பிடிபட்டவர்களில் ஒருவர் கேட்கப்போக, ஆண்களுடன் அடைபட்டிருக்கும் ராஜாகண்ணு அக்காவின் ஆடை களையப்படும் காட்சியில் நம் இதயம் நின்று துடிக்கிறது.   
 
அறிவொளி இயக்க ஆசிரியையாக வந்து செங்கனி வழக்குக்கு உதவி செய்யும் ரெஜிஷா விஜயன், அரசு வழக்கறிஞராக வரும் சோமசுந்தரம், வழக்கறிஞர் எம்.எஸ்,பாஸ்கர், அட்டர்னி ஜெனரல், நண்பர்களாக வந்து போலீஸில் சின்னாப்பின்னமாகும் நபர்கள் அனைவருமே நடிப்பில்லாத நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்கள் என்றால் அதன் ஒரே காரணம் இயக்குநர் மட்டுமே.
 

படத்தில் உணரப்படும் ஒவ்வொரு அம்சத்தின் நேர்த்தியிலும், நிறைவிலும் நிறைந்திருக்கிறது இயக்குநரின் ஆற்றல்.

இது இந்தக் காலகட்டம், இந்த இடத்தில் இது நடந்தது, இவர்கள் இப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம் குறிப்பாகச் சொல்லப்படாமல் ஆனால் பார்வையாளர்களின் மனதில் குழப்பம் விளைவிக்காமல் போகிற போக்கில் ஆழப் பதிய வைத்து இருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய இயக்க உத்தி. இந்த உத்தியில் பிற முன்னணி இயக்குநர்களிடம் இருந்தும் தனித்து உயர்ந்திருக்கிறார் இயக்குநர் ஞானவேல்.
 
கதை நடந்து கொண்டிருக்கும் காலத்தில் யாருடைய ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதை விரல் சொடுக்கும் கணநேர ஒரு வசனத்தின் மூலம் புரிய வைத்து விடுவது (ஜெய்) பீம சாமர்த்தியம்.
 
படத்தில் ஆங்காங்கே வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு சமூக அவலத்தை உரிக்கிறது. உதவி கேட்டு வாசலில் நிற்கும் இருளர் இனத்தவரான நாயகியிடம், “இப்பவே ஓட்டுக்காக ஒவ்வொரு ஜாதிக்காரன் வீட்லயும் போய் கையேந்தி நிக்கிறோம். அடுத்து உங்களையும் தேடி வரணுமா..?” என்று வீட்டுக்குள்ளிருந்தே அரசியல்வாதியாக நடித்திருக்கும் இளவரசு கேட்கும் வசனம் சமூக சாதீய அடுக்குகளின் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளிவருகிறது. 
 
இருளர்களின் குழந்தைகள் காணாமல் போன தங்கள் தந்தையரைத் தேடும் முயற்சிதான் வழக்காக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அந்த நீதிமன்றத்தின் பெரும் கட்டடப் பரப்பில் வியந்து மகிழ்வுடன் இங்குமங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பது ஒரு நெகிழ்ச்சிப் பதிவு.
 
இது சமூக நீதி மட்டும் சொல்லும் படமா என்றால் இல்லை… வயலில் எலிகளைப் பிடிப்பதன் மூலம் வயலுக்குள் பாம்புகளை வராமல் தடுக்க முடியும் என்பதையும் சொல்கிறது திரைக்கதை. அதேபோல் பிடிக்கும் பாம்புகளை அடித்துக் கொன்று விட்டால் உலகமே எலிக் காடாகி விடும் என்று சொல்வதில் சுற்றுச்சூழலும், அதைக் காப்பாற்றும் வனக் காவலர்கள் இருளர்கள்தான் என்பதையும் போகிற போக்கில் சொல்வதை உற்று நோக்கினால் புரியும். 
 
ஒரே அறையில் இந்திக்கார சேட்டு தமிழ் பேசுவதும் துருத்தாத இன்னொரு அரைகூவல்..!
 
நீதி மன்ற நிகழ்வின் இன்னொரு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கு இதுவரை யாரும் காட்டாத கோணமாக கழுகுப் பார்வையில் ஒரு ஷாட் வைத்துப் புரிய வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் படத்தின் நம்பகத் தன்மையை முழுதும் தன் தோளில் சுமந்திருக்கிறார். அதில் பங்களித்திருக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் வந்தனங்கள்..! 
 
