அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’, தமிழ்நாடு முழுவதும் 24-ம் தேதி வெளியாகி வசூலில் முன்னிலை வகிக்கிறது.
அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் சூழலில் தூங்காநகரமான மதுரை மேலுரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கல்லூரி படிக்கும் ஏழை மாணவி ஒருவருக்கு காலேஜ் கட்டணம் கட்டி உதவி இருக்கிறார்கள்.
அதுவும் அவர்கள் வலிமை படத்துக்காக கட்டவுட் நிறுத்துவதற்காக சேர்த்து வைத்த தொகையை வைத்துதான் இந்த கட்டணத்தை கட்டி இருக்கிறார்கள் என்பது சிறப்பான செய்தி.
இது குறிச்சு அன்பின் அதிபதி அஜித் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ’அசல் வெங்கடேசன்,” ஏ.கே -யின் திரைப்படத்தை எப்போதும் கொண்டாடி தீர்ப்போம். எங்க மேலூர் கணேஷ் தியேட்டரில் அஜித் படத்தன்று திருவிழா கோலாகலமா இருக்கும். அன்னிக்கு மேலூர் சுற்றுப்புற ரசிகர்கள் அம்புட்டு பேரும் அன்னிக்கு கண்டிப்பா சந்திப்போம்.
அதனால் எங்களுக்கு எப்போதும் கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வதில் போட்டி இருக்கும். இச் சூழலில் வலிமை படத்திற்காக காத்திருந்து. எங்கள் டீமில் பேசி கட் அவுட் அடிக்க பணத்தை சேர்த்து வைச்சிருந்தோம்.
இந்த சூழலில் ஆசிரியராக உள்ள எனது அக்கா காஞ்சனா மூலம் ஒரு தகவல் வந்தது. கல்லூரியில் படிக்கும் மாணவி நந்தினி என்ற மாணவி கல்லூரி படிக்க கட்டணம் கட்ட சிரமப்படுகிறார் என தெரிவித்தார்.
இதை அறிந்து என் நண்பர்களிடம் பேசினேன். அதன் பின் பி.எட் படிக்கும் மாணவிக்கு கல்லூரி பணம் கட்ட முடிவு செய்து நாங்கள் பேனருக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து மாணவிக்கு காலேஜ் பீஸ் கட்டிட்டோம்.
மேலூர் பெருமாள்பட்டியை சேர்ந்த மாணவி நந்தினியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வாரார். குடும்ப வறுமை காரணமாக முழுமையாக அவரால் கல்லூரிக்கு பணம் கட்ட முடியவில்லை. பி.எட் படிப்பதால் அவருக்கு பிராஜெக்ட் செலவு அதிகமாக இருந்துருக்குது.
இதனால் கடந்த வருடம் கூட கல்லூரிக்கு பணம் கட்டவில்லை. இதனால் இரண்டு ஆண்டுக்கும் சேர்ந்து 10 ஆயிரம் பணத்தை மாணவியின் பெயரில் கல்லூரிக்கு சென்று நேரடியாக கட்டிவிட்டோம். மீதம் இருந்த பணத்தில் சிறிய அளவு கட் அவுட் அடித்துக் கொண்டோம்.
மாணவி நந்தினிக்கு உதவியது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்குது’ என்று தெரிவித்தார்.
அஜித்திற்கு கட் அவுட் அடிக்க வைத்திருந்த பணத்தில் மாணவிக்கு உதவிய அஜித் ரசிகர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.