August 24, 2026
  • August 24, 2026
Breaking News
August 22, 2026

இருமுடி கட்டு திரைப்பட விமர்சனம்

By 0 10 Views

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது முழுக்க ஒரு பக்திப்படம் என்று நினைக்க வேண்டியதில்லை. ஆனால், பக்தியும் படத்தின் ஒரு அங்கம்.

வாழைத் தார் அறுக்கும் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு  திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சபரி மலைக்கு மாலை போட்டு  குழந்தை பிறக்க, மணிகண்டன் என்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்க்கிறார்.

மகளுக்கு ஒன்று என்றால் கொதித்தெழும் ரவிதேஜா, ஒரு வருடம் ஐயப்பனுக்கு மாலை போட்ட வேளையில் மகள் பருவம் அடைகிறார். சபரி மலைக்குப் போய்வந்த பின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நினைத்த அவரது ஆசை நிறைவேறியதா..? என்பது கதை.

இந்தக் கதைக்குள் பள்ளி ஒன்றும் அதில் பயிலும் ஒரு மாணவி இறக்க, இன்னொரு மாணவி காணாமல் போக, ஏதோ பயங்கரம் நடக்கப் போகிறதென்று நம்மை எச்சரிக்கிறது திரைக்கதை.

ஒரு சாமானியனாக வலம் வரும் ரவி தேஜாவைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மாஸ் ஆன முன்னணி நடிகர் பாசத்துக்கு இதில் தனது மாஸை குறைத்துக் கொண்டு பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இருந்தாலும் அவர் கடைசியில் காட்டும் அதிரடி ஆக்சன் நியாயமாக இருக்கிறது. பெண்களை குறிப்பாகப் பெண் குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் பாசமும், மரியாதையும் சிலிர்க்க வைக்கிறது.

ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரும் கிளாமர் துளியும் இல்லாமல் பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

அவர்களது மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ராவின் அழகும், நடிப்பும் கவர்கிறது. கடைசியில் அவரது நிலை அப்படி ஆகியிருக்க வேண்டாம்.

ரவிதேஜாவின் சகோதரர் போல வரும் குருசாமி சாய் குமார் பாத்திரம் தரும் சஸ்பென்ஸ் அதிரடியானது.

அதேபோல் சிறந்த நடிப்பால் நமது அபிமானத்தை பெற்ற சுவாசிகாவையும் நாம் இப்படி எதிர்பார்க்கவில்லை.

இவர்களுடன் அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, மீசாலா லக்‌ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் கசிரப்பளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்ட அனைவரும் பொருத்தமான பாத்திரங்களில் வலம் வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, படத்துக்கேற்ற உணர்வைத் தான் திறமையும் மூலம் தந்திருக்கிறார்.

இந்த வருடத்தின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் பாசம், பக்தி, பரபரப்பு என்று மிரட்டி இருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சிவா நிர்வாணா, ஒரு மாஸ் ஹீரோவை கையில் வைத்துக்கொண்டு ஒரு பாசக் கதையை பக்தியும், தில்லும் கலந்து திறமையாக இயக்கி இருக்கும் தைரியத்தை பாராட்டலாம்.

அதிரடி காட்டும் இருமுடி கட்டு..!

– வேணுஜி