July 15, 2026
  • July 15, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • கான் சிட்டி திரைப்பட விமர்சனம்
June 25, 2026

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

By 0 104 Views

வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை.

கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார்.

அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க தரும் யோசனைகளின் பாதிப்பில் சில குறுக்கு வேலைகள் செய்கிறார். அதன்பேரில் ஒவ்வொரு வகையில் பணத் தேவையில் இருக்கும் அன்னா பென், யோகிபாபு இணைந்து மக்களிடம் திரட்டிய பணத்தை அவரது திட்டத்தில் போட, பெரிய லாபம் பார்க்கும் நோக்கில் தான் மணக்கவிருக்கும் காதலியின் சகோதரனிடம் மொத்தப் பணத்தையும் கொடுக்கிறார் அர்ஜுன் தாஸ். 

இரண்டு நாட்களில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்த வேளையில் அவன் கொலை செய்யப்படுகிறான்.

எனவே மொத்த பணத்திற்கும் (10 கோடி ரூபாய்) அவரே ஆளாகிப் போக, மக்களை ஏமாற்றிய குற்றத்துக்காக அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசியை சிறுவன் அகிலனுடன் வைத்து கைது செய்கிறது போலீஸ். 

அங்கிருந்து தப்பிக்கும் அவர்கள் கர்நாடகாவுக்கு சென்று இப்படி குடும்பமாக ஊரை நம்ப வைத்து ஹோட்டல் தொழில் செய்து வருகிறார்கள். 

இப்போது அன்னா பென்னின் மகன் கடத்தப்படவே அவனை மீட்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன… தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து தப்பினார்களா… மீண்டும் அவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடிந்ததா என்று சொல்வது மீதிக் கதை.

கிடைத்த வேடத்தை அந்த பாத்திரமாகவே மாற்றிவிடும் வல்லமை பெற்ற ஜூனியர் ரகுவரன் போல தன் பாத்திரத்தை அர்ஜுன் தாஸ் உணர்ந்து நடித்திருக்கிறார். 

அத்தனை பிரச்சனைக்கும் தானே பொறுப்பேற்று அதற்கான விடைகளைத் தேடி கண்டுபிடிக்கும் ஆற்றலில் அசத்துகிறார். 

அதேபோல் அகிலன் பெற்ற மகனாக இல்லாவிட்டாலும் தன்னை அப்பா என்று கூப்பிட்ட காரணத்திறகாக அவனை சொந்த மகனாகவே கருதி அவனை மீட்க எடுக்கும் முயற்சிகள் நெகிழ்ச்சியானவை.

அன்னா பென்னின் பார்வையே அந்த நடிப்பு நடிக்கிறது. அந்தக் கண்களில் முதலில் எதிர்காலம் மீதான அவநம்பிக்கை தெரிவதும் அர்ஜுன் தாசின் உள்ளம் புரிந்து அவர் மீது நம்பிக்கை வைப்பதுமாக தேர்ந்த நடிப்பு. 

அம்மா மகனாக வரும் வடிவுக்கரசியும் யோகி பபுவும் படம் நெடுக நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் மெனக்கெட்டு பெரிய காமெடி எல்லாம் செய்யவே இல்லை. சின்னச் சின்ன வசனங்களிலும் அதற்கான எக்ஸ்பிரஷன்களிலும் காமெடி வெடியை கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்களுடன் ஜோவியலாக வரும் விடிவி கணேஷ், சீரியஸாக வரும் அருள்தாஸ் இருவரும் கூட ரசிக்க வைக்கிறார்கள். 

சின்ன சின்ன பாத்திரங்கள்தான் என்றாலும் ராதாரவி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ரகு எசக்கி உள்ளிட்டோர் தத்தம் பாத்திரங்களில் அடையாளம் தெரிவது ஆச்சரியம்.

பட ஆரம்பத்தில் கொடூரனாக சித்தரிக்கப்படும் இன்ஸ்பெக்டராக வரும் நந்தகோபால், போகப் போக மெச்சூர்டான வில்லனாக வந்து அர்ஜுன் தாஸ் கேங்கை தனது கைப்பாவைகளாக மாற்றிக் கொள்வது அசத்தல். 

இவர்கள் அத்தனை பேருமே தேர்ந்த நடிகர்களாக தெரிவதன் காரணம் இயக்குனர் ஹரிஷ் துரைராஜின் அற்புதமான இயக்கம்தான். 

டார்க் காமெடி வகையறா படங்களை இயக்குவதற்கு ஆகப் பெரிய திறமை வேண்டும். படம் முழுவதும் சீரியஸாக நகர நாம் ஒரு பக்கம் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற இலக்கணப்படி பக்காவாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதை நேர்த்தியான முறையில் இயக்கியிருக்கிறார் அவர். 

ஓல்ட் கொரியன் பாய் படத்தை வைத்துக்கொண்டு அவர் அடித்திருக்கும் லூட்டியை மிகவும் ரசிக்கலாம். அதேபோல் மாற்றுத்திறனாளியான அகிலனின் பாத்திர வார்ப்பும் எதிர்பாராதது.

இதைத்தொடர்ந்து பெரிய நட்சத்திரங்கள் அவரை தங்கள் படங்களை இயக்குவதற்கு அழைக்கக்கூடும்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவையும் ஷான் ரோல்டனின் இசையையும், அருள் மோசஸ் ஏ.வின் படத்தொகுப்பையும் சொல்லியே ஆக வேண்டும். 

இயக்குனர் எதிர்பார்க்கும் நாடி பிடித்து மூவரும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள்.

நீண்ட நாள் கழித்து கலை நேர்த்தியுடன் வந்திருக்கும் புத்திசாலித்தனமான படம்.

கான் சிட்டி – தானா சேர்ந்த கூட்டம்..!

– வேணுஜி