‘கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்..’ என்கிற டைப் கதை இது. சில காமெடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு மேல் சில காரணங்களை அடுக்கி அந்தக் காரணங்களின் மேல் சில காட்சிகளை அடுக்கி அதன் மீது ஒரு கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் காலம் எண்பதுகளில் அமைகிறது. கமலும் ரஜினியும் உச்சத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில் கமல் ரசிகராக நாயகன் சந்தானமும், (அவரை வெறுப்பேற்றுவதற்காகவே) ரஜினி ரசிகராக அவரது தாத்தா ஆர்.சுந்தர்ராஜனும் வருகிறார்கள்.
சந்தானத்துக்கும் அவர் தங்கைக்கும் எப்போது பார்த்தாலும் ஒரு சவால் வந்துவிடும். இதை மனதின் ஒரு ஓரம் வைத்துக் கொள்ளுங்கள்.
இவர்கள் பசையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த வீட்டில் ஒரு புதையலின் வரைபடம் இருப்பதை அறிந்து மன்சூர் அலிகான் கோஷ்டி அதை அடையத் திட்டமிட… அவரிடமிருந்த வைரத்தை விழுங்கி விடுகிறார் ஆர் சுந்தர்ராஜன்.
தாத்தா இறந்துவிட்டார் என்று அறிந்து அந்த வீட்டுக்குள் உறவினர்கள் வந்து சேர, அதில் வரும் உறவுக்காரப் பெண்ணான ராதிகா ப்ரீத்தியை கண்டவுடன் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் சந்தானம்.
தாத்தா பாடியை எடுப்பதற்குள் அவளை காதலில் விழ வைத்து விடுவேன் என்று சபதம் போடும் சந்தானம், தன் தங்கையிடம் அந்த சவாலில் ஜெயித்தாரா, ஆர் சுந்தர்ராஜன் வயிற்றில் இருந்த வைரங்களை மன்சூர் அலிகான் மீட்டாரா என்பதெல்லாம் மீதிக்கதை.
தனக்கு சீரியஸ் வேடங்களைக் காட்டிலும் ஹீரோவாக பயணிப்பதற்கு காமெடி வேடங்களே சிறந்தவை என்பதைக் கண்டு கொண்டு இந்தப் படத்திலும் அந்தப் பாதையிலேயே பயணித்திருப்பதில் தன் ரசிகர்கள் ஆர்வத்துக்கு சந்தனம் பூசி விடுகிறார் சந்தானம்.
காமெடி தூக்கலாக தெரிந்தாலும் மற்ற எல்லாவிதமான உணர்ச்சிகளிலும் கூட அவரை ரசிக்க முடிகிறது.
குழந்தைத்தனம் அதிகமாக தெரியும் நாயகி ராதிகா பிரீத்தியை விட சந்தானத்தின் தங்கையாக வரும் சந்தியா நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது.
அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் பெண் வேடம் போட்டு சந்தானத்தின் வீட்டுக்குள் நுழையும் ஆனந்தராஜ் இருவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும் நரேன் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், நாம் பார்த்திராத பர்பாமன்ஸை கொடுத்து மொத்த திரையரங்கையே சிரிப்பால் அதிர வைத்துவிடுகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், திரைக்கதையை நகர்த்த பயன்பட்டிருக்கிறார்கள்.
மயில்சாமி, சுவாமிநாதன் வரும்போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பு அலை வருகிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் இனிமைக்கு இனிமையும் அதிரடிக்கு அதிரடியும் சேர்க்கிறது.
ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவின் நேர்த்தி அவரது திறமைக்குச் சான்று.
கல்யாண் மற்றும் சந்தானம் கூட்டணியின் இந்த ‘80ஸ் பில்டப்பை’ 2k கிட்ஸ்களும் ரசிக்க முடிவது வெற்றியை உறுதி செய்கிறது..!