April 20, 2024
  • April 20, 2024
Breaking News
December 10, 2021

மட்டி படத்தின் திரை விமர்சனம்

By 0 530 Views

ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல்.

 
அதிலும் இதுவரை உலக அளவில் யாரும் முயற்சி செய்யாத ‘மட் ரேஸ்’ என்கிற சதுப்பு நிலத்தில் ஜீப் பந்தயம் நடத்தும் போட்டிகளை இந்தப் படத்தின் களமாக இருப்பது உலக அளவிலேயே ஒரு புதிய முயற்சி என்று கூறலாம்.
 
இந்தப் படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்களை ஒதுக்கி இப்படியொரு முயற்சியை செய்திருக்கும் இயக்குனருக்கு முதலில் பாராட்டுகளும் வந்தனமும்.
 
டெண்டருக்கு விட்ட காட்டுக்குள் மரங்களை வெட்டி சப்ளை செய்யும் வேலையில் இருக்கிறார் நாயகன் ரிதன். தம்பி முறை கொண்ட கார்த்தியோ இப்படி மட் ரேஸில் முதன்மை முதன்மை பெற்றவராக இருக்க அவருக்கும் இவருக்கும் சொல்லப்படாத ஒரு பகை கனன்று கொண்டே இருக்கிறது.
 
மரங்களை வெட்டும் பகுதியான ‘கூப்’பில் அண்ணன் வேலை செய்து கொண்டிருக்க அந்த கூப்பை குத்தகை எடுத்து இருப்பவரிடம் இருந்து தன் கைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தம்பி முயற்சி செய்ய அது ஒரு பகையாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தம்பி கார்த்திக்கு மட் ரேஸில் ஒரு வில்லன் கல்லூரி காலத்திலிருந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க, அவரை நாயகன் எப்படிக் காப்பாற்றி இருவருக்குமான பகை எப்படி தீர்கிறது என்பது கதை.
 
படத்தில் வரும் கார் பந்தய காட்சிகள் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாக ஆரம்பத்திலேயே ஒரு ரேஸை வைத்து நம்மை தயார்படுத்தி விடுகிறார் இயக்குனர். அத்ற்குப்பின் கதை புகுந்து விட, இரண்டாவது பாதி முழுக்க ஜீப் ரேஸிலும், ஆக்ஷனிலுமே கழிகிறது.
ஆனால், ஒரு நிமிடம் கூட நம் கண்களை அங்கே இங்கே சிதற விடாமல் கட்டிப்போட்டு வைக்கும் இயக்குநருக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.
 
நாயகனாக ரிதன் மலை முகடுகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும்,  வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும்  அசத்தியிருக்கிறார். தம்பி எதிர்த்தாலும் பாசத்தை விட்டுக் கொடுக்காத அண்ணனாகவும் மனதைக் கவர்கிறார். தம்பியாக கார்த்திக்கு இரண்டாவது நாயகனுக்கான பாத்திரம். அண்ணனை முறைப்பதும், முரண்படுவதும் என்றிருந்தவர், க்ளைமாக்ஸில் அண்ணனுடன் இணைந்து வில்லனை ஜெயிக்கும் இடங்களில் ஈர்க்கிறார். 
 
நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை இல்லை. ஒருவேளை பார்ட் டூவில் இவர்களுக்கு வேலை இருக்குமோ என்னவோ..?
 
ஆந்த முரட்டு வில்லனை எங்கே பிடித்தார்கள் என்றே தெரியவில்லை. அட்டகாச அறிமுகம். படத்தின் அனைத்து நடிகர்களுமே அறிமுகங்கள் என்பதை நம்பவே முடியவில்லை.
 
ஜீப் ரேஸ் நம் கண்களையும், கருத்தையும் ஒருங்கே கட்டிப் போட்டு விடுகிரது. அதிலும் க்ளைமாக்ஸ் இறுதி 20 நிமிடங்கள் திரையரங்கே அதிர்கிறது. எப்படி இந்த ரேஸை திரையில் கொண்டு வந்தார்கள் என ஆச்சர்யமாக இருக்கிறது. காடு மலைமுகட்டில் தாறுமாறாக வேகமாகப் பறந்து செல்லும் ஜீப்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து படம்பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. ரதீஷுக்கு இந்திய ரசிகர்கள் சார்பாகப் பாராட்டுகள். 
 
கே. ஜி. எஃப்’  புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். அனைத்து இடங்களிலும் கே ஜி எஃப் வாடை பலமாக அடிக்கிறது. ஆனால் படத்திற்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஷான் லோகேஷ் படத்தொகுப்பில் படம் பம்பரமாகச் சுழல்கிறது. 
 
‘புலி முருகன் ‘ புகழ் ஆர்.பி.பாலா இப் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். பாத்திரங்கள் பேசுவது ஒரு டப்பிங் படமாக உணர வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
 
மட்டி – தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு கேஜிஎப்.