எல்லா பேய் படங்களிலும் ஒரே மாதிரியான கான்செப்டையே சொல்கிறார்களே என்று இந்தப் பட இயக்குனர் எம்.ஜெனித்குமார் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் வித்தியாசமான ஒரு லைனைப் பிடிக்கிறேன் என்று ஒரு ஆவி விஷயத்தைப் பிடித்திருக்கிறார்.
அது என்னவென்றால் ஒருவர் இறக்கும்போது அதை இன்னொருவர் பார்த்துவிட்டால் இறந்து போனவர் ஆவியாக வந்து தன் மரணத்தை பார்த்தவர்களைக் கொன்று ஆவியாக்கிவிடுவார் என்ற கான்செப்ட்தான் அது.
அந்த கான்செப்டின்படியே படத்தின் நாயகியான யாஷிகா, தன் தோழி பூஜாவும் அவரது கணவரும் இறப்பதை நேரில் பார்த்துவிட அவர்கள் ஆவியாக தன் வீட்டுக்கு வந்து தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
அதையெல்லாம் நம்பாத அவரது கணவர் அவிதேஜ், யாஷிகாவுக்கு மனநல சிகிச்சை அளிக்கிறார். ஆனால் ஒரு நாள் வெளியிலிருந்து யாஷிகாவுக்கு அவர் போன் செய்ய, அந்த போனை எடுத்துப் பேசுவது இறந்து போன யாஷிகாவின் தோழிதான் என்று அறிந்து திடுக்கிடுகிறார்.
யாஷிகாவைக் கொல்லத்தான் அவள் தன் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று உணர்ந்த அவர் தன் நண்பரின் உதவியால் ஒரு சாமியாரைத் தன் வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்.
அங்கே போன அவரது நண்பரும் அமானுஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகி தன் காதலி திவ்யாவுக்கு போனைப் போட்டு, தான் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதாகக் கூற அங்கே வந்து பார்க்கும் அவரது காதலிக்கு என்ன நேர்ந்தது, யார் யாரெல்லாம் உயிரை விட்டார்கள்? யார் மிஞ்சினார்கள் என்பதெல்லாம் மீதிப் படத்தின் கதை.
நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்.
அவரது கணவராக வரும் அவிதேஜ், அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களால் ஆனதைச் செய்திருக்கிறார்கள்.
பட்ஜெட் பற்றாக்குறையால் சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு திகில் படத்துக்குண்டான பீதியைக் கொடுக்கவில்லை என்றாலும், பிரபாகரன் மெய்யப்பனின் இசை அதைச் செய்திருக்க முடியும். ஆனாலும் கதையின் போக்குக்கு ஏற்றபடி இருவரும் பயணித்திருக்கிறார்கள்.
கடைசியாகப் படம் முடியும்போது யாஷிகா நம்மிடம், “நான் செத்துப் போனதை நீங்க பார்த்தீங்க இல்ல, உங்க வீடுகளுக்கு வந்து நான் பழி வாங்கப் போறேன்…” என்கிறார்.
ஒருவர் இறப்பதை யாரோ ஒருவர் பார்த்து தான் ஆக வேண்டும். அப்படிப் பார்க்கிறவர்களையெல்லாம் ஆவிகள் கொன்று போட்டால் உலகத்தில் யார்தான் மிஞ்சுவார்கள்..?
அத்துடன் பழி தீர்ப்பதற்காக சைத்ரா ஆவி, வஞ்சம் எடுத்தால் “சைத்ரா செய்தது ரைட்றா.!” என்று நாமே சொல்ல முடியும். ஆனால், சாவைப் பார்த்த காரணத்துக்காகவெல்லாம் வஞ்சம் தீர்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்..?
சைத்ரா – வீடு வரை சாவு..!