தலைப்புக்கு ஏற்றாற்போல் இளமை கொப்பளிக்கும்… இளைஞர்களுக்கான கதை.
இப்படி ஒரு படத்தைத் திறம்பட இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் கென் கருணாஸ்.
பள்ளியில் பத்தாவது தொடங்கி பன்னிரெண்டாவது வகுப்பு முடியும் வரையில் நடக்கும் கதை.
சினிமா வழக்கப்படியே கல்வியில் கவனம் செலுத்தாமல் மற்ற எல்லா ரவுசுகளிலும் கவனம் செலுத்துபவராக வருகிறார் கென். கூடவே தன்னை யாரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை வேறு அவருக்கு இருக்கிறது.
இந்நிலையில் அவரைப் போலவே வகுப்பில் ஏதாவது அடாவடி செய்து வகுப்புக்கு வெளியே நிற்கும் பெண்ணாக பக்கத்து வகுப்பில் பயிலும் மீனாட்சி தினேஷ் நட்பாக அறிமுகமாக, பின்னர் காதலியாகிறார்.
ஒரு கட்டத்தில் அவரைப் பிரிய நேரும் சின்ன கேப்பில் அவரைவிட அசத்தலான பிரியான்ஷி யாதவ் காதல் கிடைக்க, அதைத் தொடர்கிறார். இதனால் மீனாட்சியின் கோபத்துக்கு ஆளானதுடன் பிரியான்ஷி யாதவ்வின் காதலும் பொய்யானது என்றறிந்து மனம் வெதும்பும் வேளையில் அவரது வகுப்பிலேயே பயிலும் அனிஷ்மா அனில் குமாருடன் நெருக்கம் ஏற்படுகிறது.
அந்தக் காதலாவது கடைசி வரை வந்ததா என்பதுதான் சஸ்பென்ஸ்.
முழு கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே இயக்குனராகவும் அறிமுகமாகிவிட்ட கென்னின் மன தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இந்த இரட்டை குதிரை சவாரியை திறம்பட அவர் மேற்கொண்டு இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
அவரது தலைமுறைக்கு தக்கவாறு தனுஷ், சிம்பு இருவரையும் தன் ஆதர்ச நாயகர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியிலேயே பயணப்பட்டு இருப்பது புத்திசாலித்தனமான நகர்த்தல். அத்துடன் முதல் படத்திலேயே மூன்று நாயகியரின் மனம் கவர்ந்த கள்வனாக வருவதும் அவருக்கு பிளஸ்தான்.
இப்படி ஒரு கிளாமரான கதையை பின்னி கடைசியில் ஒரு பன்ச் வைத்து இதை பெற்றோர்களுக்கான படமாகவும் ஆக்கி இருப்பது ஆகச்சிறப்பு.
நாயகியர் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் மூன்று பேரும் ஒவ்வொரு விதமாக கலக்குகிறார்கள். ஒன் பை த்ரீ என்று மூவருக்கும் சம பங்கு பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் அனிஷ்மாவிடம் முடிவது அவருக்குரிய தகுதியைச் சொல்கிறது.
உருப்படாத நாயகர்களின் அப்பாவாக வருபவர்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் இதில் கென்னின் தந்தையாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமூடு சிறப்பான தேர்வு. மகனின் தாழ்வு மனப்பான்மை அவரிடமிருந்துதான் வந்தது என்பதை தனது பாத்திரத்தின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கென்னின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு வழக்கம்போல மகன் மேல் பாசத்தைப் பொழியும் பாத்திரம். காதல் திருமணம் புரிந்து கொண்டு கணவரின் தகுதிக் குறைவால் உறவினர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வெதும்புவதில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
கென்னின் நண்பர்களாக நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதிகிறார்கள். நண்பனின் காதலைப் பார்த்து முதலில் காண்டாவது… பின்னர் உதவி புரிவது என்று வழக்கமான ஃபார்மேட்டிலேயே கலக்கி இருக்கிறார்கள்.
இளமைத்துள்ளும் இந்தப் படத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்தி யூத் ஃபுல்லான அனுபவத்தை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி.
படத்தில் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு நாயகனாகி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரது அனுபவம் இந்த படத்துக்கு இசை எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வைத்திருக்கிறது.
நாஷின் படத்தொகுப்பும் ‘நச்..!’
கதை இத்தனை இளமை ததும்பலாக இருந்தாலும் அதை எந்த இடத்திலும் முகம் சுளிக்கும் வைக்கும் அளவுக்கு போய்விடாமல் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசிக்க வைக்கும் காதல் படமாக கொடுத்திருப்பதில் கென்னின் திறமை மிளிர்கிறது.
இத்தனை சிறிய வயதில் தானே இயக்கி, தானே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதில் கென் தனித்து நின்று, வென்று இருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு சிம்பு படத்தையும் தனுஷ் படத்தையும் ஒரு சேர பார்த்த அனுபவத்தை இந்தப் படம் நமக்குத் தருகிறது.
யூத் – ஜீரோ டூ ஹீரோ..!
– வேணுஜி