December 2, 2024
  • December 2, 2024
Breaking News
July 13, 2024

இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்

By 0 179 Views

காந்தி தாத்தா அகிம்சையால் இந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால் நேதாஜி வழிவந்த இந்த இந்தியன் தாத்தா நிறைய இம்சைகள் செய்து ஊழல்வாதிகளை களை எடுத்தார் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். 

சொந்த மகனே ஆனாலும் அவன் ஊழலுக்கு துணை போனால் அவனையும் கொல்வேன் என்று பெற்ற மகனையே கொன்றுவிட்டு முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார்.

அப்போது லட்சக்கணக்கில் ஊழல் நடந்து கொண்டிருந்த இந்தியாவில் இப்போது கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யம் நடக்க, அவர் வந்தால்தான் ஆச்சு என்று அவரைத் தேடி சமூக வலைதளங்களில் ‘கம் பேக் இந்தியன்’ என்று ஹேஷ் ஸ்டேக் போட்டு அழைக்கிறார்கள் Barking dogs என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் சித்தார்த், ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர்.

சமூக விழிப்புணர்வை யூடியூபின் மூலம் மக்களிடம் ஏற்படுத்தும் அந்த நண்பர்களின் குரல் தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தாவுக்குக் கேட்டு அவர் இந்தியாவுக்கு வருகிறார். 

அவர் வரும் செய்தி அப்போது அவரைப் பிடிக்க முயன்று தோற்றுப் போன சிபிஐ அதிகாரி நெடுமுடி வேணுவின் மகன் பாபி சிம்ஹாவுக்குத் தெரிய வருகிறது. இவரும் இப்போது சிபிஐ அதிகாரிதான். அப்பா விட்டதை மகன் பிடிக்க ஆசைப்படுகிறார். 

இந்தியன் தாத்தாவால் முன்பு போல் இந்தியாவில் லஞ்சாபிகேசன்களைத் தடுக்க முடிந்ததா, நெடுமுடி வேணுவின் சபதம் அவருடைய மகன் பாபி சிம்ஹாவால் நிறைவேறியதா என்ற கேள்விகளுக்கு விடைதான் இந்தப் படம்.

தைவானில் இருந்தாலும் இந்தியாவின் ஊழல் பெருச்சாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பது கண்டு அவ்வப்போது பார்ட் டைமில் அவர்களை போட்டு தள்ளி கொண்டுதான் இருக்கிறார் இந்தியன் தாத்தா என்பதை அவரது அறிமுக கட்சியிலேயே நமக்கு விளக்கி விடுகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்தியாவில் பல்லாயிரம் கோடி வங்கிகளில் கடன் வாங்கி எல்லா தொழில்களும் நஷ்டம் என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி அழகிகளுடன் குஜால் செய்து வரும் குல்ஷன் குரோவரை இந்தியன் தாத்தாவாக வரும் கமல் போட்டுத் தள்ளுவதில் இருந்து சூடு பிடிக்க  ஆரம்பிக்கிறது.

மீண்டும் சேனாபதியாக கமலைப் பார்ப்பதற்கு பரவசமாகவே இருக்கிறது. அந்த பிராஸ்தட்டிக் மேக்கப் போட்டுக்கொண்டு இத்தனை வயதிலும் எப்படித்தான் நடிக்கிறாரோ கமல்..? அட… நாக்குக்கும் கூட மேக்கப் போட்டு இருக்கிறார்கள். அந்த தடிமனான நாக்கில்  வார்த்தை குழறிப் பேசுவதில் கூட அத்தனை துல்லியம்.

அத்தனை மேக்கப்புக்கும் மேல் தெரியும் தன் நடிப்பையும் மேக்கப் செய்யும் கமலை இந்தியாவின் பெருமை என்று கொள்ளலாம். 

ஆனால் கடந்த படத்தில் அந்த வயதுக்கு அவரால் என்ன முடியுமோ அதைத்தான் செய்தார். ஆனால் அதற்குப்பின் 27 வருடங்கள் கழித்து வரும் இந்தப் படத்தில் அவர் என்னவெல்லாமோ செய்கிறார். அதை எல்லாம் நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இதற்கு அவர் தாத்தாவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்றும் தோன்றுகிறது. 

அத்துடன் தாத்தாவாக வருவதே அவர் மேக்கப் போட்டுக் கொண்டுதான் என்று இருக்க அந்த மேக்கப்புக்கு மேல் பல மேக்கப் போட்டுக்கொண்டு பலவித தோற்றங்களில் அவர் வருவதும் கொஞ்சம் நம்பகமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

தன் ஸ்டீரியோபோனிக் வாய்சுடன் ஸ்டீரியோ டைப் நடிப்பை இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார் சித்தார்த். பாய்ஸ் படத்தில் எப்படி பார்த்தோமோ அதேபோல் காட்சியளிப்பதற்கு பாராட்டுகள். ஆனால் நடிப்பிலும் அந்த அளவுக்குதான் இருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய மைனஸ்.

அவர் காதலியாக இருக்கிறாராம் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இருவரும் எங்கே காதலித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

Youtube மீடியா நடத்தும் சித்தாரத்துக்கு கூட தெரியாத அளவுக்கு புள்ளி விவரம், அந்தத் தொழில் பிடிக்காத ராகுலுக்கு தெரிகிறதாம்.

சித்தார்த்தன் அப்பாவாக சமுத்திரக்கனி தன் வழக்கப்படியே கைகளை விரித்துக் கொண்டு (அக்குளில் கட்டி..?) வந்து நடிக்கிறார்.

நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர் என்று நீளும் பட்டியலில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு செய்து அசந்து இருப்பார் ஷங்கர்.

இந்தியன் தாத்தாவைப் பிடிக்கும் அத்தனை பெரிய வேடம் கிடைத்தும் பாபி சிம்ஹா , கார்த்திக் சுப்புராஜ் படம் போலவே நடித்துவிட்டு போகிறார். அவரது உதவியாளராக வரும் விவேக்கைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது – அவராலும் நம்மை சிரிக்க வைக்க முடியவில்லை என்பதுதான் அது.

வில்லன்களில் குல்ஷன் குரோவரும், ஜாகிர் ஹுசைனும் நினைவில் நிற்கிறார்கள். அதிலும் ஜாகிர் ஹுசைன் ஓட்டும் அந்தக் குதிரை ஓட்டம் அதகளம். எப்படித்தான் அப்படி குதிரை ஓட்டினாரோ மனிதர்..? 

நூறு வயது தாத்தாவுக்கான ஆக்ஷனை அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு தீர்மானித்து இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா..?

முதல் பாகத்தையும் இந்த பாகத்தையும் கண்டிப்பாக ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. 

முதல் பாகத்தில் நமக்கு எல்லாமே புதிது அத்துடன் ஒரு இளம் வயது கமலும் அதில் இருந்தார். காதல், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லாமே அதில் பிரஷ்ஷாக இருந்தன. 

ஆனால் இதில் அதே இந்தியன் தாத்தா, அதே அரசு அதிகாரிகள், அதே ஊழல் லஞ்சம், அதே வர்மக்கலை என்று அதையே மீண்டும் பார்ப்பது சுவாரசியத்தைக் குறைக்கிறது. 

படம் நெடுக ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ‘கம் பேக் இந்தியன்’ என்று ஒரு ஹேஷ ஸ்டேக்கை சித்தார்த் போட்டால் ஒட்டுமொத்த இந்தியாவும் போடுமாம். அவருக்குத் தாத்தாவுடன் ஆன பெர்சனல் பிரச்சனையில் ‘கோ பேக் இந்தியன்’ என்று போட்டால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதை வழிமொழியுமாம்.

Youtube நண்பர்கள் நால்வரின் வீட்டிலுமே லஞ்சப் பேய்கள் பெற்றவர்களாகவும் உற்றவர்களாகவும் இருக்க அது குறித்து அவர்களுக்கெல்லாம் தெரியவே தெரியாது என்பது ஆனாலும் போங்கு. 

அப்பா ஊழல்வாதி என்று தெரிந்ததும் அவரை பிடித்து கொடுப்பதால் சித்தார்த்தின் அம்மா தற்கொலை செய்து கொள்கிறாராம். உடனே ஊரே சித்தார்த் மேல் கோபம் கொண்டு அம்மாவைக் கொன்றவன் என்று பழி சொல்கிறதாம். அம்மாவை எரிக்கும் போது அவள் முகத்தை கூட பார்க்க சித்தார்த் அனுமதிக்கப்படவில்லையாம். இப்படி எல்லாம் தட்டையாகதானா சென்டிமென்ட் காட்ட வேண்டும் ஷங்கர் சார்..?

ஊழலுக்காக பெற்ற மகனையே கொன்ற இந்தியன் தாத்தாவை உலகமே புகழ,  அப்பாவின் ஊழலை காட்டிக் கொடுத்த காரணத்திற்காக சித்தார்த் அம்மாவின் முகத்தை கடைசியாக பார்க்க கூட விடாமல் ஊரே தடுப்பது என்ன வகை தர்மம்..?

“கதற உடுறோம்…” பாடலில் மட்டுமே அடையாளம் தெரியும் அனிருத் மற்ற இடங்களில் மதமதப்பு காட்டி இருக்கிறார். அங்கங்கே ரகுமான் இசைத்தவை கடந்து போவதால் நம்மைக் கடந்த படத்துடன் கொஞ்சம் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. 

ரவிவர்மனின் ஒளிப்பதிவில் எந்தவிதமான அழகோவியமும் இல்லை. 

முத்துராஜன் கலைவண்ணம் ஜாகிர் ஹுசைனின் அந்தத் தங்க மாளிகையில் தெரிகிறது. ஆனால் அத்துடன் அந்த வண்ணமும் மறைந்து போகிறது. 

கடந்த படத்தில் சுஜாதா எழுதிய உரையாடல்கள் படத்தின் உயிர் நாடியாக இருந்தன. சுஜாதா செத்ததும் அந்த வசனங்களும் செத்து விட்டதாகவே தோன்றுகிறது. 

“நக்கல் இல்ல நிக்கல்… கருமம் இல்ல வர்மம்…” என்றெல்லாம் வசனங்கள் வந்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன. 

முதல் பாகம் முடித்துவிட்டுதான் ஏதோ இந்தியன் தாத்தா வர்மத்தைக் கற்று வந்தவர் போல முதல் படத்தில் பேசாததை எல்லாம் இந்தப் படத்தில் வர்ம கவிதையாகப் பேசி நம் காதில் குத்துகிறார்.

கடைசியில் மூன்றாவது பாகம் என்று ஒரு ட்ரெய்லரை போட்டு நம்மை அடுத்த கனவில் ஆழ்த்துகிறார் ஷங்கர்.

அதிலும் இதேதான் என்றால் இதுவே போதுமே சார்..?

இந்தியன் 2 – சகலகலா தாத்தாஜி..!