படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமார், இந்தப் படத்தில் தொப்புள்கொடி உறவுடன் ரத்தமும் சதையுமான ஒரு உண்மைக் கதையைத் தாங்கி நடத்திருக்கிறார்.
இதிலும் அவர் இலங்கைத் தமிழராகவே வருகிறார்.
1991 ல் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் அவர் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அங்கே ஏற்கனவே அவரது கர்ப்பிணி மனைவி லிஜோ மோல் ஜோஸ் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, கணவனும் மனைவியும் சேர்ந்த அந்த சந்தோஷம் இரண்டு நாள் கூட தாங்கவில்லை.
இதே நேரத்தில் சென்னைக்கு அருகே பாரதப் பிரதமர் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட… சம்பவத்தின் சமீபத்தில் தமிழகம் வந்த அத்தனை இலங்கைத் தமிழர்களையும் பிடித்துக் கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் வேலூர் கோட்டையில் அடைக்கிறது போலீஸ்.
இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று சொல்லப்பட்டு அழைத்துக் கொண்டு போன அத்தனை இலங்கைத் தமிழர்களையும் அங்கே பல விதமான சித்திர வகைகளுக்கு உள்ளாக்கி வருடக் கணக்கில் தங்க வைக்கிறார்கள்.
இந்த நேரத்தில் லிஜோ மோல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அதற்கும் நான்கு வயதாகி விடுகிறது.
இந்த சூழலில் ஒரு முறை கூட கணவனின் முகத்தை காண முடியாமல் ஏங்கித் தவிக்கிறார் அவர். நான்கு வருடங்கள் தொடரும் அந்தக் கோட்டைக் கொட்டடியில் இருந்து சசிகுமாரும் பிற இலங்கைத் தமிழர்களும் மீண்டார்களா என்பதுதான் மீதிக் கதை.
இனி தமிழ்நாட்டில் பேசக்கூடிய தமிழ், சசிகுமாரின் நாக்கில் வருமா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு படங்களாக இலங்கைத் தமிழில் சரளமாக பேசி வருகிறார் சசி. ஒரு கதாநாயகன் இத்தனை அடி வாங்கி நடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
ஹீரோயினத்தை காட்ட இவருக்கும் இதில் வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், அதையும் தாண்டி அவர் தாக்கப்படும்போது நமக்கு பகீர் என்கிறது. தன்னைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் அவர் அதிலிருந்து அவர்களை மீட்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை அவரது ஆக்ரோஷமான நடிப்பு காட்டுகிறது.
லிஜோ மோல் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அறிமுகக் காட்சியிலேயே கர்ப்பிணியாக வந்து கணவனைக் கண்ட சந்தோஷம் இரண்டொரு நாட்களிலேயே பறிக்கப்பட்டு மீண்டும் அவரைக் காண நான்கு வருடங்களாக ஏங்கித் தவிக்கும் வேடத்தில் நம் மனதை நெகிழச் செய்து விடுகிறார். இருவரும் சந்திக்க நேரும் ஒரு காட்சியில் அப்போதும் அவர்களைச் சந்திக்க விடாமல் சூழ்நிலை தடுக்கும் போது நமக்கு கண்ணீர் வந்து விடுகிறது.
விசாரணை இன்ஸ்பெக்டராக வரும் சுதேவ் நாயர்தான் படத்தின் வில்லன் எனலாம். தமிழர்களை விசாரிக்க ஒரு தமிழ் காவல் ஆய்வாளர் இருக்கக் கூடாது என்று சேட்டன் ஆன அவரை அமர்த்துகிறார்கள்.
அவரும் தன் பங்குக்கு எல்லா இம்சைகளையும் தமிழருக்குக் கொடுத்து விடுகிறார். அதிலும் சசிகுமார் கையால் அடி வாங்கிய அவமானத்தைத் துடைக்க சசியை கொலை செய்யும் அளவுக்குப் போகும்போது அவரது வில்லத்தனம் நன்றாகவே வெளிப்படுகிறது.
சிபிஐ அதிகாரியாக ரமேஷ் கண்ணாவைப் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் கொஞ்சம் சிரிப்பு வந்து விடுகிறது – அவர் சீரியஸாகவே நடித்திருந்தாலும்…
சசிகுமாருடன் கொட்டடியில் அடைபட்டுக் கிடப்பவர்களில் மு.ராமசாமி தன் அற்புதமான நடிப்பாற்றலால் நெகிழச்செய்கிறார்.
சித்திரவதைகளுக்கு நடுவிலும் சித்திரங்கள் வரைந்து தள்ளும் வாயில்லாப் பூச்சி மணிகண்டனின் முடிவு சோகத்தில் ஆழ்த்துகிறது.
சிக்குண்டவர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் வழக்கறிஞர் மாளவிகா நடிப்பு கச்சிதம். ஆனால், அவர் மேக்கப்பைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
முன்னாள் பிரதமர் கொலையுண்ட சம்பவத்தை நம்பகமாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சத்ய சிவா. அங்கிருந்து படம் ஆரம்பமானாலும் அதைத் தாண்டி தமிழகத்தில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் செய்தியாக இடம் பெற்றும் அதை வேறு யாரும் படமாக்காமல் விட்ட நிலையில், ஒரு வரலாற்றுச் சம்பவமாக இந்தப் படத்தை பதிவு செய்திருக்கும் அவரது துணிச்சலைப் பாராட்டலாம்.
கொஞ்சம் சினிமாவாகக் கடக்கும் முதல் பாதியை விட உணர்ச்சியும், ஒற்றுமை உணர்வும் கொண்டு கடக்கும் இரண்டாவது பாதி நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. கடைசி கடைசி என்று சசிகுமாரும் அவருடன் விசாரணைகக்கு உட்பட்டவர்களும் எடுக்கும் ஒரு முயற்சி நமக்குப் பதை பதைப்பை ஏற்படுத்திவிடுகிறது.
அதை மேலும் கூட்ட உறுதுணை செய்திருக்கிறது ஜிப்ரானின் உணர்வுபூர்வமான இசை.
உதயகுமாரின் ஒளிப்பதிவும், சம்பவம் நடந்த காலகட்டத்தையும், களத்தையும் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறது.
“சுதந்திரம் என்பது பிரச்சனைகள் இல்லாமல் வேற்று மண்ணில் வாழ்வது அல்ல; சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வது… ” என்று சசிகுமார் லிஜோ மோலிடம் பேசும் வசனம் தான் இந்தப் படத்துக்கு ஆணிவேர்.
வழக்கமான சினிமாத்தானங்களும், அது தொடர்பான லாஜிக் மீறல்களும் இருந்தாலும், நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாத ஒரு கனமான கதையை அலுப்பு தட்டாமல் திறம்படக் கொடுத்திருப்பதில் இயக்குனர் சத்யசிவாவும் சசிகுமாரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
ப்ரீடம் – உண்மைத் தமிழர்களுக்கு உணர்ச்சி பீறிடும்..!
– வேணுஜி