பாம்பைப் பிடிக்கக் கிளம்பும் மணிகண்டன் கூட்டிப்போக வந்திருக்கும் பெரிய வீட்டு ஊழியரின் வண்டியில் பின்னால் அமர்ந்து கொள்ளும் போது யதேச்சையாக கையை அவர் தோளில் போட, அவர் ஒரு முரட்டுப் பார்வை பார்ப்பதில் பயந்து கையை உடனே எடுத்துக் கொள்வதில் தொடங்கும் தீண்டாமை, பாம்பைப் பிடித்துக் கொடுத்ததற்கு ஊர்த்தலைவர் சன்மானம் கொடுக்க, அதை மறுக்கும் மணிகண்டன், “உங்க கிட்ட காசு வாங்கலாமா… அம்மா வேற நம்ம ஊரு…” என்று வெள்ளந்தியாகக் கூற ஊர்த்தலைவரின் மனைவி சினந்து, “ஒரே ஊர்ன்னாலும் நீயும், நானும் ஒண்ணாடா..?” என்று சீறுவதில் பாம்பைவிட கொடிய விஷம் கொண்டு வெளிப்படுகிறது.
 
அதேபோல் சல்லிக்காசு பெறாமல் வாதாடிய இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் தன்னை நம்பி வந்த பெண்ணுக்கான நீதியை பெற்றுத் தந்ததில் அத்தனை பேரும் பாராட்ட, ஆனால் யாருக்காக இத்தனை போராடினாரோ அந்தப் பெண்ணைக் காணாமல் மழையில் விரைந்து வெளியில் தன் மகளுடன் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் அவளிடம் ஒரு நன்றி கலந்த வணக்கத்தை சன்மானமாகப் பெறும் சூர்யாவும், அந்தப் பாத்திரத்தில் அடையாளம் தெரியும் நீதிமான் சந்துருவும், இந்த நிஜ வரலாற்றைத் திரையில் வடித்த இயக்குநர் ஞானவேலுவும் எழுந்து நின்று வணங்க வைக்கிறார்கள்.
 
அத்துடன் படம் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. படம் சொல்லும் செய்தி என்று இன்னொரு காட்சி வருகிறது. காலையில் சூர்யா செய்தித் தாள் படிக்க, தானும் ஒரு செய்தித்தாளைக் கையில் எடுக்கிறாள் செங்கனியின் மகள். சூர்யா அதைக் கவனிக்கும் ஒரு பார்வையில் அந்தத் தாளை அச்சத்துடன் கீழே வைக்க, “எடுத்துப் படி…” என்பதாக சூர்யா ஜாடை செய்ய, அவள் உற்சாகத்துடன் அவரைப் போலவே கால் மீது கால் போட்டு மிடுக்குடன் செய்தித்தாளைப் படிக்கும் காட்சியுடன் நிறைவது படம் மட்டுமல்ல – நம் மனதும் கூட. கல்வி மட்டுமே எல்லாத் தாழ்வையும் போக்கும் வல்லமை கொண்டது என்பதே அறிய வேண்டிய அரிய செய்தி.
 
ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் சூர்யாவிடம் “அவங்க பின்னால பணம், அதிகாரம், ஜாதின்னு எல்லாம் வரும். அவங்களை ஜெயிக்கிறது கஷ்டம்…” என்று அதிகார வர்க்கத்தின் ஆளுமையைச் சொல்ல “அவங்ககிட்ட எல்லாமே இருக்கு. ஆனா இவங்ககிட்ட நம்மைத் தவிர யார் இருக்கா..?” என்று கேட்பதுதான் நாமும் சொல்ல விரும்பும் செய்தியும் கூட. 
 
கண்ணைக்கட்டும் கமர்ஷியல் படங்கள் எப்படியும் கல்லா கட்டிவிடும். இது போன்ற சிறந்த படங்களைத்தான் நாம் கொண்டாட வேண்டும்..!
 
ஜெய் பீம் – இருள் வாழ்வில் ஒளி என்பதாக… இருளர் வாழ்வில் அறிவொளி..!
 
– வேணுஜி