விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2.
இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பையும், ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
‘கட்டா குஸ்தி 2’ வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு படம் பற்றி கூறியதிலிருந்து…
“விஷ்ணு விஷாலை சந்தித்து இன்னொரு கதை சொன்னேன். ஆனால், அவர் என்னிடம் கட்ட குஸ்தி இரண்டாவது பாகம் செய்யலாமா என்று கேட்ட போதுதான் இந்த யோசனை தோன்றியது. அதைத் தொடர்ந்து அது பற்றி இருவரும் அரை மணி நேரம் பேசினோம், அப்படி உருவானது தான் இந்தப்படம்.
கட்டா குஸ்தி முதல் பாகத்தில் இருந்த பல சுவாரஸ்யங்கள் இதிலும் இருக்கிறது, ஆனால் அவை அனைத்துமே வேறு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி எந்த விபரமும் தெரியாமல் இருப்பது இடைவேளை திருப்பமாக இருந்தது. அப்படி ஒரு திருப்பம் இந்த படத்திலும் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்..!”
நடிகர் விஷ்ணு விஷால் பேசியதிலிருந்து…
“என்னுடைய பல வெற்றிப் படங்களின் கதை சொல்லும் போதே இரண்டாம் பாகம் இருப்பதாகதான் சொல்வார்கள், ஆனால் பால் காரணங்களால் அவற்றைப் பண்ண முடியாமல் போய் விட்டது.
அப்படி ‘ராட்சசன்’, ’முண்டாசுப்பட்டி, ’இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் இரண்டாம் பாகம் பண்ண யோசனை இருந்தும் கை கூடவில்லை. எஃப்.ஐ.ஆர் படத்தின் கதை கூட இரண்டு பாகமாக எடுக்க வேண்டி இருந்தது, அதுவும் பண்ண முடியவில்லை. அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்துதான் செல்லாவிடம் பேசி இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறோம்..!”
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதிலிருந்து,
“நான் நடிகையானதாயே எனக்கு கிடைத்த வரம் என்று நினைப்பவள் நான். அப்படி இருக்க கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, எங்கேயோ நான் செய்த புண்ணியம் என்றுதான் சொல்வேன். பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. கதை கேட்கும் போதே இதை தவற விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். இப்போது கட்டா குஸ்தி 2 பாகம் கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்…!”
கேள்வி நேரத்தின்போது, “கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படாதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “என் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் ஐபிஎஸ் ஆனார். அவரை தொடர்ந்து என் குடும்பத்தில் என் அக்கா சுப்ரா சிறப்பாக படித்து, இன்று உலகளவில் முக்கியமாக இருக்கும் ஒரு வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகுதான் எங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைந்தது. என் சினிமா பயணத்திற்கும் அவர் தான் உறுதுணையாக இருக்கிறார். அதனால் தான் நான் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறேன்.
என் அக்காவின் முன்னேற்றத்திற்கு என் அம்மாவின் உழைப்பும் ஒரு காரணம். அப்பா காவல்துறை அதிகாரி என்பதால், பல ஊர்களுக்கு மாறுதல் பெற்று செல்வோம், அடிக்கடி பள்ளிகள் மாறும். அம்மாதான் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்துக் கொள்வார்.
இப்படி என் வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குடும்ப முன்னேற்றத்திலேயே அவர்களது பங்கு இருக்கும் போது, நான் ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க கூடாது என்றுதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன்..!
‘கட்டா குஸ்தி 2’ வில் முதல் பாகத்தில் இருந்த அனைத்து விஷயங்களும் வேறு விதமாக இருக்கும். மனைவியை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் கணவர், அதற்கு என்னவெல்லாம் செய்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார், என்பதுதான் கதை. அது எனக்குப் பெருமை சேர்ப்பதாகத்தான் இருக்கும்” என்றார்.
அத்துடன் பெண் முன்னேற்றத்தை முன்னிறுத்தினாலும் அதைக் காமெடி ஜேனரில் கொடுத்திருக்கிறோம். செண்டிமெண்ட், ஆக்ஷன் போன்றவற்றை எளிதாக செய்து விடலாம். நகைச்சுவைதான் கஷ்டம். டைமிங் சரியில்லை என்றால் அது காமெடியாக இருக்காது.
மக்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் திரைப்படங்களை பார்க்கிறார்கள். கருத்து சொல்லும் படங்கள் எடுக்கலாம், அதற்காக காமெடி படங்கள் எடுக்காமல் இருக்க கூடாது. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு காமெடி படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன்.” என்றவர் மகிழ்ச்சியுடன் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“என்னுடைய படங்களில் பெரிய வியாபாரம் ஆன படம் இதுதான். ஐசரி கணேஷ் சார் படம் பார்த்துவிட்டு, “என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் ‘கட்டா குஸ்தி 2’ மிகச்சிறந்த படம்” என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது, அது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்..!” என்றார்.
தியேட்டர்களிலும் பெரிய கல்லா கட்டட்டும் கட்டா குஸ்தி 2.
– வேணுஜி