November 22, 2024
  • November 22, 2024
Breaking News
September 7, 2019

ஜாம்பி திரைப்பட விமர்சனம்

By 0 2283 Views

ஒரு படத்தின் முதல் ஷாட்டே அது எப்படிப்பட்ட படம் என்று சொல்லிவிடும் என்பார்கள். ஆனால், அந்த இலக்கணமெல்லாம் இதுபோன்ற ‘ஜல்லியடித்து ஜாம் தடவும்’ படத்துக்குப் பொருந்தாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம்.

முதல் ஷாட்டில் ஆலைக் கழிவில் சிக்கி சிதைந்து கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் கூட செய்யாமல் சிக்கன் ஃபிரை செய்வதைக் காட்டுகிறார்கள். அந்த ஆலைக்கழிவும், அந்த ஆலையின் ஏரியல் வியூ ஷாட்டும், கோழிக்கறியை எப்படி சுகாதாரமில்லாமல் சமைக்கிறார்கள் என்பதைக் காட்டும் காட்சிகளும் படம் எதையோ பிரமாதமாக சொல்லப்போகிறது என்று நம்ப வைத்து நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பது நிஜம்.

ஆனால், அடுத்து கதையின் நாயகர்களாக வரும் கோபி, சுதாகர், அன்பு மூவரின் அறிமுகக் காட்சிகளிலேயே படத்தின் தரமும், நிறமும் புரிந்து போக நிமிர்ந்து உட்கார்ந்த நாம் சரியத் துவங்க, கடைசி வரை யாராவது தூக்கி விட மாட்டார்களா என்று சரிந்தே கிடக்கிறோம்.

Zombie Movie Review

Zombie Movie Review

தங்கள் குடும்பத்தினரால் ‘டார்ச்சருக்குள்ளான’ மூவரும், அதே போல் மனைவியால் பாதிக்கப்பட்ட டி.எம்.கார்த்திக்கும் சேர்ந்து கவலைகளை மறக்க ஒரு ரெசார்ட்டுக்குச் செல்கிறார்கள். (நம்மை ‘டார்ச்சரு’க்குள்ளாக்கத்தான்…)

போகிற வழியில் பாரில் இவர்கள் சரக்கடிக்க, அங்கே தாதா என்று பேர் பண்ணிக்கொண்டு அலையும் யோகி பாபுவிடம் பிஜிலி ரமேஷ் வம்பிழுக்க, மோதலில் யோகி பாபுவின் செல்போன் பிஜிலி ரமேஷ் வசம் போக, அவரும் மேற்படி நால்வருடன் ஒட்டிக்கொண்டு ரெசார்ட்டுக்குப் போய்த் தங்குகிறார்.

அங்கே மருத்துவக் கல்லூரி மாணவியான யாஷிகாவும் சக மாணவிகளும் தங்கியிருக்க, அங்கே பரிமாறப்படும் மேற்படி கோழிக்கறி சாப்பிட்ட (!) மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக ‘ஜாம்பி’களாக மாறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக கடித்து மற்றவர்களையும் ‘ஜாம்பி’களாக மாற்ற, மேற்படி நண்பர்கள் மற்றும் யாஷிகா அன் கோ என்னவானார்கள் என்பது ‘காதில் கதம்பம் சுற்றிய’ கதை.

அந்த ரெசார்ட்டுக்கு தன் போனைத் தேடிக்கொண்டு யோகிபாபுவும், அவரது அல்லக்கைகளும் மட்டுமல்லாமல் யோகிபாபுவை போட்டுத்தள்ள பட ஆரம்பத்திலிருந்தே துடிக்கும் (எதுக்குத் துடிக்கிறாரோ..?) இன்ஸ்பெக்டர் ஜான்விஜய்யும் வந்து சேர… ஒரே கர்ண கொடூரம்.

ஒரே இடத்தில் பாத்திரங்களை நிற்க வைத்து, நிற்க வைத்து வசனம் பேச வைத்திருக்கிறார்கள். காமெடி என்று அபத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீயும், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனும் வேறு வழியில்லாமல் கிடைத்த கேப்பை எல்லாம் ‘பில் அப்’ பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கங்கே யோகிபாபு சிரிக்க வைப்பதும், யாஷிகாவின் கவர்ச்சியும் மட்டுமே போதுமென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குநர் புவன் நல்லான் ஆர்.

கோலிவுட்டில் நிறைய கற்பனை வளங்களுடன் காமெடி எழுத பலர் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து எழுத விட்டாலே இதுபோன்ற காமெடிப் பஞ்சங்களைத் தவிர்க்கலாம்.

படத்தில் 60 காட்சிகள் என்றால் 6 காட்சிகளே பத்து தடவை திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கின்றன.

உலகில் ‘ஜாம்பி’ படங்கள் நிறைய வந்து விட்டன. ஆனால், கோழிக்கறி சாப்பிட்டால் ‘ஜாம்பி’யாவார்கள் என்று சொன்ன உலகின் முதல் படம் இது.

ஜாம்பி -மரணக்கடி..!