ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா.
சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அங்கே இருக்கப் பிடிக்காமல் வாழ்வில் அமைதி தேடி காசிக்கு செல்கிறார்.
அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், வாழ்க்கையின் அனுபவங்களை மற்றவர் வாழ்க்கைக்கு பயன்படும் விதத்தில் எழுதி வைக்க வேண்டும் என்கிற அவரது தாத்தாவின் ஆலோசனைதான். அந்த வகையில் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்கிற வேட்கை அவருக்குள் புதைந்து கிடக்கிறது.
வாலிபனாக வளர்ந்தும், மோன தவமிருந்தும் அவர் தேடிய அமைதி கிடைக்காமல் போகவே அவரது குருநாதர் சொல்படி எழுத்தாளராக முடிவெடுத்து மீண்டும் நகர வாழ்க்கைக்குத் திரும்புகிறார். திரும்பும் வழியில் தமிழ்க் கலாச்சாரத்தை அறிய ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் தமிழ் பெண் மதுராவுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாகி அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்குக் கொண்டு செல்கிறது.
ஆனால் அங்கும் விதி விளையாடி அந்தப் பெண் காமுகர்களால் கொல்லப்பட மீண்டும் அமைதி தேடி ரிஷிகேசம் செல்கிறார். அங்கேயாவது அவர் தேடிய அமைதி கிடைத்ததா என்பது மீதிக் கதை.
நடிகர் வெற்றிக்காகவே இப்படியான கதைகள் எழுதப்படுகின்றனவா அல்லது இப்படி எழுதப்படும் கதைகள் வெற்றியைத் தேடி வருகின்றனவா என்பது தெரியவில்லை. ‘இல்லாமல் இருத்தல்’ என்கிற மோன நிலை தேடி அலையும் அவர் இந்தப் படத்தில் ‘நடிக்காமல் நடித்திருக்கிறார்’ எனலாம்.
சவரம் செய்தபடி அவர் படத்தில் வருவது கொஞ்ச நேரம்தான். மற்ற எல்லா நேரத்திலும் சடா முடியுடனேயே திரிகிறார்.
படத்தில் கால்வாசி பகுதிக்கு வந்தாலும் வெற்றியைக் காதலிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த தமிழ் பெண் மதுரா, அழகிலும் நடிப்பிலும் கச்சிதமாக இருக்கிறார். அவர் இலங்கையில் இருந்து ஜெர்மனிக்குக் குடி பெயர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்பது போன்ற தமிழ் உச்சரிப்பில் பேசினாலும் அதற்கான எந்த விளக்கமும் படத்தில் இல்லை.
இன்னொரு நாயகியாக வரும் அனு சித்தாராவுக்கும் கால்வாசிப் படத்தில்தான் பங்கு கிடைத்திருக்கிறது. கொழுக் மொழுக்கென்று ஆகிவிட்டாலும் நல்ல விஷயங்களே நடக்காத கதையில் வெற்றிக்கும் நமக்கும் அவர் ஒரு ஆறுதலாக அமைந்திருக்கிறார்.
வெற்றியின் அப்பாவாக நடிக்கும் அருவி மதன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் பண்பட்ட நடிப்பில் கவர்கிறார்கள்.
இந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் காசி, ராமேஸ்வரம், ரிஷிகேசம் முதலான புனிதத் தலங்களை தன் கேமராவுக்குள் சுருட்டி வந்து பயணிக்க முடியாத இந்துக்கள் தங்கள் பிறவிக் கடனை திரையில் நிறைவேற்ற உதவுகிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவும் படத்தின் தன்மை புரிந்து கொண்டு படத்தோடு ஒன்றி இசையமைத்திருக்கிறார்.
அதில் படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதனுக்கும் பங்குண்டு. படம் மெதுவாக நகர்ந்தாலும் அதுவே இந்தக் கதையின் திரை மொழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.
மனித வாழ்வின் உணர்ச்சி நிலைகளான பாசம், குரோதம், வஞ்சம், காதல், காமம், துறவறம் என்று எல்லா தளங்களிலும் பயணப்பட்டு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர் ஆர்.சிவா.
அவரே தயாரிப்பாளரும் ஆனதால் அவரது விருப்பப்படியே இந்தப் படம் திரைக்கு வந்திருக்கிறது.
ரசிகர்கள் விருப்பப்படி அது இருக்கிறதா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
படத்தில் வரும் ‘ஆலன்’ என்ற தலைப்பு எழுத்தாளராக ஆசைப்பட்ட நாயகன் வெற்றி கடைசியாக எழுதி முடித்த ஒரு புதினம் என்று அறிக..!
ஆலன் – காகித ஓடம்..!
– வேணுஜி