கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த கார் சென்று விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து குழந்தை விழும் போது பலத்த அடி படவில்லை என்பதுடன் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, தாயின் மடியில் இருந்த பெண் குழந்தை ஓடும் காரில் இருந்து தவறி சாலையில் விழுந்திருக்கிறது.
சாலையில் விழுந்த குழந்தை மெதுவாக தவழ்ந்து சாலையின் தடுப்புக்கு அருகே வந்தது. நல்லவேளையாக சோதனைச் சாவடி அருகே இந்த சம்பவம் நடந்ததால் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பல கிலோ மீட்டர்கள் கடந்த பிறகுதான், காரில் குழந்தை இல்லாததை அறிந்து பெற்றோர் பதறினர். அதற்குள் சிசிடிவியில் இருந்து காரின் எண்ணைக் கொண்டு அதிகாரிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பெற்றோர் வெள்ளத்தூவல் காவல் நிலையத்துக்கு வந்து நடைமுறைகளை முடித்துக் கொண்டு அதிகாலை 1.30 மணியளவில் குழந்தையைப் பெற்றக் கொண்டனர்.
பதைக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.