சத்தியம் செய்வது முக்கியமில்லை – அந்த சத்தியத்தின் படி நடக்க வேண்டும் என்று உணர்த்தும் படம்.
வேலூர் மாவட்டத்தில் நடக்கும் கதை. அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் சேகரன் நல்ல உள்ளம் படைத்தவர். அதிலும் சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள் மீது அக்கறை கொண்டவர்.
இருப்பினும் மகிழ்ச்சி, சோகம் எது வந்தாலும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.
ஓரளவு வசதியான நடத்துற வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்லூரி மாணவியான நதியா சோமுவை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலைச் சொல்லும்போதுதான் நதியாவும் அவரைக் காதலிப்பது தெரிகிறது.
மகிழ்ச்சியில் குடிக்கிறார். அவரது அந்தப் பழக்கம் தெரிந்த நதியா அவரிடம் குடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார்.
ஒரு கட்டத்தில் அவரது நடத்தையைத் தவறாகப் புரிந்து கொண்ட நதியா அவரிடம் கோபமாக நடக்க, அவள் தன்னைப் பிரிந்து விட்டதாக எண்ணி அந்த சோகத்துக்காக குடிக்கிறார்.
எனவே அருண் குமாரைத் திருத்த உடனடியாக கோவிலுக்கு அவரை இழுத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறார் நதியா.
இனிய இல்லறம் தொடங்கி ஒரு குழந்தையை வயிற்றில் நதியா தாங்கிய நிலையில் ஒரு பேரிடி அவர்கள் வாழ்வைத் தாக்க, அவரும் முழு நேர குடிகாரனாக மாற… அந்த துன்பங்களில் இருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் மீதிக் கதை.
படத்தை இயக்கி இருக்கும் அருண்குமார் சேகரன்தான் படத்தின் நாயகன் சங்கமித்ரன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வழக்கமான பவுடர் பூச்சு ஹீரோவாக இல்லாமல் இயல்பான ஹீரோவாக அவர் தோற்றமளிப்பது படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது.
நடுத்தர வர்க்கத்து அல்லாட்டங்களையும் தடுமாற்றங்களையும் தனது நடிப்பின் மூலம் இயல்பு மாறாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். மகிழ்ச்சியையும் சோகத்தையும் கூட மிகச் சிறப்பாக வெளிக்காட்டி இருக்கிறார்.
கதாநாயகி நதியா சோமுவை, தொடக்கத்தில் பார்க்கும்போது இவரா நாயகி என்று தோன்றுகிறது. ஆனால் வாழ்வியல் ரீதியாக சாமானியனின் காதலிகள் இப்படித்தானே இருப்பார்கள் என்ற புரிதல் ஏற்பட்டு அதை ஏற்றுக் கொள்கிறோம்.
அவர் தன்னை அழகுபடுத்திக்கொள்ள எந்த விதமான ஒப்பனைகளையும் வேண்டாமல் இயல்பான நடிப்பையே ஒப்பனை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவரும் மொத்த படத்தை ஆக்கிரமிக்க துணைக் கதாபாத்திரங்களில் வரும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி போன்றோர் இந்த இயல்பான கதையோட்டத்துடன் கூடிய படத்துக்கு மேலும் இயல்பை கூட்டி இருக்கிறார்கள்.
வேலூர் இத்தனை அழகான நில வளங்களை கொண்டிருக்கிறதா என்று வியக்கும் அளவுக்கு வேலூரின் வெம்மை பூமியை நம்மை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார்.
இசையமைப்பாளர் தீபச்செல்வனின் இசை மிக தேர்ச்சியாக உள்ளது. அவர் இசையில் அமைந்த பாடல்களில் ‘தேன்மழை சாரலே ‘, ‘உதிர்கிறேன் நானடி ‘பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.
முடிந்தவரை தொய்வில்லாமல் காட்சிகளைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஸ்ரீராம் விக்னேஷ்.
படத்தின் மிகப்பெரிய லாஜிக் மீறல் நாயகனுக்கு உடல் பாதிப்பு எப்படி வந்தது என்பதை கூறாமலேயே விட்டிருப்பது. இத்தனை நல்லவராக அவர் இருக்கும் போது இப்படி எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
கிளைமாக்ஸ்-இல் நாயகன் தனக்கு செய்து கொடுக்கச் சொல்லி கேட்ட சத்தியத்தின் படி நாயகி நடந்து கொள்வது நியாயமாகவும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையை உயர்த்துவதாகவும் இருக்கிறது.
சிறிய முயற்சி ஆனாலும் சீரிய முயற்சி.
ப்ராமிஸ் – சத்திய (த்துக்கு) சோதனை..!
– வேணுஜி