லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஏழாயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் அரசியல் துளியும் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், “சௌத்ல சிறையிலிருந்து வெளிய போய்ட்டு வர்ரதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்…” என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புரிந்துகொண்டு ரசிக்கிறார்கள்.
ஆனால், யார் பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், “தர்பார் படத்தில் இருக்கும் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் அதன் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும்..!” என்று கூறி உள்ளார்.
இதற்கு ‘தர்பார்’ தரப்பு விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Related