October 26, 2025
  • October 26, 2025
Breaking News
February 14, 2025

தினசரி திரைப்பட விமர்சனம்

By 0 207 Views

அவ்வப்போது குடும்பத்தினருக்கு புத்திமதி மற்றும் ஆலோசனைகள் சொல்லும் முகமாக படங்களை எடுத்து வந்தவர் இயக்குநர் வி.சேகர்.

அவரது படங்கள் இப்போது வராத குறைக்கு இந்தப் படத்தில் இன்றைய இளைஞர்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ஜி.சங்கர்.

நடுத்தர வர்க்க எம்எஸ் பாஸ்கர் – மீரா கிருஷ்ணா தம்பதியின் மகனாக இருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் போதுமான அளவு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் எட்டடி வீட்டுக்குள் குடித்தனம் நடத்துவது அவருக்கு வெறுப்பைத் தர, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் – லோன் வாங்கி பெரிய வீடெல்லாம் கட்டுகிறார்.

அத்துடன் தனக்கு வாய்க்கும் மனைவியும் கை நிறைய சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். அந்த கண்டிஷனுக்கு பலரும் ஒத்தவராத சூழலில் அவரது அம்மா மீரா கிருஷ்ணா ஒரு சின்ன பொய் சொல்லி நாயகி சிந்தியா லூர்தேவை அவருக்கு மணமுடித்து வைக்கிறார். 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த  சிந்தியாவுக்கு தமிழ் பண்பாட்டின் மேல் அலாதி பிரியம். அதனால் திருமணத்திற்குப் பிறகு அவர் வேலைக்கு செல்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதை மறைத்து ஸ்ரீகாந்துக்கு அவரைத் திருமணம் செய்து வைத்ததில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன… ஸ்ரீ காந்தின் கனவு நிறைவேறியாதா என்பதெல்லாம் படமாக விரிகிறது.

ஸ்ரீ காந்துக்கு எளிதான வேடந்தான். முன்பை விட இன்னும் இளைத்து இளமையாகத் தெரியும் அவர் ஆடல் பாடல் மகிழ்ச்சியில் அழகாகத் தோற்றம் அளிக்கிறார். ஆனால் சீரியஸ் காட்சிகளில் என்ன பேசுகிறார் என்பது புரியாத அளவுக்கு மாடுலேஷன் சிக்குகிறது.

நாயகி சிந்தியா லூர்தேவை அமெரிக்க ரிட்டர்ன் என்று சொல்வதால் அப்படியே ஏற்க  முடிகிறது. கடைசி கடைசியாக ஸ்ரீ காந்துக்கு உதவும் போது அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை மனதில் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பராக வரும் பிரேம்ஜி அமரன் நம்மை சிரிக்க வைப்பதைத் தாண்டி எலும்பும் தோலுமான தோற்றத்தில் பரிதாபம் கொள்ள வைக்கிறார்.

ஸ்ரீகாந்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அம்மா மீரா கிருஷ்ணா, அக்கா வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி உள்ளிட்டோர் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள். 

இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது.

பட்ஜெட்டின் குறை தெரியாமல் பணியாற்றி இருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவுக்கும் பாராட்டுக்கள்.

‘அனைத்துக்கும் ஆசைப்படுங்கள் அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்…’ என்று நவீன சன்னியாசிகளே கூறிவரும் இன்றைய சூழலில் ‘விரலுக்கேத்த வீக்கத்தோடு வாழுங்கள்…’ என்று சொல்லி இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஜி.சங்கர்.

இதை எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம் – இதை விடுத்து புத்திசாலித்தனமாக வாழ்பவர்கள் வாழ்ந்து கொள்ளலாம்.

ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பெரும்பணத்தை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ததைத் தவிர படத்தில் வேறு எதையும் ஸ்ரீகாந்த் தவறாக செய்ததாகத் தெரியவில்லை. 

கடைசி கடைசியாக எம் எஸ் பாஸ்கரும் மீரா கிருஷ்ணாவும் தங்கள் காதல் கதையைப் பகிர்ந்து கொள்வது நெகிழ்ச்சியாக இருந்தாலும் அது படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. 

தினசரி – வாழ்க்கைக் கணக்கு..!

– வேணுஜி