November 16, 2026
  • November 16, 2026
Breaking News
November 16, 2026

ஃபிளாக் (FLAG) திரைப்பட விமர்சனம்

By 0 13 Views

கொடிதான் ஒரு நாட்டின் அடையாளம் என்பதால் தலைப்பே இது நாட்டுப்பற்றுள்ள படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.

பெங்களூரில் தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றுகிறார் மிக்கி மக்கி ஜா. அதனாலேயே அவருக்கு தலைநகர்  செங்கோட்டையில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றும்போது நேரில் பார்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது.

அவரது பேரனான திஹான், பெற்றோரை இழந்த நிலையில் மிக்கி மக்கி ஜா கவனிப்பில் வளர்கிறார். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

எனவே தாத்தாவின் ஆசையைப் பூர்த்தி செய்ய தானே கிளம்பி டெல்லி செல்கிறான் திஹான். செல்லும் வழியில் ஏகப்பட்ட தடைகளையும், சிக்கல்களும் ஏற்பட பல்வேறு அனுபவங்களுடன் அதையெல்லாம் தாண்டி தலைநகர் செல்லும் திஹான், தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றினானா என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

அதை உணர்வு பூர்வமாகவும் நாட்டுப்பற்றுடனும் நம் மனங்களில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்.

தாத்தாவும் பேரனும்தான் கதையின் அடி நாதமாக செல்கிறார்கள் என்பதால் அவர்கள் இருவரும் மனதில் நிறைகிறார்கள். 

தாத்தாவாக நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

திஹான் ஏற்றிருக்கும் மோகனவேல் என்ற துடுக்குத்தனமான பாத்திரம் மனதைக் கவர்கிறது. அதே நேரத்தில் பெற்றோரை இழந்து வாடும்போது நம் இதயங்களை நெகிழச் செய்கிறான்.  திஹான் மேற்கொள்ளும் டெல்லி பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களும், மனிதர்களும் அவனுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது.

இவர்களுடன் பிற பாத்திரங்களில் நடித்திருக்கும் கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பாத்திரப்படைப்பால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒன்றாகப் பார்த்த அனுபவத்தை வழங்குகிறார்கள்.

படத்தை இயக்கியிருக்கும் எஸ்.பி.பொன்சங்கரே படத்தின் ஒளிப்பதிவாளராகவும் மாறி இருப்பது படத்துக்கு பெரும் பலத்தைத் தந்திருக்கிறது. ஒரு கேமராவினால் ஒட்டுமொத்த இந்தியாவையும் கலாச்சார ரீதியாகவும் அழகியலுடனும், வேற்றுமையில் காணும் ஒற்றுமையையும் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்.

ராஜா ரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் மேற்கொண்டு இருக்கும் இசை வழக்கமான இசையாக இல்லாமல் உணர்வுபூர்வமாகவும், தேசபக்தியுடனும் ஒலித்து இருப்பது நாட்டுப்பறறாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

படத்தொகுப்பாளர் வரதராஜனனின் பணியையும் இங்கே குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.

நாம் இந்தியர்களாக இருந்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் இருக்கும் மாற்றங்கள், அழகியல்கள் , இயற்கை வளங்கள் எல்லாம் எப்படி ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டுத் தெரிகின்றன என்பதை ஒரு சிறுவனின் பார்வையின் மூலமாக நமக்கு கடத்தி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர். 

உலகத்திலேயே பல்வேறு கலாச்சார, மொழி, இன, மத வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் இந்தியர் என்ற ஒரு விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை இதைவிட வேறு ஒருவர் சிறப்பாகக் காட்டி இருக்க முடியாது.

படம் எடுத்தோம் பணம் சம்பாதித்தோம் என்று இல்லாமல், நாட்டுப்பற்றையும் அதே சினிமாவின் மூலம் ஊட்டி விட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர்.

ஃப்ளாக் – சல்யூட்..!

– வேணுஜி