December 20, 2025
  • December 20, 2025
Breaking News
December 17, 2025

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா..!

By 0 37 Views

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகச் செயல்பட்ட அனுபவத்தின் மூலம், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள் உண்மைத்தன்மை கொண்ட தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் பகிர்ந்து வருகிறார். மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த சேனலின் மூலம் ஆவணப்படுத்தப்படுகின்றன. பரபரப்பையும் ஊகங்களையும் தவிர்த்து, சினிமாவின் கலை, பண்பாடு, பணிமுறைகள் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து மட்டுமே டூரிங் டாக்கீஸ் பேசுகிறது.

 

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா

 

இத்தகைய பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட டூரிங் டாக்கீஸ் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)” விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விருது விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சித்ரா லட்சுமணன் அவர்கள் பேசும்போது, இந்த விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம். நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ் அவர்கள், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, திருமதி குஷ்பூ சுந்தர், திரு. இளவரசு, திரு. முரளி ராமசாமி, திரு. டி. சிவா, திரு. ஆர். கே. செல்வமணி, திரு. ஆர். பி. உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. நன்றி வணக்கம்.

மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். சித்ரா லட்சுமணன் அவர்களிடம் பிடித்த விஷயம் காயப்படுத்தாத பேனா எதையும் நியாயப்படுத்தும். பன்மையான பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். இனி வரும் ஆண்டுகளில் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) விருது பெற்றுக் கொண்டேன் என்று அனைவரும் பெருமை கொள்வார்கள். டூரிங் டாக்கீஸ் எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த விருது விழாவும் வெற்றி பெறும் நன்றி.

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். ஒரு காலத்தில் நான் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்த ஒரு நபர் சித்ரா லட்சுமணன் அவர்கள். அவரை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டவன் நான். நான் ஒரு இயக்குனராக வேண்டும் என்று சென்னை வந்தவன். ஆனால் சித்ரா லட்சுமணன் போன்றவர்களை பார்த்து தான் தயாரிப்பாளராக மாறினேன். அவரிடம் உள்ள விடாமுயற்சியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய உயரங்களையும், தாழ்வுகளையும் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். டூரிங் டாக்கீஸ் சேனல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அவருடைய விருது விழாவில் 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு ஊடக நண்பர்களின் ஒத்துழைப்பும் அவசியம். நன்றி..!

இயக்குனர் RV உதயகுமார் அவர்கள் பேசும்போது, சித்ரா லட்சுமணன் எதையும் சரியாக திட்டமிட்டு செய்வார். அவருடைய திரை உலக பயணம் என்பது ஒரு நீண்ட கால பயணம், சாதாரணமாக வந்து வடவில்லை. அவர் தயாரித்த ஒவ்வொரு படங்களும் சிறந்தவை. எந்த ஒரு பொறுப்பிலும் தன்னுடைய முழு உழைப்பை கொடுப்பவர் சித்ரா அண்ணன். எதை செய்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். யாரையும் புண்படுத்தாமல் பேசும் உண்மையான youtube சேனல் என்றால் அது டூரிங் டாக்கீஸ் தான். தற்போது ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழாவை தொடங்கியுள்ளனர். இன்று விருதுக்கு உண்டான மரியாதை போய்விட்டது. விருதுகள் வியாபாரம் ஆகிவிட்டது. யார் விழாவிற்கு வந்தாலும் அவர்களுக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது. உலகளவில் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது வாங்குவது பெருமைப்படும் விதத்தில் இந்த விருதை கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம். இதனை ஒரு மகிழ்ச்சியான பயணமாக எடுத்துக் கொண்டுள்ளோம். வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள் பேசும்போது, பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். எப்போதும் கற்றுக் கொள்வதற்கு வயதில்லை. நல்ல பத்திரிகையாளர் என்ற முறையில் சித்ரா லட்சுமணன் அவர்களை ஆரம்ப காலத்தில் இருந்து தெரியும். இந்த காலத்தில் விளம்பரம் என்பது கண்டிப்பாக தேவை. ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) என்பது ஒரு நல்ல பெயர். விருது வழங்கும் விழாவில் நடுவராக இருக்கும்போது ரெக்கமண்டேசன் அதிகமாக வரும். மனசாட்சியை தூக்கி வைத்துவிட்டு, நியாயமாக இதனை செய்யும் போது நிறைய பேரிடம் திட்டு வாங்க வேண்டி வரும். இந்த விருது வழங்கும் விழாவை நியாயமான முறையில் சரியான முறையில் வழங்குவார்கள். வரும் காலங்களில் சித்ரா லட்சுமணன் அவர்களின் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) விருது வாங்குவது மரியாதையான விஷயமாக இருக்கும். நன்றி வணக்கம்..!

ஆர்கே செல்வமணி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். கடந்த மாதம் சித்ரா லட்சுமணன் அவர்கள் இந்த விருது விழாவை பற்றி என்னிடம் பேசியிருந்தார். தற்போது விருது விழாக்கள் மிகவும் குறைந்துள்ளது. OTT வந்த பிறகு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் விருது விழாக்கள் குறைந்துவிட்டது. விருது வழங்கும் விழாக்கள் கலைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்து வந்தது. அவர்கள் விருது வாங்கவில்லை என்றாலும், அவர்களின் நண்பர்கள் விருது வாங்கும் போது தீபாவளி போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கும். கோவிட் காலத்திற்கு பிறகு இது போன்ற விழாக்கள் இல்லாமலே போய்விட்டது. சித்ரா லட்சுமணன் அவர்களை 40 வருடமாக தெரியும். உதவி இயக்குனர், இயக்குனர் என தொடர்ந்து அவருடன் பயணம் செய்திருக்கிறேன். சித்திர லட்சுமணன் அவர்கள் எதை செய்தாலும் அதில் குவாலிட்டி இருக்கும். எல்லா மனிதர்களையும் சமமாக நடத்துவார். எந்த வேலை எடுத்தாலும் அதில் சரியாக இருப்பார். ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழாவில் எங்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இந்த விருது விழா அவருக்கு ஒரு அடையாளமாக இருக்கும். நன்றி

விழா அமைப்புக் குழு

திரு. ஏ.சி. சண்முகம், திரு. ஐசரி கணேஷ், திரு. கண்ணன் ரவி (துபாய்) ஆகியோர் இணைந்து வழங்கும் இந்த பிரம்மாண்டமான விருது விழாவை, பல ஆண்டுகளாக விருது விழாக்களை வெற்றிகரமாக நடத்தி வரும் அனுபவமிக்க பத்திரிகைத் தொடர்பாளர்களான திரு. சிங்கார வேலு, திரு. ரியாஸ் கே. அஹமத், செல்வி. பாரஸ் ரியாஸ் ஆகியோர் அமைப்பாளர்களாக ஒருங்கிணைக்கின்றனர்.

நிகழ்ச்சி விவரங்கள்…

நிகழ்ச்சி தேதி: 25 ஜனவரி 2026

நிகழ்ச்சி இடம்: காமராஜர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.