July 16, 2026
  • July 16, 2026
Breaking News
February 20, 2026

அறிவான் திரைப்பட விமர்சனம்

By 0 284 Views

கிரைம் திரில்லர் வகைப் படங்களின் சீசன் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் படம்.

ஊர் ஊராக மாற்றலாகி கொண்டிருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி ஆனந்த் நாக்  இப்போது நெய்வேலி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கின்றார். 

வரும் வழியிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணை மீட்கிறார்.

அவர் பொறுப்பேற்ற இரண்டொரு நாட்களிலேயே ஒரு கொலை நடக்கிறது. அது விபத்தா கொலையா என்று விசாரணை நடைபெறும் போது இன்னொரு கொலை நடக்க, அது தொடர்பாக ஒரு பாலியல் தொழிலாளியை விசாரணை செய்கையில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே அவளும் கொல்லப்படுகிறாள்.

இந்த தொடர் கொலைகள் போலீசுக்கு சவால் விட ஆனந்த நாக் இந்த வழக்கை எப்படிக் கையாண்டார்..?  கொலையாளி யார்..? கொலைக்கான காரணம் என்ன..? என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் கண்டு கொள்க.

இயக்குநர் எஸ்.அருண் பிரசாத்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் நாக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன கரெக்ட்  ஃபிட்டில் இருக்கிறார். ஆனால் என்ன ஒன்று வட இந்திய போலீஸ் போலவே மேம்போக்காக நடந்து கொள்கிறார். தென்னிந்திய போலீஸ்கான கம்பீரம் குறைவாக இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஜனனி குணசீலன் youtube சேனல் நடத்துகிறார் என்கிறார்கள். ஆனால் அவரும் கிரைம் ரிப்போர்ட்டர் போல க்ரைம் சீனில் துப்பறிகிறார். போலீஸ் தீர்ப்பதற்கு முன்னால் அந்த வழக்கை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்புகிறார். 

ஆனால் நம்மால்தான் அதை நம்ப முடியவில்லை. 

ஆனந்த் நாகைத்தான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற நிலையில் தன்னுடைய திறமையை வைத்து அவருக்கு உதவலாம் என்று ஏன் ஜனனி நினைக்கவில்லை..?

மற்றபடி அந்தக் கேரக்டரில் ஜனனி அழகாகப் பொருந்தி இருக்கிறார்.

இவர்களுடன் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களில் வந்து தலையை காட்டி அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டிரோன் ஷாட்டுகளில் அதிகமாக கவர்கிறார் ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி.

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.

திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும்  எஸ்.அருண் பிரசாத், பட ஆரம்பத்தில் இருந்தே டென்ஷனை பில்ட் அப் பண்ணிக்கொண்டு போய் இருக்கலாம். ஆனால் ஒரு கிரைம் திரில்லர் திரைக்கதை எந்தவிதமான பதட்டத்தையும் ஏற்படுத்தாமல் போய் கொலையாளி யார் என்று தெரிந்த வினாடியில் இருந்து மட்டுமே வேகம் எடுக்கிறது. 

முன்பாதியிலேயே அந்த வேகம் எடுத்திருந்தால் இன்னும் படத்தை ரசித்து இருக்க முடியும்.

ஆனாலும் எப்படி எப்படியோ நம்மை அலைக்கழித்து கடைசியில் கொலையாளியின் நியாயத்தை நமக்குப் புரியவைத்து விடுகிறார் இயக்குனர். 

அதில் பெண் குலத்தின் மீதான கரிசனம் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். 

எங்கே எந்தப் பெண் எப்படி பாதிக்கப்பட்டாலும் உடனே அவர்களுக்கு உதவ அவசர அழைப்பான 181 ஐ உபயோகப்படுத்த சொல்லி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியையும் கடத்தி இருக்கிறார். 

அந்த நற்சிந்தனைக்கு பாராட்டுகள்..!

அறிவான் – நெய்வேலி நடுக்கம்..!

– வேணுஜி