April 24, 2024
  • April 24, 2024
Breaking News
December 9, 2021

ஜெயில் திரைப்பட விமர்சனம்

By 0 625 Views

தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லும் இயக்குனர் வசந்தபாலன் இந்தப்படத்தில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் பூர்வகுடிகளின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லி இருக்கிறார்.

நகர வளர்ச்சியில் இந்த நகரின் பூர்வகுடிகள் நகருக்கு வெளியே குடியமர்த்தப் படுவதால் அவர்களின் கல்வி, வாழ்க்கை தரம், தொழில் வாய்ப்பு எல்லாமே பறி போய் விடுவதை ஒரு கண்ணீர்க் கதையுடன் நம் முன் விரிக்கிறார் அவர்.
 
சென்னையின் பூர்வகுடிகளான சென்னைத் தமிழர்கள் நகர விரிவாக்கத்தின் விளைவாக சென்னைக்கு சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் கான்கிரீட் கட்டடங்களில் அடைபட்டு எல்லாம் இழந்து நிற்பதைக் காட்டி அதுவும் ஒரு ஜெயில்தான் என்று உரக்கப் பேசுகிறார் வசந்தபாலன்.
 
இதில் கதைதான் கற்பனையே தவிர கதை நடக்கும் களம் நம் கண்முன்னே விரிந்து கிடக்கிற நிஜக் குடியிருப்பு பகுதிதான். முழுப்படத்தையும் லைவ் லொகேஷன் ஆக அங்கேயே வைத்து முடித்திருக்கிறார் வசந்தபாலன்.
 
அங்கே குடியமர்த்தப் பட்டிருக்கும் ஜிவி பிரகாஷ், நந்தன் ராம், பசங்க பாண்டி மூவரும் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஜிவி பிரகாஷ் திருட்டு வேலைகளில் ஈடுபட நந்தன் ராம் போதைப்பொருள் விற்பவராக வருகிறார். இந்த போதை சாம்ராஜ்யத்தை யார் கையில் வைத்திருப்பது என்பதில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி தகராறும், குத்து வெட்டுகளும் நடந்துகொண்டிருக்க நந்தன் ராம் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது.
 
பசங்க பாண்டி சிறுவயதிலேயே திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வளர்ந்த வாலிபனாக மீண்டும் அந்த குடியிருப்புக்கு வந்து சேர்கிறார். மூவரின் நட்பு மீண்டும் வலுப்பெறுகிறது.
 
அங்கிருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் பிழைக்கும் வழி இன்றி இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட எப்போதும் போலீஸ் பார்வை அந்த நகரின் மேலேயே விழுந்திருக்கிறது. இதில் ஜிவி பிரகாஷ் நந்தன் ராம் போன்றோர் அடிக்கடி ‘உள்ளே’ சென்று ‘வெளியே’ வருபவர்களாக இருக்கிறார்கள்.
 
இதில் பசங்க பாண்டி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரே காரணத்தாலேயே வேலை கிடைக்காமல் அலைய சைதாப்பேட்டையில் குடியிருப்பதாக பொய் சொல்லி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்.
 
இந்நிலையில் போதை மருந்து கோஷ்டிகளின் தகராறு காரணமாக நண்பர்கள் கண்முன்னே நந்தன் ராம் கொல்லப்பட, பசங்க பாண்டி வேறு வழியில்லாமல் அந்த கொலையாளியை கொல்ல நேர்கிறது. அந்த பழியைத் தான் ஏற்றுக் கொள்ள துடிக்கும் ஜிவி பிரகாஷுக்கு தடயங்கள் உதவாமல் போக பசங்க பாண்டி மீண்டும் சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவரை மீட்க போராடும் ஜிவி பிரகாஷின் முயற்சி வென்றதா என்பது மீதி கதை.
 
நட்புக்காகவே வாழும் ‘கர்ணா’ என்ற கேரக்டரில் வருகிறார் ஜிவி பிரகாஷ். கடந்த வாரம்தான் ஐடி துறையில் வேலை பார்க்கும் ஹைடெக் இளைஞராக அவரை ‘பேச்சிலர்’ படத்தில் பார்த்தோம். அதற்கு சற்றும் தொடர்பில்லாத சென்னை மக்களின் அடித்தட்டு இளைஞராக சென்னைத் தமிழ் பேசிக் கொண்டு வரும் சில்லரைத் திருடனாக அப்படியே ஆளே மாறிப் போயிருக்கிறார்.
 
சென்னை பூர்வகுடிகளின் உடல்மொழியும் வாய்மொழியும் அவருக்கு இயல்பாக வரப்பெற்றிருக்கிறது. ஹீரோயிசம் தரும் படங்களை நம்பாமல் பாத்திரங்களில் தன்னை அப்படியே பொருத்திக் கொள்கிற ஜிவி பிரகாஷின் முயற்சி பாராட்டத்தக்கது. அவரது சமீப கால படங்களில் அவரை முன்னிறுத்தியே கதை புனையப் படாமல் அந்தக் கதைக்குள் ஒரு பாத்திரமாக அவர் வந்து கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்க ‘ஹீரோயிசம்’.
 
அறிமுகக் காட்சியில் கொஞ்சம் பயமுறுத்தினாலும் கதை நகர நகர தன் நண்பர்களின் வாழ்க்கைக்காக எதையும் செய்யத் துணியும் அவரது பாத்திரம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது அதிலும் தம்பியை இழந்து நிற்கும் நந்தன் ராமின் அக்காவுக்கு அவளது காதலனை தேடிச் சேர்க்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார் ஜிவி.
 
