May 29, 2026
  • May 29, 2026
Breaking News
May 28, 2026

ஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்

By 0 45 Views

ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம். 

ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார். அவர் ஈகோவை சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கிறார். அத்துடன் சாதி வெறியராகவும் இருக்கிறார்.

இன்னொரு பக்கம் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் நாயகன் சிபி புவனச்சந்திரன். அவருக்கு கல்லூரி மாணவி கீர்த்தனா மீது காதல் வர, இருவரும் காதலித்து வருவது இன்னொரு பக்கம்.

ஆனால், சிபி புவனச்சந்திரன் பிளாஷ் பேக்கில் தன் உயிரை காப்பாற்றியது மட்டுமன்றி தட்டிக் கொடுத்து வளர்த்த ரோபோ சங்கரை தெய்வமாக மதிக்கிறார்.

ஆனால், வளர்ந்ததும்  ரோபோ சங்கரின் ஈகோவும் சாதி வெறியும் அவரை ரொம்பவும் பாதிக்க… அதன் முடிவு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

தலைமை ஆசிரியர் சுந்தரராமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர், தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். 

வழக்கமாக சற்று நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்த அவரை இப்படத்தில் முழுவதும் சீரியஸான வேடத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. அவரது ஈகோ தலை தூக்கும் இடங்களில் எல்லாம் விரல்களைக் கடித்து அவர் செய்யும் மேனரிஸம் புதியது.

அதையே அவர் சிரமப்பட்டு நடித்துக் கொண்டிருக்க ஆனால் இன்னும்… இன்னும்… என்று கேட்டு இருப்பார் போலிருக்கிறது இயக்குனர். புட்டேஜ் போவது தெரியாமல் நடித்துத் தள்ளி இருக்கிறார் ரோபோ.

அம்மாவின் கனவை நிறைவேற்ற போராட்டத்துடன் கல்வி பயிலும் இளைஞர் கதாபாத்திரத்திற்கு சிபி புவனச்சந்திரன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

தாயின் மீது காட்டும் பாசம், நாயகி கீர்த்தனா மீதான காதல், தலைமை ஆசிரியர் மீதான மரியாதை, பிறகு அவரது துர்க்குணம் தெரிந்து ஏற்படும் ஏமாற்றம் என்று எல்லா ஏரியாக்களிலும் மிதமாக நடித்திருக்கிறார். 

ஒரு ஹீரோவுக்கு உண்டான எல்லா லட்சணங்களும் பொருந்தி இருப்பதால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் எளிதாக முன்னணிக்கு வரலாம்.

அடுத்த வீட்டுப் பெண் போல தோன்றும் அறிமுக நடிகை கீர்த்தனா, புறத்தோற்றத்தில் பெரிதாக கவராமல் விட்டாலும் நாயகன் மீது காட்டும் உண்மையான காதலில் பேரழகியாகத் தெரிகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன்ராஜ், லதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜினோ பாபுவுக்கு பட்ஜெட்டை போலவே படத்தின் களமும்  செழிப்பாக அமையாவிட்டாலும் இருப்பதை வைத்துக் கொண்டு இயல்பாக படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ரெய்மன் ராட்ரிக்ஸ் பாடல்களுக்கான இசையில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் நிறைவாகச்  செய்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் கணேசன் நாச்சிமுத்து எடுத்துக் கொண்ட லைன் வித்தியாசமாக இருந்தாலும், ரோபோ சங்கரின் பாத்திரப்படைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். 

அவருக்கு இருப்பது ஈகோவா, சாதி வெறியா என்பது சரியாக சொல்லப்படவில்லை. அவர் ஒரு சாதி வெறியர் என்றால் சிபி புவனச் சந்திரன் சிறுவனாக இருக்கும் போதே அதைக் காரணம் காட்டி அவனை சிறுமைப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் அவனைத் தட்டிக் கொடுத்து வளர்க்கிறார். ஆனால் வளர்ந்ததும் திடீரென்று அவனது சாதியைக் காரணம் காட்டி சிறுமைப்படுத்துவது பொருத்தமாக இல்லை.

அதேபோல் ரோபோ சங்கரிடமிருந்து நடிப்பை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எடிட்டரிடம் சொல்லி எங்கேயும் கட் செய்து விடாமல் நீள நீளமான எக்ஸ்பிரஷனை எடுத்து வைத்திருப்பது நமது பொறுமையை அங்கங்கே சோதிக்கிறது.

ஆனால் வெட்டு, குத்து, ரத்தம், கவர்ச்சி எல்லாம் இல்லாமல் கல்விக்கு முக்கியத்துவம்… அதிலும் ஆசிரியருக்கே நல்லொழுக்கம் கற்பிக்கும் இந்த படைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

ஈகோ ராமன் – ஆசிரியருக்கே பாடம்..!

– வேணுஜி