படத்துக்குப் படம் புதுமையான வேடங்களை விரும்பி ஏற்கும் ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்டு 15-ல் வெளியாகவிருக்கும் படம் ‘கோமாளி’, 90களில் கோமாவில் விழுந்து இப்போது எழுந்திருக்கும் ஒரு இளைஞனின் மனநிலையை மையப்படுத்துகிறது.
இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார்.
‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘கோமாளி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் ஜெயம் ரவி பேசியதிலிருந்து…
“இந்தப்பட அனுபவம் எங்கள் எல்லோருக்குமே பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்தப்படத்தை நான் ஒத்துக்கொள்ள காரணமே இது இந்தக் காலத்தில் சொல்ல வேண்டிய விஷயம். இதேபோல்தான் ‘அடங்கமறு’ படத்துக்கும் சொன்னேன். அது போன்ற முயற்சி இது.
இந்தக் கதை 90களுக்கும் இன்றைய காலக் கட்டத்துக்கும் இடையில் நடக்கிறது. இந்தக் காலத்துக்கேற்ற கதை இது. இதை இன்னும் பத்து வருடங்கள் கழித்து சொல்ல முடியாது. பத்து வருடங்களில் நிலைமை மாறி விடுகிறது.
20 வருடங்களுக்கு முன்னால் நாம் தண்ணீரை பாட்டிலில் வாங்கிக் குடிப்போம் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டோம். ஆனால், இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் மிகப்பெரியதாக இருக்கிறது.
நாம் எல்லோருமே பிரச்சினை என்று வந்தால்தான் ஒன்றுபடுகிறோம். இந்தப்படம் அப்படி மனிதம் பேச வருகிறது..!”