‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..?
உங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம்.
அறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் அந்த அறிவுடன் திருப்திப்படுவது இல்லை… அதில் நம்பர் ஒன் ஆகக் கனவு கண்டு அந்தக் கனவைச் சுமையாக்கி பிள்ளைகளின் முதுகில் ஏற்றி விடுகிறார்கள். சுமாரான கற்றலுள்ள பிள்ளையைப் பெற்றவர்கள் பற்றியும், கற்றலில் பின்தங்கி விடும்பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றியும் சொல்லவே வேண்டாம்.
வராத கல்வியை வறட்டுப் பிடிவாதத்துக்காக இழுந்து வைத்து குழந்தைகளின் தாங்கும் திறன் அறியாமல் தங்கள் விருப்பத்துக்கு வளைக்கும்போது அந்த முயற்சி எதில் கொண்டுபோய் விடுமென்பதுதான் படத்தின் மையக்கரு.
கேட்டுவிட்டு “இதுதானா..?” என்று இளக்காரமாகக் கேட்டுவிடாதீர்கள். அதைத் திரைக்கதையாக்கிச் சொல்லியிருக்கும் விதத்தில் உங்களுக்கு இரண்டு நாள் தூக்கம் தொலையும். ஆனால், உங்கள் குழந்தைகளைப் பற்றி அனாவசியமாக நீங்கள் கொண்டிருக்கும் துக்கமும் தொலையும்.
அப்படி அனைத்துப் பாடங்கள் மற்றும் அத்தனைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த மாணவன் ஒருவனைப்பற்றிய கதைதான் இது. ஆண்டுவிழாவில் வைத்து அத்தனை போட்டிகளின் முதல் பரிசுகளையும்பெறும் அந்த மாணவனின் தந்தையை மேடையில் அழைத்துப் பாராட்டித் தொலைக்க, “என் மகனை எப்படி வளர்க்கிறேன்… பார்…” என்று சூள் கொள்ளும் தந்தை அவனை எல்லா துறைகளிலும் ஈடுபடுத்தி எப்படி அவன் வாழ்வைச் சிதைக்கிறார் என்பதை புத்தகமும், பாடமுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
அவர் வளர்ந்து வேலைக்குப் போகும் இடத்திலும் “சிக்கிட்டாண்டா ஒரு செக்கு மாடு..” என்று அவர் தலையிலேயே ஏகப்பட்ட வேலைகளைச் சுமத்த ஒரு கடத்தில் ‘பிளாக் அவுட்’ ஆகி ஒன்றுக்கும் உதவாத மனவியல் பிரச்சினைக்கு ஆகிறார். எப்படி மீண்டார் அல்லது மீட்கப்பட்டார் என்பது மீதிக்கதை.
படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கும் ரோஷன் மிகப்பெரிய தன்னம்பிக்கை வாதியாக இருக்க வேண்டும். தான் அறிமுகமாகும் கதையில் நாலு ஃபைட், நாலு சாங் வைத்தோமா சந்தோஷப்பட்டோமா என்றில்லாமல் நாட்டுக்கு நல்லது சொல்லும் கதையில் துணிந்து நடித்திருக்கிறார். அதற்கே பாராட்டுகள்..!
நடிப்பிலும் குறை வைக்கவில்லை அவர். தன் பிரச்சினையைத் தான் புரிந்து கொள்ளும் வரையில் அவரது குழப்ப மனநிலையிலான நடிப்பு பாராட்ட வைக்கிறது. உணர்ச்சி மேலிட்டுப் போனால் எதிரே நிற்பது அப்பாவே என்றாலும் அவரையும் எதிர்க்கும் மனநிலையில் மிரள வைக்கிறார். அவர் உயரம், உடல் கட்டுக்கு விஜயகாந்த், சரத்குமார் இடங்களைப் பிடிக்க முயற்சி செய்யலாம்.
புது ஹீரோ மற்றும் கேரக்டரின் தன்மை காரணமாக ஹீரோயினும் புதுமுகமாகவே அமைந்து விட்டாற் போலிருக்கிறது. ஆனால், நாயகியாக நடித்திருக்கும் ‘ப்ரியா லால்’ மனத்தில் பதிகிறார். தவறான இடத்தில் இருந்தாலும் சரியான மனநிலையில் பேசும் அவரது பேச்சுகளும், கருணையும் எவரையும் வசீகரிக்கும் தன்மையில் அமைந்திருப்பதும், அதைச் சரியாக ப்ரியா வெளிப்படுத்தியிருப்பதும் அவரது பாத்திரத்தை பெருமைப்படுத்துகின்றன.
கொஞ்ச காலமாகவே வந்தோம், போனோம் என்றிருந்த நரேனுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ள படம் இது. மகனுக்காக மேடையேறிப் பெருமை கொள்ளும்போதாகட்டும், அந்தப் பெருமை தந்த போதையில் மகனுக்கான வடிகால்கள் அனைத்தையும் அடைத்து அவனை இறுக்கத்துக்குள்ளாக்கும் தன்னலத்திலாகட்டும், கடைசியில் மகன் வாழ்வை அழித்தவராக மனைவியாலேயே குற்றம் சாட்டப்படும்போது உடைந்து நொறுங்குவதிலாகட்டும் ‘நன்று’ பெறுகிறார் நரேன்..!
வேண்டாவெறுப்பாகப் போய் ப்ரியாலாலைப் பார்த்து நாலு வார்த்தை பேசிய மாத்திரத்திலேயே “இவள்தான் என் மருமகள்” என்று தேர்வு செய்வது அசத்தல்..!
அவருக்கு இணையாக அவர் மனைவியாக வரும் மீராகிருஷ்ணனும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். கொஞ்சமாக வந்தாலும் அளவாக சிரிக்க வைத்து அழவும் வைக்கிறார் சிங்கம்புலி. ரோஷனின் தாத்தாவாக வரும் கவிஞர் ஜெயபாலனும் கச்சிதம்.
யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதனாலேயே, வைரமுத்துவின் பொருள் பொதிந்த பாடல்கள் அமுங்கித் தெரிகின்றன. அமுதேஸ்வரின் வசனங்களும், ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் துல்லியமாகப் பாய்ந்திருக்கின்றன.
எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டும் எடுத்திருப்பதால் பாடமாக இருக்கும் படம் சோதித்துவிடாமல் ‘பட்’டென்று முடிகிறது. மகனைக் கெடுத்த நரேனே கடைசியில் பேரனை சேற்றில் ஆடவிட்டு அழகு பார்க்கும் முடிவு நெகிழ்ச்சி. இதுபோன்ற படங்களை அரசே ஆதரிக்கவேண்டும்.
ஜீனியஸ் – பெற்றோருக்கான ‘கோனார்’ நோட்ஸ்..!
– வேணுஜி