May 29, 2026
  • May 29, 2026
Breaking News

பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்

By on May 29, 2026 0 4 Views

இந்தப் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் கமலின் தீவிர ரசிகர் போல் இருக்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அதன் அடிநாதமான வசனத்தை கமல் ஓரிடத்தில் பேசுவார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர்கள் நமது உறவினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்பதுதான் அது. 

அந்தப் படத்தில் மட்டுமல்ல, இந்தப் படத்திலும் அடிநாதம் அதுதான். 

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன் தனது மகளையும் ஒரு கராத்தே சாம்பியனாகவே வளர்க்கிறார். “கண்ணெதிரே அநியாயம் நடக்கும்போது பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ, அநியாயம் செய்பவர்களைத் தட்டிக் கேட்க வேண்டும்..!” என்று அறிவுரை சொல்லியே அவளை வளர்க்கிறார். 

அர்ஜுனின் மனைவி அபிராமியும் ஒரு கராத்தே வீரராக இருக்க அந்த குடும்பமே சாம்பியன்கள் கொண்ட குடும்பமாக இருக்கிறது.

காலங்கள் உருண்டோட அர்ஜுனின் மகள் பருவ வயதடைகிறார். அந்த வேடத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடிக்க அப்பாவின் சொல்படியே கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டி கேட்டு ஒவ்வொரு பிரச்சினையாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார். திருமணமாக வேண்டிய பெண் இப்படி வம்புகளை வளர்த்துக் கொண்டிருப்பது பிடிக்காமல் அபிராமி அதை எல்லாம் நிறுத்தச்  சொல்கிறார்.

இன்னொரு பக்கம் மிகப்பெரிய தொழிலதிபரான ஜான் கோக்கன் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதற்கு அனுமதி தரும் அமைச்சர் தேனுப்பனுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக ஒத்துக்கொள்கிறார். 

அதைப் பணமாகவே தேனப்பன் கேட்க துபாயில் இருக்கும் ஒருவர் மூலமாக அதைத் தர ஏற்பாடு ஆகிறது. அதன் துருப்புச்சீட்டாக ஒரு நூறு ரூபாய் இருக்க, அதை வைத்திருக்கும் வில்லன் அர்ஜுன் சிதம்பரத்தின்  சதிவலைக்குள் சந்தர்ப்ப வசமாக ப்ரீத்தி அகப்பட்டுகொள்ள…

அதற்குப் பின் நடப்பவை எல்லாமே பிளாஸ்ட் தான்..!

அர்ஜுனின் ஆக்சன் பற்றி யாரும் பெரிதாக சந்தேகம் கொள்ளப் போவதில்லை. அவர் நடப்பதே ஒரு சண்டை முறை போலத்தான் இருக்கிறது. ஆனால் அவரது ட்ரேட் மார்க் ஆன ‘அத்தேரிக்கா ‘ வைப் படம் முழுவதும் காணோமே என்று பார்த்தால் கிளைமாக்ஸில் அந்த பஞ்ச் பிளாஸ்ட் ஆகிறது. 

அபிராமி எல்லாம் சண்டை போடுவார் என்று நாம் அல்ல… அபிராமியே நினைத்திருக்க மாட்டார். ஆனால் அவரது உயரமும் உடல்வாகும் அதற்கு தோதாக இருக்க, அடி பின்னி எடுத்து விடுகிறார். 

அதேபோலதான் ப்ரீத்தி முகுந்தனும். அவரது ஸ்லிம் பாடி கராத்தேவுக்கு கட்டியம் கூற அவரும் ஆக்ஷனில் அமளி துமளி ப்படுத்தி விடுகிறார். ஆனால் இத்தனை அழகான பெண்ணுக்கு ரொமான்ஸ் இல்லாதது படத்தின் பெருங்குறை.

இவர்களுடன் அர்ஜுனின் தம்பியாகவும், அந்த குடும்பத்து நான்காவது நபராகவும் வரும் விவேக் பிரசன்னா தன் பங்குக்கு தானும் வில்லனை அடித்துத் துவைக்கிறார்.

அவர்கள் வீட்டில் டிவி வால்யும் அதிகமாக இருந்தால் யாரையோ அடித்து துவைத்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். 

அதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் பாபநாசம் பட (ஒரிஜினல் மலையாள திருஷ்யம்) பாணியில் அவர்கள் நடந்து கொள்வதெல்லாம் ரொம்ப ஓவர்.

அதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. 

அதேபோல் வில்லன்கள் ஜான் கோக்கன், பவன், பாலா ஹாசன் உள்ளிட்டோர் எல்லாம் சொல்லி வைத்த மாதிரியே முட்டாள்தனமாக திட்டங்களை போட்டுக் கொண்டிருப்பதும் படத்தைத் தொய்வடைய வைக்கிறது. 

அந்த வில்லன் கூட்டத்திலேயே அர்ஜுன் சிதம்பரம்தான் டெரராக ரசிக்க வைக்கிறார். மற்றவர்களை எல்லாம் பார்த்து நமக்கு எந்த சலனமும் ஏற்படவில்லை.

போதாக்குறைக்கு இருக்கிற குட்டையை குழப்ப வினோத் சாகர் பயன்பட்டு இருக்கிறார். 

பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் ரவி பஸ்ரூர்.

எல்லா ஆக்ஷன் காட்சிகளும் கிட்டத்தட்ட ஒரு வீட்டுக்குள்ளேயே நடப்பதால் அதை புத்திசாலித்தனமாக வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவுக்கும் அதைவிட அந்த குறுகிய இடத்தில் அத்தனை சிறப்பாக படம் ஆக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கும் பாராட்டுகள். 

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே. ராஜ் அருமையான லைன் ஒன்றைப் பிடித்து ஆனால் அதை புதுமையான களத்தில் சொல்லத் தெரியாமல் தடுமாறி இருக்கிறார். 

ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுமே கராத்தே சாம்பியன்களாக இருக்க, அதை வைத்து புகுந்து விளையாடி இருக்கலாம். 

அதை விடுத்து வழக்கமான மசாலா பட பாணியில் திரைக்கதை அமைத்திருப்பதால் ஒருவித சலிப்பு தட்டுகிறது. 

ஆனாலும் ஆக்ஷன் பிரியர்கள் சலிக்காமல் படத்தை பார்க்கலாம்.

பிளாஸ்ட் – கிளாசுக்கும் மாசுக்கும் இடையில்..!

– வேணுஜி