January 23, 2022
  • January 23, 2022
Breaking News
December 4, 2021

பேச்சிலர் திரைப்பட விமர்சனம்….

By 0 84 Views

எல்லாத் தலைமுறையிலும் அடல்ட் கண்டெண்ட் என்று இளைஞர்களின் நாடி பிடித்து அவர்களது தற்கால முகங்களைக் காட்ட ஒரு இயக்குனர் கிளர்ந்து எழுந்து வருவார். அப்படி இந்தத் தலைமுறையில் கிளைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

இந்த அடல்ட் கண்டெண்ட் என்பதிலும் இரண்டு வகை உண்டு. இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களைக் கொச்சையாகக் காட்டிக் காசு பண்ண நினைக்கும் முரட்டு குத்து கூட்டம் ஒரு வகை. அவர்களைப் புறந்தள்ளி விடலாம்.

இன்னொரு வகை, கூடக் குறைய இல்லாமல் அப்படியே இளைஞர்களின் வாழ்வைப் படம் பிடித்து காட்டக்கூடியவை. அதில் அவர்களது எல்லா இச்சைகளும், இன்னல்களும் பாரபட்சமில்லாமல் பச்சையாகப் பந்தி வைக்கப்படும். அந்த வகைப்படம்தான் இது.

இன்னும் கன்னித்தன்மையை இழக்காததாக சொல்லிக்கொள்ளும் ஒரு யுவதியும், ஒரு நாளில் நான்கு முறை வரை சுயத்தை சுகிக்கும் பழக்கம் கொண்ட ஒரு இளைஞனும் ஒரே அறையில் வாடகைக்கு வாழ நேர அதன் விளைவு என்ன என்பதுதான் கதை…

இந்தக் கதையைக் கேட்டதும் “அய்யய்யோ…” என்று தெறித்து ஓடுபவர்கள் கூட இதையெல்லாம் எங்கோ பார்த்தோ, கேட்டோ கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த அசாதாரண ஒழுக்கம் தவறிய இளைஞன் ஒருவனை நம்பிய ஒரு பெண்ணின் நிலை பற்றிய நிலையாமைதான் இந்தப்படம்.

அந்த எதிர்மறை இளைஞனின் பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜி.வி.பிரகாஷின் மனத் திண்மை வியக்க வைக்கிறது. எத்தனை கோடி கொடுத்தாலும் இன்னொரு ஹீரோ இப்படி நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகமே.

ஐடி துறையின் சொர்க்கம் என்று கருதப்படும் பெங்களூருதான் கதைக்களம். பொள்ளாச்சியிலிருந்து பெங்களூரு வந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் நண்பர்களுடன் தங்கி குடியும், குடித்தனமுமாக இருக்கிறார். நவ நாகரிகத் தொட்டிலாக இருக்கும் பெங்களூருவில் ஆண்களும், பெண்களும் கூட ஒரே அறையில் தங்கிக் கொள்ளும் கலாச்சாரமும் இருக்க, அப்படி திவ்யபாரதியுடன் ஜிவி தங்க, இருவரும் அறையுடன் சேர்ந்து உடலையும் பகிர்ந்து கொள்ள, சொற்ப நேர சுகம் திவ்யாவின் கர்ப்பத்தில் கொண்டு விடுகிறது.

ஜி.வியின் அறிமுகமே அற்பமாக ஆரம்பிக்கிறது. இரவில் மிகுந்த குடியால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஒர்க் பிரம் ஹோம் பணியில் இருக்கும் நண்பனின் லேப்டாப்பை கழிவுக்கோப்பையாகக் கருதி சிறுநீர் கழிக்கிறார். ஆனால், அப்படிச் செய்ததற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமல், தன்னலத்துடன் வாழும் பாவியான கேரக்டர் ஜீவிக்கு.

வயிற்றில் பீர் பாட்டில் குத்தி நண்பன் துடிக்க, ஆக்கி வைத்த பிரியாணி, சிக்கன் வறுவலை ருசிக்க முடியாமல் அனைவரும் வருத்தத்தில் இருக்க, எதுவுமே நடவாதது போல் பிரிட்ஜில் வைத்த மாம்பழச் சாற்றுடன் சிக்கன் பிரியாணியை ரவுண்டு கட்டி சால்னா ஊற்றி, வறுவலைத் தொட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு ஒரு கட்டு கட்டுகிறார். அதுதான் அவர் ஏற்றிருக்கும் டார்லிங் கேரக்டர். அந்த சுயநலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து கொள்ள திவ்யாவை அவர் எப்படிக் கையாண்டு அதன் மூலம் அவர் எப்படி காயடிக்கப்படுகிறார் என்பது மீதி. ஆமாம்… அதில் அவரது ஆண்மையிழப்பும் இருப்பது அதிர்ச்சி.

திவ்யபாரதிக்கு இது அறிமுகப்படம். இதே பெயரில் இந்திய சினிமாவைக் கட்டியாண்ட ஒரு முன்னாள் நடிகையின் அழகுக்கு இவரை ஈடு சொல்ல முடியவில்லை. ஆனாலும் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய, கட்டுடல் காட்டி திவ்யமாகக் கிறங்கடிக்கிறார் திவ்யா. அருகில் ஒரு ஆடவன் இருக்கிறான் என்ற கவனமே இல்லாமல் அரைக்கால் சட்டையுடனும், அரைகுறை ஆடையுடனும் இருந்து கொண்டு, எந்த முன்னேற்பாடும் இல்லாமல் சல்லாபித்து, கருவைச் சுமந்ததும் கவலைப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.