அவரது போக்கு பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அம்மா அவர் கண்ணெதிரே முயற்சி செய்தும் அதை கண்டுகொள்ளாமல் தட்டில் சோற்றைப் போட்டு தின்று கொண்டிருக்கும் அவரது மன உறுதியும், மோதலில் தொடங்கியே காதலை வளர்த்துக் கொள்வதும் ரசிக்கத்தக்க அம்சங்கள்.
 
அவருக்கு இணையான பாத்திரத்தில் வரும் நந்தன் ராமுக்கு இது அறிமுக படம் என்றாலும் அப்படி தெரியாமல் அந்த பாத்திரத்தில் ஒன்றி இயல்பாக நடித்திருக்கிறார். அவரது இளமைக்கும் உயரத்துக்கும் இனி வரும் படங்களில் அவரே ஹீரோவாகவும் பார்க்க முடியும்.
 
பசங்க படத்தில் சிறுவனாக பார்த்த பாண்டி இப்போது இளைஞன் ஆகி இருக்கிறார். சிறையிலிருந்து திரும்பி வரும் வழியிலேயே அம்மா குப்பை பொறுக்கிக் கொண்டிருப்பதை பார்த்து பதறி, வண்டியை நிறுத்தி ஓடும்போது நெகிழ வைக்கிறார். தன் பெற்றோர் இந்த கதியில் இருக்க நண்பர்கள் அவர்களுக்கு உதவவில்லையோ என்று சந்தேகிக்கும் அவர், உண்மை தெரிந்து தன் நட்பை புதுப்பித்துக் கொள்வது ரசிக்க வைக்கிறது .
 
இந்த மூன்று நண்பர்களும் குடியிருப்பு பகுதிக்கு உள்ளேயே ஓட ஓட விரட்டப்படுவதில் எத்தனை மைல் தூரம் ஓடி இருப்பார்கள் என்று தெரியவில்லை.
 
ஜிவி பிரகாஷின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் தன் பாத்திரத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை மகனிடம் சண்டை போட்டுக்கொண்டு வெளியே போவதும் அவன் திரும்பி வருவதற்குள் வீட்டுக்குள் வந்து மகன் பசியோடு வருவானே என்று சமைக்கும் ஒரு அப்பாவி அம்மாவை இந்த படத்தில் அவர் மூலம் பார்க்க முடிகிறது. ஆனால், அவர் ஆற்றலுக்குத் தீனி இந்தப்படத்தில் இல்லைதான்.
 
முதல் முதலிலேயே ஜிவி பிரகாஷின் கழுத்தில் கத்தியை வைத்து நாயகி அபர்ணதியும் தனக்கான பாத்திரங்களை தேடித்தேடி நடித்து வருவது சிறப்பு. சமீபத்தில் தேன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்ட அவர் இந்தப் படத்தில் இன்னொரு முறை அதை நிரூபித்திருக்கிறார்.
 
பல படங்களில் கண் சிமிட்டும் நேரத்துக்குள் வந்து போகும் சரண்யா ரவிச்சந்திரனுக்கு இந்தப்படத்தில் சொல்லிக் கொள்ளத்தக்க பசங்க பாண்டியின் ஜோடியான வேடம். எல்லாப் படங்களிலும் அழுகாச்சியாக வரும் இவருக்கு இதில் ஓரளவுக்கு சிரிக்க முடிகிறது. அவரது காதலும் எங்கே பறிபோய் விடுமோ என்று நினைத்த வேளையில் அப்படி நடக்காதது ஆறுதல்.
 
இன்ஸ்பெக்டராக வரும் ரவிமரியா எப்படி இந்தக்குடியிருப்பு இளைஞர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்று நினைத்தால் பகீரென்கிறது. அப்பாவி இளைஞர்களின் மூலம் அவர் வசதிகளைப் பெருக்கிக் கொண்டாலும் அவருக்கு இருக்கும் ‘உள் மூலம்’ அவரை வதைப்பதை நினைத்து சிரிக்கவும் முடிகிறது.
 
வணிகரீதியான திரைக்கதை அமைந்திருந்தாலும் வரிசையாக வடசென்னை வாசிகளின் படங்களை பார்த்ததாலோ என்னவோ ஒரு சிறிய அலுப்பு ஏற்படுகிறது.
 
அந்த ஏரியா முழுக்க பரந்தும் விரிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் கணேஷ் சந்திராவின் கேமரா இண்டு இடுக்கெல்லாம் பயணப்பட்டு அந்த அவல வாழ்க்கையை நம் கண்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது. 
 
ஜிவி பிரகாஷின் இசையில் சென்னைக்கேற்ற பாடல்கள் அமைந்திருந்தாலும் நான்கு பாடல்கள் அதிகமோ என்று நினைக்க வைக்கிறது. இரண்டு பாடல்கலே இந்தப் படத்துக்கு போதுமானதாக இருக்கும்.
 
தங்கக் கூண்டில் வைக்கப்பட்டாலும் சிறைப்பட்டு தவித்துப் போகும் கிளியைப்போல குடிசை வாழ் மக்களை கட்டடங்களில் குடியமர்த்துகிறோம் என்கிற போர்வையில் அவர்களின் எல்லா உயர்வுகளையும் முடக்கிப் போட்டு குற்றவாளிகளாக உருவாக்குவதாக வசந்தபாலன் விவாதக்களமாக முன் வைக்கும் இந்த ஜெயில் தமிழுக்கு வித்தியாசமான முயற்சியாக அமைந்திருக்கிறது.
 
ஜெயில் – குற்றம் கொண்ட சுற்றம்..!