April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரமணா விஜயகாந்தும் ஆதித்யா அருணாச்சலம் ரஜினியும் – ஏஆர் முருகதாஸ்
January 5, 2020

ரமணா விஜயகாந்தும் ஆதித்யா அருணாச்சலம் ரஜினியும் – ஏஆர் முருகதாஸ்

By 0 1029 Views
AR Murugadoss Interview about Darbar

AR Murugadoss Opens about Rajini Characterisation

தமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம் 9-ம் தேதியே துவங்கவிருக்கிறது. காரணம் ‘லைகா’ தயாரிப்பில் ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வெளியீடு. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்க, குடும்பங்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது படம்.

ஏ.ஆர் முருகதாஸ் படமென்றாலே கதையில் ஏதோ ஒரு அழுத்தமும், சமூகப் பொறுப்புணர்வும் இருக்கும். அதற்கு அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய ‘ரமணா’ படத்தையே உதாரணமாகக் கூறலாம். 

ஒரு முதல்நிலை ஆக்‌ஷன் ஹீரோவை அந்தப்படத்தில் சாமானியனாக சட்டை பேண்ட் அணியவைத்து கிளைமாக்ஸில் சதிகாரர்களை வேரறுத்து முஷ்டியை உயர்த்த வைக்காமல் அவர் செய்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்று ‘தூக்கு தண்டனை’ பெற வைத்ததுடன் அவர் இறக்கும் காட்சியைக் கூட தைரியமாக வைத்தார் முருகதாஸ். அதனாலேயே அந்தப்படம் வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு வெற்றி பெற்றது.

அப்படிப்பட்ட முருகதாஸ் இப்போது சூப்பர் ஸ்டாரை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கியிருக்க, ரஜினிக்கென்று தனியாகக் கதை எழுதியிருக்கிறாரா. அது ரமணா அளவில் இருக்குமா..? அதை அவரிடமே கேட்டபோது சொன்னார்.

“ரமணாவுக்கு விஜயகாந்த் சாரிடம் கதை சொன்னபோது அவர் இருந்த நிலை வேறு. அப்போது அவர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆக்‌ஷன் படங்களில் மஞ்சள், ஆரஞ்ச் கலர்களில் கோட், சூட், ஷூவெல்லாம் போட்டு எல்லோரையும் திட்டி, அடித்து நடித்துக்கொண்டிருந்தார். அதனால அவரை முற்றிலும் வித்தியாசமாகக் காட்ட நினைத்தேன்.

ஒரு சாதாரண பேண்ட், சட்டை போட்ட சராசரி மனிதனாக அவர் வந்ததே புதுமையாக இருந்தது. அதனால் ‘ரமணா’வில் அவரை அமைதியாக பேச வைத்தேன். அடிதடியெல்லாம் இல்லாமல் வந்தவர், பிறருக்கு சொல்லும் “எனக்குத் தமிழ்ல பிடிக்காத வார்த்தையே ‘மன்னிப்பு’தான்…” என்பதற்கு நியாயம் சேர்க்கும் அளவில் அவரே தண்டனை பெறுவது சரியாக இருந்தது.

இன்னும் கேட்டால் வழக்கமாக இதைபோன்ற கிளைமாக்ஸ் இருக்கும் படங்களுக்கு இரண்டு கிளைமாக்ஸ் ஷூட் செய்வார்கள். ஒரு நெகடிவ்வான கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால் இன்னொன்றை வைப்பார்கள். ஆனால், நான் அப்படி மாறிவிடக் கூடாதென்பதற்காக அந்த ஒரே ஒரு கிளைமாக்ஸைத்தான் நம்பி எடுத்தேன். 

ஆனால், இப்போது ரஜினி சாரை இயக்குவது அதற்கு முற்றிலும் மாறுபட்டது. முந்தைய 167 படங்களில் அவர் எப்படியெல்லாமோ நடித்து விட்டார். அத்துடன் அவருக்கு தெலுங்கு, இந்தி மார்க்கெட்டும் அமோகமாக இருக்கிறது. அதனால், அவரை எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் காட்ட வேண்டிய அவசியம் ‘தர்பாரி’ல் இருக்கிறது. அதனால், இதில் எல்லோருக்கும் பிடித்த ரஜினியாக அவர் வருவார்.

தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஒரு விஷயம் இந்தி ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் ‘தர்பார்’ டிரைலரையே இந்தி வல்லுனர்களை வைத்துதான் ‘கட்’ செய்தோம். அதில் எதிர்பார்த்தபடியே தமிழைவிட இந்தியில் டிரைலர் அதிகமாக ரசிக்கப்பட்டது. ஆனால், படத்துக்குள் எல்லா ரசிகர்களுக்கும் பொதுவான ரசிக்கும் அம்சங்கள் இருக்கும்.

ரஜினியைப் பொறுத்தவரை அவர் இதில் ஏற்றிருக்கும் போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டர் படு ஸ்டைலிஷான, ஆக்‌ஷன் கொண்ட நாம் ரசித்த பழைய படங்களின் ரஜினியை நினைவுபடுத்தும். அத்துடன் ‘தர்பார்’ தலைப்புக்கு நியாயம் சொல்லும் ஒரு நல்ல கதையும் உள்ளே இருக்கிறது.

சமீபத்தில் அவர் ஏற்ற கேரக்டர்கள் எல்லாமே அவர் வயதை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால், இதில் இளமையான ரஜினியை மீண்டும் நாம் காண, அதன் அடிப்படையில் அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.!”