September 15, 2025
  • September 15, 2025
Breaking News
September 15, 2025

மிராய் திரைப்பட விமர்சனம்

By 0 19 Views

கடந்த படத்தில் அனுமனை நாடியது போல் இந்தப்படத்தில் பகவான் ராமரையே பிடித்து விட்டார் தேஜா சஜ்ஜா.

அதேபோல் முந்தைய அனுமான் படத்தைப் போலவே இதையும் ஒரு Spritual Fantasy ஆகக் கொடுக்க நினைத்திருக்கிறார் அவர். அதைப் புரிந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனியும் பக்காவாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

அந்தக் கதை இதுதான்..!

கலிங்கத்துப் போர் தந்த மாற்றத்துக்குப் பின் பேரரசர் அசோகர் புத்த மதத்தை தழுவிய கதை நமக்கு தெரியும். மனிதனின் மரணம் அவரை பெருமளவு பாதித்துவிட, ஒரு மனிதன் சாகாவரம் பெறும் ரகசியங்களை கண்டறிந்து அவற்றை ஒரே ஒரு புத்தகமாக எழுதாமல் 9 புத்தகமாக எழுதி அவற்றைப் பல இடங்களில் மறைத்து வைக்கிறார்.

நல்ல விஷயங்கள் நல்லவர்கள் கையில் போய் சேர்ந்தால் நல்லது நடக்கும். ஆனால் தீயவர்கள் கையில் போய் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து அவற்றை பாதுகாக்க சில வீரர்களையும் நியமிக்கிறார்.

அதற்குப் பின் இப்போதைய காலக்கட்டத்தில், சமுதாயத்தால் சிறுவயதில் இருந்து பல வகையிலும் பாதிக்கப்பட்ட மனோஜ் மஞ்சு வாலிபன் ஆனதும் இந்த புத்தகங்களை பற்றி அறிந்து அவற்றை அடைய நினைக்கிறார் அதன் பலனாக 8 புத்தகங்களை அடைந்தும்  விடுகிறார்.

இன்னொரு புறம் மனோஜ் போலவே தேஜா சஜ்ஜாவும் அனாதையாக வளர்ந்தவர். மனோஜின் தீய செயலை தடுக்க இவரால் மட்டுமே முடியும் என்று புரிந்து கொள்ளும் நாயகி ரித்திகா நாயக், அதற்கு முதற்கட்டமாக மிராயை அடைய வேண்டும் என்று இவரைத்  தயார்ப் படுத்துகிறார். 

ஆரம்பத்தில் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும் தேஜா சஜ்ஜா ஒரு கட்டத்தில் தேஜாதான் ஸ்ரேயாவின் மகன் என்ற உண்மையைச் சொல்ல, தேஜா ஒத்துக்கொண்டாரா, மிராயை அவர் அடைந்தாரா என்பதெல்லாம் மீதிக் கதை.

தேஜா சஜ்ஜாவின் அப்பாவித்தனம் பிறந்த என் முகம் அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆக்சனிலும் அதிக பகுதியாக அசத்தியிருக்கிறார்.

அவருக்கு ஈடான சக்தி மிக்க வேடத்தை பெற்றிருக்கிறார் வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு. ஹீரோவை விட இவரது பாத்திரம் ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

நாயகியான ரித்திகா நாயக்கின் இளமையும், அழகும் கவர்கின்றன. நல்லது நடக்க வேண்டும் என்று ஹீரோவை மோட்டிவேட் செய்யும் இந்த பாத்திரம் நன்று.

நாயகனின் தாயாக வரும் ஸ்ரேயா சரண் அழுத்தமான பாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார். 

இதற்கெல்லாம் காரண காரியமாக இருக்கும் ஜெயராம் காலங்களை கடந்து வாழ்பவர் என்பது ஆச்சரியம்தான். அவர் ராமபிரானையே நேரில் சந்தித்தவர் என்பது கூடுதல் ஆச்சரியம்.

ஜெகபதி பாபு இல்லாமல் எந்த தெலுங்கு படமும் நிறைவு பெறுவதில்லை. 

கெள்ரா ஹரியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

கார்த்திக் கட்டம்னேனியின் ஒளிப்பதிவு  பிரமிக்க வைக்கிறது. 

மிராக் என்றால் என்ன என்ற உண்மை கடைசி தெரியும்போது பக்திமான்களுக்கு புல்லரிக்கும்.

வழக்கமாக இது போன்ற படங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கும். இது பேண்டஸே கலந்த படம் என்பதால் லாஜிக் மீறல்களுடன் தான் கதையே எழுதப்பட்டிருக்கிறது. 

ஆனாலும் தமிழில் இப்படி ஒரு சூப்பர் ஹியூமன்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது.

மிராய் – மிரட்டல்..!

– வேணுஜி