தென் கொரியாவில் இருக்கும் ‘ஹோப் ஹார்பர்’ (Hope Harbour) எனும் சிறிய நகரத்தில் கதை நடக்கிறது. முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட அந்த நகரத்தில் ஏதோ ஒரு மிருகம் புகுந்து அங்கு இருக்கும் மக்களை கொன்று குவித்து வருகிறது.
எங்கும் ரத்தமும் குழப்பமும் நிறைந்த சூழலில், காவல் துறைத் தலைவர் பம்-சியோக் (ஹ்வாங் ஜங்-மின்) மற்றும் அவரது குழுவினரான சுங்-கி (ஜோ இன்-சுங்), சுங்-ஏ (ஹோயியோன்) ஆகியோர் அந்த மிருகத்தை எதிர்த்துப் போராடத் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்கிறார்கள்!
கிட்டத்தட்ட பாதிப்படம் முடியும் போதுதான் தெரிகிறது அது மிருகம் அல்ல வேற்று கிரக உயிரினம் என்பது. கொல்வதற்கு மிக கடினமான அந்த உயிரினத்தை ஒரு வழியாக முன் பாதியில் கொன்று முடிக்கிறார்கள்.
அப்படியானால் இரண்டாவது பாதிக்கு என்ன கதை இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? விண்ணில் இருந்து வந்தது ஒரு உயிரினம் அல்ல… நான்கு உயிரினங்கள் என்று பின்னர் தெரிய வருகிறது.
ஒன்றைக் கொன்று முடிப்பதற்கு பல நூறு உயிர்கள் பலியாகி இருக்க மீதி உயிரினங்களை எப்படி கொல்வது என்பதுதான் கதை.
நா ஹாங்-ஜின் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு (sci-fi) குறித்த திரைப்படமாகும்!
இந்த அச்சமூட்டும் கதைக்குள் அதிரடி, நகைச்சுவை, சிலிர்ப்பூட்டும் தருணங்கள், ஆக்சன், சேசிங் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு திரைக்கதை இதில் உள்ளது.
வேற்றுலக உயிரினங்கள் ஏன் பூமியைத் தாக்கின என்பதற்கு காரணமாக பூமியில் வந்திறங்கிய இந்த வேற்றுக்கிரக உயிரினத்தின் தலைமை பொறுப்பில் உள்ள பெண்ணின் குழந்தையை வேட்டைக்காரன் ஒருவன் வேட்டையாடி கொன்று விட அந்த குழந்தையை தேடித்தான் அத்தனை உயிரினங்களும் இந்த ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன.
மைக்கேல் ஃபாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர் மற்றும் டெய்லர் ரஸ்ஸல் ஆகியோர் வேற்றுலக உயிரினங்களாக நடித்துள்ளனர்.
சற்று நீளமான படம் என்றாலும் ஓரிடத்திலும் அலுப்பு தட்டாமல் அத்தனை வேகமாக பயணிக்கிறது திரைக்கதை.
படத்தின் மிகப்பெரிய கிரெடிட் ஒளிப்பதிவாளர் ஹாங் கியுங்-ப்யோவையும்; இசை அமைப்பாளர் மைக்கேல் ஏபெல்ஸை யும்தான் சேரும்.
இதுவரை வந்த வேற்றுக்கிரக உயிரினங்களுக்கும் இவற்றிற்கும் என்ன வித்தியாசம் என்றால் இவற்றுக்குள் ஒரு சென்டிமென்ட்டை வைத்து கதை சொல்லியிருப்பதுதான்.
இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்காவில் வெளியான சர்வதேசத் திரைப்படங்களிலேயே, இந்தப் படம் மிகப்பெரிய தொடக்கத்தைப் (opening) பெற்றுள்ளது.
கடைசிவரையில் மீதி இருக்கும் அந்த மூன்று உயிரினங்களை அழிக்க முடியாத நிலையில் இதன் இரண்டாவது பாகம் விரைவிலேயே வரும் என்பது உறுதியாகிறது.
– வேணுஜி