July 11, 2025
  • July 11, 2025
Breaking News
May 17, 2025

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட விமர்சனம்

By 0 79 Views

சினிமா விமர்சனங்களால் சந்தானமும் இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்தும் எவ்வளவு காண்டாகி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் படம். அதை கொஞ்சம் பேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார்கள்

அந்த விஷயத்தையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு சந்தானமும் இதில் விமர்சனம் செய்யும் யூடியூபர் ஆகி இருக்கிறார். 

இவரைப் போன்ற சினிமாவை கிழி கிழி என்று கிழிக்கும் விமர்சகர்களை ஒரு மர்ம அழைப்பு அனாமதேய தியேட்டருக்கு அழைக்கிறது. அங்கே சென்றவர்களை பாடாய்ப் படுத்தி  போட்டுத் தள்ளுகிறது. 

அதன்படியே சந்தானம் குடும்பத்திற்கும் அழைப்பு வர சந்தானம் ஆபத்தைப் புரிந்து கொண்டு பின்வாங்கி விடுகிறார். ஆனால் குடும்பம் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவரது தந்தை நிழல்கள் ரவி, தாய் கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த், காதலி கீர்த்திகா திவாரி ஆகியோர் தியேட்டருக்குப் போய் விடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற இவரும் தியேட்டருக்குப் போய் சிக்கிக் கொள்ள இவர்கள் உயிரோடு திரும்பினார்களா என்பதுதான் முழுப் படமும்.

வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று சந்தானத்துக்கு ஆசை இருப்பது புரிகிறது ஆனால் அந்த வித்தியாசம் என்பதை நடிப்பில் இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து கொண்டு வந்தால் போதும் என்று நினைத்திருப்பதுதான் காமெடியாகி  இருக்கிறது. அவரது பழக்கப்பட்ட பாணியால் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

நாயகி கீர்த்திகா திவாரியே பேயாகவும்  ஆனதில் பே(ய்)மென்ட் கணிசமாக கட்டுக்குள் வந்திருக்கும்.

இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு காமெடி கலந்த வேடமும், செல்வராகவனுக்கு சீரியஸான கில்லர் வேடமும் கொடுத்திருக்கிறார்கள். சீரியஸான கௌதம் மேனனைப் பார்த்தாலும் நமக்கு சிரிப்பு வருவது பெரிய விஷயம்தான்.,

அத்துடன் பலதரப்பட்ட வேடங்களில் நடித்த முடித்து விட்ட நிழல்கள் ரவிக்கு மெட்ராஸ் பாஷையுடனான காமெடி கேரக்டர் கொடுத்திருப்பது புதிதாக இருக்கிறது. 

கஸ்தூரியையும் யாஷிகா ஆனந்தையும் சந்தானத்திற்கு அம்மா தங்கையாக்கிவிட்டதில் நம்மை சோதித்து விடுவார்களோ என்று பயந்தால் ஒரு கட்டத்தில் இருவரையும் கிளாமர் உடைக்கு மாற்றி நம்மை ஆசுவாசப்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் ஒரு அம்மாவை அரைகுறை ஆடையில் எல்லாம் மகன் சந்தானம் பார்க்க நேர்வது என்ன விதமான ரசனை?

சந்தானத்தின் வழக்கமான சகாக்களான நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி கூட்டணி ஓரளவுக்கு நம்மை சிரிக்க வைத்திருக்கிறது. 

இசையமைப்பாளர் ஆப்ரோ தன்னால் முடிந்த நியாயத்தை இசையில் செய்திருக்கிறார்.

தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் படத்தின் முக்கிய தளமாக வரும் அந்தக் கப்பல் கலர்ஃபுல்லாக ஜொலிக்கிறது.

விமர்சகர்களை இந்த வாங்கி வாங்கி இருக்கும் இயக்குனர் கடைசியில் எப்படித்தான் படத்தை முடிப்பார் என்று அனாவசியமாக நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. 

”படம் நன்றாக இருந்தால் ஓடும்..!’ என்கிற நீதியைச் சொல்லிப் படத்தை முடிக்கிறார்கள்.

ஆனாலும் விமர்சனங்கள் நல்லவிதமாக வர வேண்டும் என்பது அவர்களது உள்ளார்ந்த கவலையாக இருப்பதும் நமக்குப் புரிகிறது.

தலைப்பின் அளவுக்கு நெக்ஸ்ட் லெவலாக படம் இருந்திருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும். 

டிடி நெக்ஸ்ட் லெவல் – பெரிய பட்ஜெட் லொள்ளு சபா..!

– வேணுஜி