“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..?
“அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை.
திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பெண்ணிடம் அவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறார் லிஜோ.
அதேசமயம் ஊரிலிருந்து அவர் வீட்டுக்கு தங்கை முறை இளம்பெண் வர, அவளிடமும் தவறாக நடக்க ஹரி முயற்சிக்க, அப்போது எடுத்த முடிவின் படி அவரைப் போட்டுத் தள்ளி விடுகிறார்… ஆமாம். கொலையே செய்து விடுகிறார் – அதுவும் இடை வேளைக்கு முன்பாகவே.
அதற்குப்பின் எப்படித்தான் கதையைக் கொண்டு செல்வார்களோ என்று நாம் பதை பதைக்க, அந்தப் பதை பதைப்பு சிறிதும் இல்லாத லிஜோ தன் இயல்பில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் பிணம்?
அது பாட்டுக்கு ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. எப்படி டிஸ்போஸ் ஆகிறது என்பது பதறவைக்கும் கிளைமாக்ஸில்.
இந்தக் கதை நியாயமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு சிலர் “ஆமாம்…₹ என்று பதில் சொல்ல முடிந்தால் அது லிஜோவின் பண்பட்ட நடிப்பினால்தான் என்லாம். கணவனின் அன்பான சொல்லைக் கேட்க, அவ்வளவு ஆர்வம் காட்டுவதில் மொத்தமாக நெஞ்சை அள்ளுகிறார்.
ஹரி கிருஷ்ணனுக்கு இது கொஞ்சம் அதிகப்படியான கனம்தான். ஆனால், அவரது பாத்திரம் கொலை செய்யும் அளவுக்கான அத்து மீறலில் இல்லை.
ஹரியின் ஆசை நாயகியான லோஸ்லியாவைச் சொல்லியாக வேண்டும். ஒரு பக்கம் அழகு இன்னொரு பக்கம் அற்புத நடிப்பு என்று அசத்துகிறார். அவரை லிஜோவே ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளும் அளவில் இருக்கிறது அவர் பாத்திரத்தின் நியாயம்.
லிஜோவின் தங்கையாக வரும் தாரணிக்கு சிறிய பாத்திரம் என்றாலும் மனதில் நிற்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தியின் நடிப்பும், வட்டார உச்சரிப்பும் கவர்கிறது., .
போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கும் சுதேஷ், சரியான தேர்வு. அவர் வில்லத்தனத்துக்கும் ஒரு ஃப்ரிட்ஜ் பதில் சொல்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்களத்தை ஒத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன் பங்களிப்பிலும் நிகர நியாயம்.
இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் கதை நகர்த்தலில் பரபரப்பு ஏதுமில்லை. ஆனால், விவாதத்துக்கு வழிவகுக்கிறது.
ஜென்டில்வுமன் – கணவர்கள் ஜாக்கிரதை..!
– வேணுஜி