அதுவும், அக்காவின் கணவன்தான் குடும்பத்தின் அதிகார மையம் என்றிருக்க, அவனோ அராஜகப் பேர்வழியாகவும் இருக்க, எப்படி வரும் அந்தத் தைரியம் திவ்யாவுக்கு என்பதுவும் புரியவில்லை. ஒரு கப் கஞ்சியும், தேங்காய் பர்பியும் செய்து கொடுத்தால் தன்னையே தரத் தயாராகும் திவ்யா அவன் கருவைக் கலைக்கச் சொல்லிக் மிரட்டும்போது மட்டும், “நான் உன்கிட்ட காலை விரிக்கும்போதே யோசிச்சிருக்கணும்…” என்பதிலும் எந்த நியாயமும் இல்லை.

ஜி.வி எதைச் செய்தாலும் உடனுக்குடன் அவரது அண்ணனிடம் போட்டுக் கொடுக்கும் பக்ஸ், ஜிவி தனியாகச் சென்று ஒரு பெண்ணுடன் தங்குவதை எப்படிக் கவனிக்காமல் விடுகிறார்… தன் கண் முன்னே அவன் காண்டம் வாங்கும்போதும் எப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுவும் லாஜிக் பிசிறல்.

முதல் ஒரு மணிநேரம் கதைக்குள்ளேயே வராத படம், இடைவேளையில்தான் கதை என்ற ஒன்றையே கண்டு பிடிக்கிறது. அதுவும் ஜிவி, திவ்யாவின் குடும்பங்கள் கதைக்குள் வந்ததும்தான் மனதைப் பிசைய வைக்க ஆரம்பிக்கிறது. யாருக்கும் அடங்காமல் ஜிவி திமிர, திவ்யாவின் மாமாவோ, சரியான பொறி வைக்க, ஜிவியின் மொத்தக் குடும்பமும் உள்ளே போக ஜிவ்வென்று சூடு பறக்கிறது திரையில்.

அந்தச் சூட்டை ஆற விடாமல் அப்படியே கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருந்தால் மிரட்டியிருக்கும். ஆனால், முக்கால்வாசிப்படத்துக்கு மேல் நகைச்சுவையை அதில் மிக்ஸ் செய்யப்போய் நெருப்பு நீறு பூத்து விடுகிறது. 

இருந்தாலும், ராம்தாஸ், மிஷ்கின் போன்றோர் ராவான கதையில் லைம் வாட்டர் சேர்த்து ருசிக்க வைக்கிறார்கள் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் போகும் காட்சியில் அங்கே ஜெய் பீம் குருமூர்த்தியே இன்ஸ்பெக்டராக இருப்பதும் ரசிகனின் ரசனைக்கு இயல்பாய் கிடைத்த போனஸ். மிஸ்யூஸ் பண்ணினாலும் மிஷ்கின் வரும் காட்சிகள் மிஸ் பண்ணக் கூடாதவை. 

அதையெல்லாம் தாண்டி எப்படித்தான் படம் முடியப் போகிறது என்று நினைக்கும் நேரத்தில் ஒரு முடிவெடுத்து முடித்து வைக்கிறார் திவ்யபாரதி.

தேனி ஈஸ்வரின் கேமிரா வண்ணம் காட்சிகளில் தேன் குழைத்திருக்கிறது. அதில் சித்து குமாரின் இளமை பொங்கும் இசையும், சான் லோகேஷின் எடிட்டிங்கும் ஈடு கொடுத்து இனிமை கூட்ட சரியான விஷுவல் ட்ரீட் நமக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் டில்லிபாபுவின் பெயரைத் திரையில் காண்பிக்கும்போது மழை பெய்வது, பணத்தைத் தண்ணீராகப் பெய்த குறியீடோ என்றுதான் நினைக்க வைக்கிறது. இல்லாவிட்டால் இயக்குநர் நினைத்தது அதற்கு நேரெதிர் திசையில் தள்ளிப் போயிருக்கும்.

கடைசியில் அப்படி ஒரு முடிவெடுக்கும் முன்னர் ஜிவியைப் பார்த்து புன்னகை செய்தவாறே ஏளனத்துடன் திவ்யா பார்க்கும் பார்வை “அவ்வளவுதானா உன் ஆண்மை..?” என்று கேட்காமல் கேட்கிறது. அங்கே நிற்கிறார் இயக்குநர்.

ஆனால், பெண்மையின் பக்க நியாயம் சொல்லும் இந்தக் கதை வழக்கமான ஹீரோ வழியிலேயே தொடங்கித் தொடர்வது சரியானத் திரைமொழியாகத் தெரியவில்லை. அதுவே பார்வையாளனுக்குக் குழப்பத்தைத் தரக் கூடும்.

பேச்சிலர் – ஏமாற்றாதே… ஏமாறாதே..!

– வேணுஜி