“அதென்ன பேபி & பேபி..?” என்று யோசிக்கிறீர்களா? கதைப்படி இரண்டு பேபிகள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. எனவேதான் பேபி & பேபி..!
ஒரு பக்கம் பெரிய ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ் தன் மகன் ஜெய்க்கு பெரிய இடத்தில் திருமணம் முடித்து தன் ஜமீனைக் கட்டி ஆள அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், அப்பாவின் விருப்பத்திறகு மாறாக காதல் திருமணம் புரியும் ஜெய், சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்.
இன்னொரு பக்கம் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை உள்ள இளவரசு, தன் வாழ்க்கையில் சுபிட்சம் வர மகன் யோகி பாபுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே சாய் தன்யாவை திருமணம் செய்து கொள்ளும் யோகி பாபு. இளவரசுவின் கோபத்துக்கு ஆளாகிறார்.
ஆனால் சத்யராஜ் நினைத்தது போலவே ஜெய்க்கு மகன் பிறக்க, இளவரசுவின் குடும்ப ஜோதிடர் சொன்னது போலவே யோகி பாபுவுக்கு மகள் பிறக்க, இருவரும் மகன்கள் மேல் இருக்கும் கோபத்தை தள்ளி வைத்துவிட்டு பேரனையும், பேத்தியையும் பார்க்க சொந்த ஊருக்கு மகன்களை அழைக்கிறார்கள்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து வரும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வைத்து குழந்தைகள் இடம் மாறி விடுகின்றன. “பேரனோடு வந்தால் வீட்டுக்கு வா…” என்று கர்ஜிக்கும் சத்யராஜிடமும், “பேத்தியோடு வந்தால் உள்ளே வா…” என்று முடக்கடி செய்யும் இளவரசுவிடமும் தங்களுடைய எந்த விளக்கமும் வேலைக்கு ஆகாது என்று பயப்படும் ஜெய்யும் யோகி பாபுவும் என்னென்ன டகால்டி வேலைகள் செய்கிறார்கள் என்பதுதான் படம்.
ஹீரோவாக இருப்பதை தவிர ஜெய்க்கு வேறு எந்த வேலையும் இல்லை என்பதால் அந்தந்த காட்சிகளில் அவர் வந்து போகிறார். “எப்படி வந்திருக்க வேண்டிய ஹீரோ…” என்று அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
யோகி பாபு தன்னுடைய வழக்கப்படியே எல்லோரையும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே.?” என்று அங்கலாய்க்கும் சத்யராஜையே “இதை வச்சே இவர் 25 வருஷம் ஓட்டிட்டாரு..” என்று ஓட்டுகிறார்.
நாயகிகள் பிரக்யா நாக்ரா, சாய் தன்யா இருவரும் பளிச்சென்று அழகாக இருக்கிறார்கள்.
முதல்நிலை ஹீரோயினாக வரவேண்டிய சாய் தன்யா யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்தால் அவருக்கு வேறு எந்த ஹீரோ வாய்ப்பு கொடுப்பார்?
சத்யராஜ் இருப்பதாலேயே இது ஒரு பெரிய படத்துக்கான அந்தஸ்தை அடைகிறது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் பரபரவென்று நகர்கின்றன. ரெடின் கிங்ஸ்லியை அவர் லந்து பண்ணும் இடம் அபாரம்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஸ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் என்று ஒரு நகைச்சுவை பட்டாளமே களம் இறங்கி இருக்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள், பின்னணி இசை எல்லாம் ஓகே.
டி.பி.சாரதியின் ஒளிப்பதிவில் படம் ரிச்சாக வந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பிரதாப், நகைச்சுவை தான் பிரதானம் என்று நினைத்து இருந்தாலும் அடிப்படைக் கதையில் இரண்டு அப்பாக்கள் விருப்பப்பட்டது போலவே குழந்தைகள் பிறந்திருக்க, குழந்தை மாறிய விஷயத்தை அவர்களிடம் சொல்லி மாற்றிக் கொண்டு வருவதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை. அதற்காக இவ்வளவு டகால்டி வேலைகள் செய்ய வேண்டுமா..?
பேபி பேபி – ஃபேமிலி மூவி..!
– வேணுஜி