பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..?
முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது.
ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று அகவல் எழுப்பி அங்கே ஒரு ஜோதி தோன்ற அதை தெய்வமாக கருதி வாழ்ந்திருந்தார்கள் அந்த கிராமத்து மக்கள்.
ஒரு கட்டத்தில் மலையிலிருந்து உருண்டு விழும் கல் ஒன்று இரண்டாக பிளக்கிறது. அதில் பெரிய பகுதி விழுந்ததை தெய்வமாக வழிபடுபவர்கள் ஒரு பிரிவாகவும், சிறிய கல்லை வழிபட்டவர்கள் தாழ்த்தப்பட்ட இன்னொரு பிரிவாகவும் பிரிய அதுவே அங்கு தீண்டாமையை தோற்றுவித்தது என்பதை செவி வழி கதையாக சொல்லி முடிக்கும் இயக்குனர் இன்றைக்கு அங்கிருக்கும் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறார்.
ஒரு பக்கத்து ஊரின் தலைவராக சிங்கம் புலியும் இன்னொரு பக்கத்து ஊரின் தலைவராக கிச்சா ரவியும் பகைமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மலையில் ஜோதி தோன்றாமல் தெய்வம் அங்கே இறங்க மறுக்கிறது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் பூவையார் தூக்கத்தில் நடந்து சென்று அந்தப் பகுதியில் தெய்வ நம்பிக்கையுடன் வைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் காலை வைத்து விட அந்தக் காலுக்கு பழுத்த கம்பியில் சூடு போட்டு அனுப்புகிறார்கள் அந்தப் பகுதியினர்.
இந்த வேறுபாடுகளை களைந்து இரு பகுதியில் இருப்பவர்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கிறார் குடிகாரர் காளி வெங்கட்.
மக்களிடம் பேச முடியாத ஒருங்கிணைப்பை குடித்துவிட்டு வந்து மிருகங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் அவரது உற்ற தோழராக வருகிறார் அர்ஜுன் தாஸ்.
தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் காளி வெங்கட்டை தோளில் சுமந்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு அர்ஜுன் தாஸ் உடையது.
அந்த நல்ல உள்ளமே காளி வெங்கட்டின் தங்கை சிவாத்மிகா ராஜசேகருக்கு அவர் மீது பரிவையும் காதலையும் உருவாக்குகிறது.
திடீரென்று ஒரு நாள் குடிபோதையில் காளி வெங்கட் இறக்க, திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் இருக்கும் கிராமத்தினர் அவரது பிணத்தை ஊருக்கு வெளியில் வைக்கச் சொல்கிறார்கள்.
ஆனால் அந்தப் பிணத்துக்கு விசேஷ சக்திகள் இருக்க அவர் மூலம் தெய்வம் ஊருக்குள் வந்திருப்பதாக பூசாரி அறிவிக்கிறார்.
இரு பிரிவினரும் ஒன்றுபட்டு இருந்தால் மட்டுமே மீண்டும் தெய்வ தரிசனம் கிடைக்கும் என்ற நிலையில் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதையாக இருந்தாலும் அந்தக் கதையை நம் மனதில் ஏற்றி நிஜ சம்பவம் போலவே நம்மை உணரச் செய்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
ஒரு சில காட்சிகள் மட்டுமே உயிருடன் வரும் காளி வெங்கட் பாதிப்படத்துக்கு மேல் பிணமாகவே வருகிறார். உயிரோடு இருக்கும்போது அவரது வயிற்றை வாட்டி வதைக்கும் வாயு பகவான், இறந்த பின்னும் டர்ர்… புர்ர்… என்று வெளியேறி ‘பாம்’ போட்டுக் கொண்டிருப்பது இதுவரை காணாத அதிசயம்.
அவரது உற்ற நண்பனாக வரும் அர்ஜுன் தாஸ் பாத்திரத்துக்குள் புதைந்து போய் இருக்கிறார். குரல் வளத்தில் இருந்து உடல் மொழி வரை அப்படி ஒரு எனர்ஜியுடன் தெரியும் அவர் இதில் அடக்கி வாசித்திருப்பது ஆச்சரியம்.
ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து சாமி ஏறியது போல் ஒரு ஆட்டம் ஆடி கர்ஜனை செய்வது அற்புதம்.
அர்ஜுன் தாசின் வசீகர குரலை வைத்தே “உன் குரலை வைத்து நீ முன்னெடுத்தால் இந்த ஊர் மக்கள் ஒன்றுபடுவார்கள்…” என்று காளி வெங்கட் பேசும்போது கைத்தட்டல்களால் தியேட்டர் நிறைகிறது..
நாயகி சிவாத்மிகா ராஜசேகரின் உயரமும் உடல்வாகும் வசீகரிக்கிறது. நடிப்பும் நயம்.
ஆனால் அர்ஜுன் தாசுடனான அவரது காதலுக்கு இட ஒதுக்கீடு போதவில்லை.
இவர்களுடன் கலெக்டராக வரும் அபிராமியும் கவனிக்க வைக்கிறார்.
சுமாராக 60 பேர் கொண்ட கிராமத்துக்கு ஒரு எம்எல்ஏ தேவையா என்று நாம் நினைத்தாலும் அவர்களுக்குள் பிரச்சனை எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சதிகார எம்எல்ஏவாக நாசர் நச்சென்ற நடிப்பைக் கொடுத்து நம்ப வைக்கிறார்.
பூவையார் இரண்டு மூன்று காட்சிகளில் வந்தாலும் நம் கவனத்தில் பதிகிறார்
பாலசரவணன், சிங்கம் புலி, கிச்சா ரவி, டி எஸ் கே உள்ளிட்டோர் அந்த மண்ணின் மக்களாகவே தெரிகிறார்கள்.
பி எம் ராஜ்குமாரின் வித்தியாசமான ஒளிப்பதிவு படத்தின் மீதான நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
அதில் டி. இமானின் இசைக்கும் பெரும் பங்கு உண்டு.
தீண்டாமை பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் மணிகண்டன் கதை திரைக்கதை எழுதி இருக்கும் இந்த படம் சற்றே வித்தியாசமான சிந்தனையில் அமைந்திருக்கிறது.
அந்த சிந்தனைக்கு உயிர் கொடுத்திருக்கும் ஜெம்ரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணனுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கலாம்.
பாம் – தீண்டாமைக்கு வைத்த வெடிகுண்டு..!
– வேணுஜி