தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிட்டது. அக்கா சுவாசிகா மீது உயிரையே வைத்திருக்கிறார் தம்பியாக வரும் நாயகன் சூரி.
திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் அவர் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு வழியாகக் கருவுறுகிறார்.
அவருக்கு ஆண் குழந்தை பிறக்க… தாய் மாமன் ஆகும் சூரி அந்த குழந்தையுடன் பிரிக்க இயலாத பாசப்பிணைப்பில் கட்டுண்டு கிடக்க அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஆகிறது.
இந்நிலையில் சுவாசிகாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியையே திருமணம் செய்து கொள்கிறார் சூரி. தாய்மாமன் பாசம் ஐஸ்வர்யாவுக்கும் பிரச்சினை தர, அது இருவருக்கிடையே பிரிவினை வரை கொண்டு போகிறது.
கடைசியில் இணக்கம் எப்படி வந்து சேர்கிறது என்பதை வணக்கம் போடுவதற்குள் ஒரு வழியாகச் சொல்லி முடித்து விடுகிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
நாயகனாக நடிக்க முடிவெடுத்தது மட்டுமில்லாமல் இந்த படத்தில் கதாசிரியராகவும் ஆகியிருக்கிறார் சூரி. ஊர் அறிந்த உலகறிந்த கதைதான் இது என்றாலும் உறவுகளுக்குள் முக்கியமான தாய் மாமன் பாத்திரம் பெண்கள் மத்தியில் எடுபடும் என்று அவர் நினைத்திருக்கிறார்.
அதேபோல செண்டிமெண்ட் ஹீரோவாகிவிட்டால் குடும்பங்களுக்குள் எளிதாக புகுந்து விடலாம் என்பதும் அவர் திட்டமாக இருக்கக்கூடும்.
சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பாத்திரம் நிறைய முரண்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு இருக்கும் நாட்டு நடப்பில் ஒரு டாக்டர் ஆவது என்பது எத்தனை பெரிய சிக்கலான விஷயம்..? அப்படிப் படித்து டாக்டர் ஆனவர் ஒரு கிராமத்தான் சூரியை பார்த்து காதல் வயப்பட்டார் என்பதெல்லாம் காதுல பூ.
அதற்கு படத்தின் பின் பாதியில் ஒரு விளக்கம் சொல்கிறார்கள். அந்த விளக்கம் எல்லாம் விளக்கெண்ணெய் அளவில்தான் இருக்கிறது.
அதேபோல் குழந்தை கொடி சுற்றி பிறந்தால் தாய்மாமன் பார்க்கக் கூடாது என்பதை மூடநம்பிக்கை என்று வாதிடும் ஐஸ்வர்யா, தன் வயிற்றில் வளரும் குழந்தை மேல் சத்தியம் வாங்கிக் கொள்வது அதைவிட அபத்தம்.
சூரியின் குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் நட்பு பாராட்டி கொண்டு வரும் ராஜ்கிரண பாத்திரம் அந்தக் காரணத்தாலேயே கதைக்குள் வராமல் தனித்து நிற்கிறது. அவரது மனைவியாக வரும் விஜி சந்திரசேகர் நடிப்பில் குறை வைக்கவில்லை.
சூரியின் அக்காவாக நடித்திருக்கும் சுவாசிகா வழக்கம்போல் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தன் குழந்தை மீதான தம்பியின் பாசமே அவனது குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டு அவர் இருமுகம் காட்டி நடித்திருப்பது அசத்தல்.
அதற்காக தம்பி இறந்து விட்டதாக தன் மகனை நம்ப வைக்க போட்டோவுக்கு மாலை போட்டு வைப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
அவரது கணவராக வரும் பாபா பாஸ்கரன் அண்டர் பிளே செய்து நெகிழ வைக்கிறார்.
அவர்களது மகனாக வரும் சிறுவன் பிரகீத் சிவனின் பிடிவாதமும் நடிப்பும பலே.
இவர்களுடன் பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் உள்ளிட்டோரும இயல்பாக நடித்து கதையை நியாயப்படுத்துகிறார்கள்.
ஹேசம் அப்துல் வகாப் இசையில் பாடல்கள், பின்னணி இசை எல்லாம் அளவாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் பணியைப் பாராட்டியே ஆக வேண்டும். இவ்வளவு பெரிய கும்பலை வைத்து படம் எடுப்பது ஆகப் பெரிய காரியம்.
உறவுகளின் பெருமையைச் சொல்ல வந்திருக்கும் படம். ஆனால் மறைமுகமாக உறவுகளின் சிக்கலைப் பெரிதுபடுத்தி விட்டது.
படத்தில் வரும் உறவு சிக்கல்களை எல்லாம் இதைவிட பிரம்மாண்டமாக சீரியல்களிலேயே பார்த்து விடுவதால், அதை பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்துக்காக குடும்பங்கள் தியேட்டருக்கு வரலாம்.
மாமன் – ஓவர் கிரிஞ்ச்..!
– வேணுஜி