June 14, 2026
  • June 14, 2026
Breaking News
April 2, 2026

கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம்

By 0 208 Views

வறுமையிலும் செம்மையாக இருக்க வலியுறுத்தும் கதை.

அப்படி சார்ஜாவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது கதை.

இங்கும் தொழிலதிபர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக இருக்கும் அவர் தன் மனைவி, மகனுடன் வசதிக்குறைவான கடற்கரைக் குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அவருக்கும் அவர் மனைவிக்கும் இரண்டு கனவுகள். ஒன்று சொந்த வீடு கட்டி சொந்தக்காரர்கள் முன்னால் கெத்தாக நிற்பது – இன்னொன்று சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவது…

இந்த இரண்டுக்குமான சேமிப்புகள் தவிர திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு… ஆக மொத்தம் மூன்று உண்டியல்களில் காசு சேர்க்கிறார்கள். 

கௌதம் மேனனும் சரி, அவர் மனைவி அபிநயாவும் சரி சமுத்திரகனி மேல் அத்தனைப் பாசம் வைத்திருக்கிறார்கள். அந்தப் பாசத்துக்கு அடிமைப்பட்டு அவர் வேறு எந்த வேலையைப் பற்றியும் யோசிக்காமல் அவ்வப்போது அவர் மனைவி லட்சுமி பிரியாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் ஒரு மாத ஓய்வுக்காக கௌதம் மேனனும் அவர் மனைவி அபிநயாவும் வெளிநாடு செல்கிறார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அவருடைய காரை வீட்டில் விடுவதற்கு முன்பு (சில கடன்களை அடைக்க…) அந்தக் காரை வாடகைக்காராக பயன்படுத்த முடிவு செய்கிறார் கனி. 

அந்த முடிவின் முடிவு என்ன ஆனது என்பதுதான் உருக்கமான இந்தக் கதை.

சமுத்திரகனியை போலீசாக பார்த்திருக்கிறோம் – ரவுடியாக பார்த்திருக்கிறோம் – அப்பாவாக பார்த்திருக்கிறோம்… ஆனால் இப்போதுதான் சமுத்திரக்கரையிலேயே வைத்து கனியைப் பார்க்கிறோம்.

முன்பு நாம் அவரைப் படங்களில் பார்த்த எந்த சாயலும் வராமல் அப்படி ஒரு அப்பாவியாக இதில் நடித்து மனதைக் கொள்ளை கொள்கிறார். 

அவரைவிட சில மில்லி மீட்டர் அதிகமாக நடித்திருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறார் அவரது மனைவியாக வரும் லட்சுமி ப்ரியா. 

அவரும் ஒரு அப்பாவிதான் ஆனால் அந்த அப்பாவித்தனம் கணவனை நிலை கொள்ளாமல் ஆக்குகிறது. அதே சமயம் கணவன் மேல் உள்ள பாசம் துளியும் குறையாத அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார் லட்சுமி ப்ரியா. 

சமுத்திரக்கனி லட்சுமி ப்ரியாவின் நடிப்பு அவர்களை ஒரு தம்பதியாகவே நம்மை நம்ப வைக்கிறது.

அவர்களது மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியும் கவனிக்க வைக்கிறான். கனி அப்பாவித்தனமாக செயல்பட்ட போதெல்லாம் அவரை அறிவாளி எனவும், அறிவார்ந்து பணத்தை சேர்த்துக் கொண்டு வந்த போது அவரை “உனக்கு அறிவே இல்லப்பா..!” என்றும் அவன் அழைப்பதை ரசிக்கலாம்.

இப்படி ஒரு முதலாளியும் முதலாளி அம்மாவும் அமைய மாட்டார்களா என்று நம்மை ஏங்க வைத்து விடுகிறார்கள் கௌதம் மேனனும் அவரது மனைவியாக வரும் அபிநயாவும். வாழ்க்கையில் பிரச்சனைகளை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக வரும் கௌதம் மேனனின் பாத்திரப்படைப்பு அற்புதம்.

அதேபோல் கொஞ்ச நேரமே வந்தாலும் படம் முடியும்போது நெஞ்சில் நிறைகிறார் அபிநயா. அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுக்கும் அவர் கடைசியில் கொடுக்கும் சர்ப்ரைஸ் வேற லெவல். அவர்களது செல்லக் குழந்தையும் க்யூட். 

சமுத்திரகனியின் அப்பாவி மனதை பாவி மனதாக மாற்றுவதில் ஒரு காட்சிதான் ஆனாலும் கார்த்திக் குமாரும், படவா கோபியும் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

இவர்களைத் தவிர மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் திரைக்கதையை தொய்வின்றி நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

கதை நடக்கும் களங்களை அத்தனை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன்.

இசையமைப்பும் நேர்த்தியாக இருக்கிறது.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம்சக்ரி, வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அற்புதமாக பார்வையாளர்களின் மனங்களில் கடத்தி விடுகிறார்.

வெளிநாட்டில் இருந்து வந்த கௌதம் மேனனை சமுத்திரக்கனி கண்டு பேசிவிட்டு வந்து கண் கலங்கும் இடத்தில் கலங்காதவர்கள் மனிதர்களே இல்லை.

ஒரு மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற அற்புதமான அனுபவத்தைத் தந்த இயக்குனருக்கு வாழ்த்துகள்..! 

கார்மேனி செல்வம் – டிரைவிங் ஆஃப் லைஃப்..!

-வேணுஜி